மொபைல்களில் FM Radio ஏன் இல்லை? கேள்வி எழுப்பிய IT அமைச்சகம்
இன்டர்நெட் இல்லாத நேரத்திலும் நாட்டு நடப்புகளை தெரிந்துக்கொள்ள பயன்படும், முக்கியத்துவம் வாய்ந்த எப்ஃஎம் ரேடியோக்கள் (FM Radio) இப்போது வரக்கூடிய ஸ்மார்ட்போன்களில் ஏன் இருப்பதில்லை என்று உங்களுக்கு கேள்வி எழுந்திருக்கிறதா? இதே கேள்வியை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களிடம் எழுப்பியிருக்கிறது.
இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் உலகமே அடங்கிவிடுகிறது. ஒரு ஸ்மார்ட்போனை வைத்தே வீட்டு பில்களை கட்டுவது முதல் வங்கி சேவைகளை பெறுவது வரை அனைத்தையும் செய்துவிட முடிகிறது. இருப்பினும், நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்களில் புதிதாக ஏதாவதொரு அம்சங்களை அதன் தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

இப்படிப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஏன் எப்ஃஎம் ரேடியோக்கள் வருவதில்லை என்று யோசித்திருக்கிறீர்களா?. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் எப்ஃஎம் ரேடியோக்கள் இருந்தன. இப்போது படிப்படியாக குறைந்துவிட்டன.
ஸ்மார்ட்போன்களில் எப்ஃஎம் ரேடியோக்கள் இல்லையென்றாலும், இன்டர்நெட் மூலம் அதை கேட்க முடியுமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஸ்மார்ட்போன் நிறுவனங்களே எப்ஃஎம் ரேடியோ வசதியை கொடுத்தால், இன்டர்நெட் இல்லாத நேரத்திலும், அதை கேட்க முடியும். இப்போது புரிகிறதா அதன் தேவை.
90-களில் பிறந்த இளைஞர்களுக்கு எப்ஃஎம் ரேடியோக்கள் பற்றி தெரிந்திருக்கும். பலர் கிரிக்கெட் மேட்ச்களை கூட எப்ஃஎம் ரேடியோக்களில் கேட்டிருப்பீர்கள். இப்போது அவர்களும் அதை பயன்படுத்துவதில்லை. தொழில்நுட்பம் பற்றி அறியாதவர்களும், இன்டர்நெட் வசதி கிடைக்காத பகுதியில் வசிப்பர்களும் மட்டுமே எப்ஃப் ரோடியோக்களை இன்னும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் தேவையை உணர்ந்து மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology) இந்திய மின் மற்றும் மின்னணுவியல் சங்கம், தகவல் தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
அதோடு சில அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறது. அதில், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது போன்களில் இன்பில்ட் எஃப்எம் ரேடியோ ரிசீவர் (Inbuilt FM Radio Receiver) வசதியை வழங்க வேண்டும். அதனை இந்திய மின் மற்றும் மின்னணுவியல் சங்கம், தகவல் தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் சங்கம் இரண்டும் உறுதி செய்ய வேண்டும்.
இதன் மூலம் நாட்டு மக்கள் செய்தி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தடையில்லாமல் பெறமுடியும். குறிப்பாக, கிராமப்புறங்கள் மற்றும் இன்டர்நெட் வசதி கிடைக்காத தொலைதூரப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களும் எஃப்எம் ரேடியோ மூலம் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள முடியும். முக்கியமாக அசாதாரணமான சூழலில், இன்டர்நெட் இல்லையென்றாலும், மக்களை அரசாங்கத்தால் தொடர்பு கொள்ள முடியும் என்று தெரிவித்திருக்கிறது.
மத்திய அரசு சார்பில் அகில இந்திய வானொலி (All India Radio) சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பொழுதுபோக்கு முதல் நாட்டு நடப்பு வரை செய்திகள் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு எப்ஃஎம் ரேடியோ பெட்டிகள் இருக்கும். ஸ்மார்ட்போன் வருகைக்குப்பின் அவை குறைந்துவிட்டன. இப்போது ஸ்மார்ட்போன்களிலும் எப்ஃஎம் ரேடியோ இல்லாது மத்திய அரசை கேள்வி எழுப்ப தூண்டியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








