சிறந்த இணைய வேகம் வழங்கும் நிறுவனம் எது: ஜியோ Vs வோடபோன்ஐடியா Vs ஏர்டெல்!
உலகளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகள் வழங்கி வருகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் இணைய தேவை என்பது பிரதானமாக இருக்கிறது. குறிப்பாக கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் ஆன்லைன் வகுப்பு, வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் கருத்தரங்கம் என பல தேவைக்கும் இணைய சேவை பிரதானம்.

ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல், பிஎஸ்என்எல்
இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பிரதானமாக இருப்பது ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல், பிஎஸ்என்எல் உள்ளிட்டவைகள் ஆகும். ஒவ்வொரு நிறுவனங்களும் வழங்கும் திட்டங்களின் விலை மாறுபாட்டைவிட இணைய வேகத்தில் அதிக மாறுபாடு உள்ளது என்றே கூறலாம்.

அதிகரிக்கும் பதிவிறக்க வேகம்
இதுகுறித்து கடந்த அக்டோபர் மாத கடைசியில் ஓக்லா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் இணைய வேகம் மாறுபடுகிறது. நாட்டின் மொபைல் நெட்வொர்க்குகளின் சராசரி பதிவிறக்க வேகம் ஆண்டுக்கு ஆண்டு 11.6 சதவீதம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

ஓக்லா வெளியிட்டுள்ள அறிக்கை
மேலும் ஓக்லா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மூன்றாம் காலாண்டின் கணக்கீட்டில் Vi 13.74Mbps பதிவிறக்க வேகத்தையும் 6.19Mbps பதிவேற்ற வேகத்தையும் கொண்டுள்ளது. ஏர்டெல் 13.58Mbps பதிவிறக்க வேகத்தையும் 4.15Mbps பதிவேற்ற வேகத்தையும் கொண்டுள்ளது. ஜியோ 9.71Mbps பதிவிறக்க வேகத்தையும் 3.41Mbps பதிவேற்ற வேகத்தையும் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அதிக இடத்தில் ஜியோ இணைய சேவை
நாட்டில் வேகமாக 4ஜி தரவு வழங்கும் இடத்தில் விஐ இருந்தாலும் நாட்டின் பெரும்பாலான இடங்களில் 4ஜி சேவை கிடைக்கும் நெட்வொர்க் பட்டியலில் ஜியோ முதலிடத்தில் இருக்கிறது. 2020 மூன்றாம் காலாண்டின் பட்டியலில் இந்தியாவின் சிறந்த 4ஜி சேவை வழங்குனர்களில் ஜியோ 99.7 சதவீதமாக முதலிடத்தில் இருக்கிறது. ஏர்டெல் ஜியோவுடன் மிக நெருக்கமாக 98.7 சதவீதத்தை கொண்டிருக்கிறது. இதில் விஐ 91.1 சதவீதம் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் இணைய வளர்ச்சியில் ஜியோ பங்கு பிரதானமானவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிராய் வெளியிட்டுள்ள அறிக்கை
அதேபோல் தற்போது டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நவம்பர் மாதத்தில் ஜியோ சராசரி 4ஜி பதிவிறக்க வேகம் அதன் போட்டி நிறுவனங்களின் வேகத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

4ஜி பதிவிறக்க வேக பட்டியலில் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் 4ஜி பதிவிறக்க வேக பட்டியலில் வினாடிக்கு 20.8 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தை பதிவு செய்துள்ளது. இது ஜியோவின் அடுத்த இடத்தில் இருக்கும் வோடபோனின் 4ஜி வேகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள்
வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் முறையே ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தாலும். டிராய் இரண்டு நிறுவனங்களில் இணைய வேகத்தை தனித்தனியே வெளியிடுகிறது. அதன்படி வோடபோன் நவம்பர் மாதத்தில் பதிவிறக்க வேகம் சராசரியாக 9.8 எம்பிபிஎஸ் எனவும் ஐடியா 8.8 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும் மற்றும் பாரதி ஏர்டெல் முறையே 8 எம்பிபிஎஸ் வேகத்தையும் பதிவு செய்துள்ளது.

மைஸ்பீட் போர்ட்டல் வெளியிட்டுள்ள அறிக்கை
டிராய் தனது மைஸ்பீட் போர்ட்டலில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒடிசாவில் ஜியோ 4ஜி இணைய வேகத்தில் சராசரியாக 31.7 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது. பாரதி ஏர்டெல், வோடபோன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

பதிவேற்ற வேகத்தில் விஐ
அதேபோல் ஒடிசாவில் சராசரி 4 ஜி பதிவேற்ற வேகத்தைப் பொறுத்தவரை வோடபோன் 6.3 எம்.பி.பி.எஸ் உடன் முதலிடத்திலும் அடுத்தடுத்த இடங்களில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் இருப்பதாக டிராய் தெரிவித்துள்ளது.

ஜியோ குறைந்த விலையில் திட்டங்கள்
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைய வேகம் மாறுபட்டாலும் பிற நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் ஜியோ குறைந்த விலையில் திட்டங்களை வழங்கு வருகிறது. அதேபோல் பல தரவுகளிலும் ஜியோ பெரும்பாலாக முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.


Click it and Unblock the Notifications