வாகன ஓட்டுனர்களின் கவனத்திற்கு! இலவச ஃபாஸ்டேக் வாங்க இறுதி தினம்!
கடந்த டிசம்பர் மாதம் இந்தியா முழுவதும் Radio Frequency Identification (RFID) சார்ந்த 'ஃபாஸ்டேக்' என்ற மின்னணு கட்டண வசூல் திட்டத்தைச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நடைமுறைப்படுத்தியது. இதன் அறிமுக சலுகையாக இலவச ஃபாஸ்ட்டேக்குகளை அரசாங்கம் வழங்கிவந்தது. இதுவரை இலவச ஃபாஸ்ட்டேக் பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளுங்கள், ஏனென்றால் இன்றே இறுதி தினம்.

பிரத்தியேக தனி வழி டோல் கேட்டு
இந்த மின்னணு கட்டண வசூல் முறை நாடுமுழுவதும் செயல்படுத்தப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. நாடுமுழுவதும் உள்ள அனைத்து டோல் பிளாசாக்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டண முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட்டேக் பயனர்களுக்கென்று பிரத்தியேக தனி வழியும் டோல் கேட்டுகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட்டேக் பயனர்கள் நெரிசல் இல்லாமல் இந்த வழியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இரட்டை கட்டண அபராதம்
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவின்படி ஃபாஸ்டேக் இல்லாமல் ஃபாஸ்டேக் பாதைகளில் நுழையும் வாகனங்களிடமிருந்து இரட்டை கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்பே கூறியிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களில் இதற்கான அபராதமும் நாடுமுழுவதும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஃபாஸ்டேக் கட்டாயம்
தற்போதுள்ள ஃபாஸ்டேக் பயனர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகவும், தவறிழைப்பவர்களைத் தடுப்பதற்காகவும், தேசிய நெடுஞ்சாலை பயணிகளிடம் ஃபாஸ்டேக் பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த ஃபாஸ்டேக் அபராதத்தை அமல்படுத்தியது என்று தெரிவித்திருந்தது.

சுமார் 20 கோடி ரூபாய் வரை வசூல்
இதனைத் தொடர்ந்து, ஃபாஸ்டேக் பாதையில் நுழையும் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களிடம் இருந்து இரட்டை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இப்போது வரை, இந்தியா முழுவதும் மொத்தம் 18 லட்சம் வாகன ஓட்டுநர்களிடமிருந்து இரட்டை கட்டண அபராதம் விதிக்கப்பட்டு, சுமார் 20 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 மில்லியன் ஃபாஸ்டேக் பயனர்கள்
அதேபோல், பல பாயிண்ட் ஆன் சேல் (Point of Sale) விற்பனை இடங்கள் மூலம் சுமார் 1.55 கோடிக்கு மேற்பட்ட ஃபாஸ்டேக்குகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும், இதன் விளைவாக, ஃபாஸ்டாக் பரிவர்த்தனை ஒரு நாளைக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது என்றும் அதன் அறிக்கையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.

இலவசமாக FASTag உடனே வாங்குங்கள்
இந்த டிஜிட்டல் அமைப்பு நாடு முழுவதும் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான தெளிவான அறிகுறியாக, ஃபாஸ்டேக்கின் விற்பனை இருக்கிறது என்று NHAI தெரிவித்துள்ளது. எந்தவொரு சாலை பயனர்களும் வாகனத்தின் செல்லுபடியாகும் பதிவுச் சான்றிதழ் (ஆர்.சி) உடன் அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலிருந்து இலவசமாக FASTag-ஐ இன்று மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். இதற்குப் பின் இலவசமாக FASTag கிடைக்காது.

இன்றே இறுதி தினம்
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சமீபத்தில் பாஸ்ட்டேக் மீதான கட்டணத்தில் ரூ.100 கட்டணத்தைப் பிப்ரவரி 15, 2020 முதல் பிப்ரவரி 29, 2020 வரை தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையுடன் இலவச ஃபாஸ்ட்டேக் அட்டையைப் பெற இன்றே இறுதி தினம், ஆகையால், உடனே உங்கள் அருகில் உள்ள ஃபாஸ்ட்டேக் மையத்திற்குச் சென்று உங்கள் இலவச பாஸ்ட்டேக் அட்டையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications