வண்டியில் FASTag யூஸ் பண்றீங்களா? மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.. அமலுக்கு வரும் புதிய விதிகள்.. இதோ விவரம்!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ம் தேதி சுங்கச்சாவடி கட்டணங்களில் மாற்றம் செய்து உயர்த்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய கட்டண உயர்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய சில மாற்றங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்
அதாவது அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் கார் மற்றும் இலகுரக வாகன உரிமையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஃபாஸ்டாக் ஆண்டு சந்தா விலை உயர உள்ளது. அதாவது பழைய கட்டணம் ரூ.3000-ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.3075 புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஃபாஸ்டாக் கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வர உள்ளது. இந்த ரூ.3075 கட்டணத்தைச் செலுத்தினால் ஓராண்டு காலத்திற்குள் அல்லது 200 முறை சுங்கச்சாவடிகளைக் கடக்கலாம். அதுவும் இது வணிக ரீதி அல்லாத சொந்த உபயோக வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அதுவும் ஆண்டு சந்தா மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் பயண கட்டணமும் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 77 சுங்கச்சாவடிகளில் 60 முதல் 66 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக மொத்த விற்பனை விலை குறியீட்டின் (WPI) அடிப்படையில் ஐந்து சதவீதம் முதல் ஏழு சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கட்டண உயர்வுக்கு காரணம் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் பண வீக்கத்திற்கு ஏற்ப சுங்க கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் மேம்படுத்துவதற்கான நிதி தேவை, கட்டுமான விலைகளின் உயர்வு மற்றும் இதர செலவுகள் தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் ஆகும். குறிப்பாக ஆண்டுதோறும் ஏப்ரல் ஒன்றாம் தேதி மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில் இந்த உயர்வு கணக்கிடப்படுகிறது.
மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க
எனவே நீங்கள் ஏற்கனவே ஆண்டு சந்தா வைத்திருப்பவர் என்றால் மார்ச் 31-ம் தேதிக்குள் புதுப்பிப்பதன் மூலம் பழைய விலையிலேயே (ரூ.3,000) பலன்களைப் பெறலாம். இதுதவிர உங்களது FASTag கணக்கில் KYC விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கட்டண உயர்வு அமலுக்கு வரும்போது போதிய பேலன்ஸ் இல்லாமல் இருந்து சுங்கச்சாவடியைக் கடந்தால் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் மூலம் FASTag
NHAI வலைத்தளத்தைப் பயன்படுத்தி FASTag வருடாந்திர பாஸை வாங்க முடியும். அதாவது அதிகாரப்பூர்வ NHAI வலைத்தளத்திற்குச் சென்று பதிவு செய்யப்பட்ட விபரங்களுடன் லாகின் செய்யவும். அடுத்து வருடாந்திர பாஸ் செக்ஷனை கண்டறியவும். அதில் வாகனம் மற்றும் FASTag விவரங்களை உள்ளிட்டுப் பணம் செலுத்த வேண்டும். நீங்கள் பணம் செலுத்திய பிறகு வாகனத்துடன் தொடர்புடைய FASTag-ல் வருடாந்திர பாஸ் ஆக்டிவாகி இருக்கும்.
மேலும் ராஜ்மார்க் யாத்ரா ஆப் மூலம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி லாகின் செய்து, வருடாந்திர பாஸ் செக்ஷனை தேர்ந்தெடுத்து பணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








