அங்க தொட்டு., இங்க தொட்டு இவருக்கவே: மக்களவை சபாநாயர் பேரில் போலி வாட்ஸ்அப் கணக்கு- எம்பி-க்களுக்கு மெசேஜ்!
மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லாவின் போலி வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கிய சைபர் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக 3 பேரை ஒடிசா போலீஸார் கைது செய்துள்ளனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதாவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது அலுவலகம் புதன்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சில மர்ம நபர்கள் எனது புகைப்படத்துடன் கூடிய போலி வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி 7862092008, 9480918183, 9439073870 ஆகிய எண்களில் இருந்து எம்.பி-க்கள் மற்றும் பிறருக்கு மெசேஜ்கள் அனுப்புகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் தகவல்களை புறக்கணித்துவிட்டு இதுகுறித்து எனது அலுவலகத்திற்கு தெரிவிக்கவும் என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று பேரை கைது செய்து ஒடிசா மாநில காவல்துறை
மக்களவை சபாநாயகரின் போலியான வாட்ஸ்அப் அடையாளத்தை உருவாக்கி சைபர் குற்றவாளிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று பேரை ஒடிசா மாநில காவல்துறை கைது செய்துள்ளது. மூன்று பேரும் முன்னதாகவே செயல்படுத்தப்பட்ட சிம் கார்ட்களை ஒரு கும்பலுக்கு விற்றிருக்கின்றனர். இதில் ஒரு கணக்கு பொது தளத்தில் கிடைக்கும் பிர்லாவின் படத்தை பயன்படுத்தி போலியான வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி பயன்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று கடந்தமாதம் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு போன்று ஆள்மாறாட்டம் செய்து சில விஐபி-க்கள் உள்ளிட்ட பலரிடம் நிதியுதவி கேட்டு மெசேஜ் அனுப்பப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வெங்கையா நாயுடு அலுவலகத்தில் இருந்து உள்துறை அமைச்சகத்துக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டிருந்தது.

மாதாந்திர இணக்க அறிக்கை
வாட்ஸ்அப் நிறுவனம் உலகின் மிகவும் பிரபலமான உடனடி செய்தி பகிர்வு தளமாக இருக்கிறது. இந்த தளத்தை தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நிறுவனம் பல அம்சங்களையும் தரங்களையும் கொண்டிருக்கிறது. அரசும் தொடர்ந்து இதற்கான நிபந்தனைகளை உறுதி செய்து வருகிறது. அதில் ஒன்று மாதாந்திர இணக்க அறிக்கை ஆகும். இணைக்க அறிக்கையில் பல்வேறு வாட்ஸ்அப் கணக்குகள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புகார்கள் குறித்து தெரிவிக்கப்படுகின்றன.

குற்றச் செயல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை
வாட்ஸ்அப் நிறுவனமும் இதுபோன்ற குற்றச் செயல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-க்கு இணங்க மார்ச் 1 முதல் மார்ச் 31-க்கான தேதியில் வாட்ஸ்அப்-ன் நடவடிக்கை குறித்து நிறுவனம் மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 18 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது. அதேபோல் பிப்ரவரி மாதம் வாட்ஸ்அப் சுமார் 10 லட்சம் கணக்குகளை தடை செய்தது.

பயனர் பாதுகாப்பு அறிக்கை மற்றும் பயனர்களிடம் பெறப்பட்ட புகார்கள்
தொழில்நுட்ப விதிகள் 2021-ன் படி, மார்ச் 2022-க்கான அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. பயனர் பாதுகாப்பு அறிக்கையில், பயனர்களிடம் பெறப்பட்ட புகார்கள், வாட்ஸ்அப் எடுத்த நடவடிக்கை மற்றும் வாட்ஸ்அப் சொந்த தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை தொகுக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் தளத்தின் முறைகேடுகளை எதிர்த்து போராடுவோம், சமீபத்திய மாதாந்திர அறிக்கைப்படி, வாட்ஸ்அப் மார்ச் மாதத்தில் மட்டும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்தது என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இவை மோசமான கணக்குகள் என குறிப்பிடப்படுகிறது, போலியான தகவல்களை பரப்புதல், பயனர்களை ஏமாற்றுதல் உள்ள பல தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தளத்தில் தவறான தகவல் மற்றம் போலி செய்திகள் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பயனர்கள் குறைகளை நேரடியாக அறிவிக்க வாட்ஸ்அப் அனுமதி
பயனர்கள் குறைகளை நேரடியாக அறிவிக்க வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. பயனர்கள் புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் மின்னஞ்சல் ஐடியை அறிவித்துள்ளது. அது [email protected] என்ற மின்னஞ்சல் ஐடி ஆகும். இந்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதேபோல் இந்திய குறைதீர்க்கும் அதிகாரிகளுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பலாம். துஷ்பிரயோகம் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை நிறுத்துவதற்கு வாட்ஸஅப் அதன் சொந்த கருவிகளை கொண்டு கண்காணித்து வருகிறது.


Click it and Unblock the Notifications