அவ்வளவுதான் நம்மள முடிச்சுட்டாங்க போங்க.. Vodafone சிம் யூசர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் TRAI அறிக்கை!
டிராய் (TRAI) என்கிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் படியான ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
கடந்த டிசம்பர் 31, 2025 அன்று வெளியிடப்பட்ட டிராய்-ன் தொலைத்தொடர்பு சந்தா தரவுகளின் படி, இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களான பாரதி ஏர்டெல் (Airtel), பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Jio) ஆகியஅனைத்துமே நவம்பர் 2025 இல் வயர்லெஸ் சந்தாதாரர்களை சேர்ந்துள்ளன.

ஆனால் வோடபோன் ஐடியா (Vi) நிறுவனமானது குறிப்பிட்ட மாதத்தில் வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளது. அதுவும் 1000, 2000 சந்தாதாரர்களை அல்ல, மொத்தமாக 1,011,134 சந்தாதாரர்களை (10 லட்சம் சந்தாதாரர்களை) இழந்துள்ளது. இந்த புள்ளிவிவரம் ஆனது வோடாபோன் ஐடியா சிம் கார்டுகளை இன்னமும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலைகளையும், குழப்பங்களையும் எழுப்பி உள்ளது.
இருப்பினும் அக்டோபர் 2025 இறுதியில் 1184.62 மில்லியனாக இருந்த மொத்த வயர்லெஸ் (மொபைல் மற்றும் பிக்ஸடு வயர்லெஸ் அணுகல்) சந்தாதாரர்களின் எண்ணிக்கை நவம்பர் 2025 இறுதியில் 1187.48 மில்லியனாக அதிகரித்துள்ளது, இதன் மூலம் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.24 சதவீதமாக உள்ளது.
அதேபோல், வயர்லெஸ் (மொபைல்) சந்தாதாரர்களின் எண்ணிக்கை அக்டோபர் 2025 இறுதியில் 1171.87 மில்லியனில் இருந்து நவம்பர் 2025 இறுதியில் 1173.88 மில்லியனாக அதிகரித்துள்ளது, இதன் மூலம் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.17 சதவீதமாக உள்ளது. மேலும் அக்டோபர் 2025 இறுதியில் 9.91 மில்லியனாக இருந்த மொத்த வயர்லெஸ் (5G FWA) சந்தாதாரர்கள், நவம்பர் 2025 இறுதியில் 10.41 மில்லியனாகவும் அதிகரித்துள்ளனர்.
அதாவது பாரதி ஏர்டெல் 1,215,405 (1.22 மில்லியன்) வயர்லெஸ் சந்தாதாரர்களையும், பிஎஸ்என்எல் 421,514 (0.42 மில்லியன்) சந்தாதாரர்களையும், ரிலையன்ஸ் ஜியோ 1,388,929 (1.39 மில்லியன்) சந்தாதாரர்களையும் சேர்த்துள்ளன. இதற்கிடையில், முன்னரே குறிப்பிட்டபடி வோடபோன் ஐடியா நிறுவனமானது இந்த மாதத்தில் 1,011,134 (1.01 மில்லியன்) வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளது.
2026 இல் அமலுக்கு வரும் சிஎன்ஏபி செயல்முறை: வாடிக்கையாளர்கள் சேர்க்கை மற்றும் வெளியேற்றம் ஒருபக்கம் இருக்க, 2026 ஆம் ஆண்டில் சிம் கார்டு தொடர்பான சிஎன்ஏபி செயல்முறை அமலுக்கு வரவுள்ளது. இந்த செயல்முறையை - தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆன ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா மட்டுமின்றி, அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனமும் கூட பின்பற்றவுள்ளது.
சிஎன்ஏபி (CNAP) என்றால் என்ன? சிஎன்ஏபி என்றால் காலர் நேம் பிரசன்டேஷன் (Caller Name Presentation) என்பதின் சுருக்கம் ஆகும். இது - நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஸ்பேம் கால்கள், ஃபிஷிங் கால்கள் மற்றும் ஆள்மாறாட்ட அழைப்புகள் போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்யப்போகும் ஒரு செயல்முறை ஆகும்.
பெயர் குறிப்பிடுவது போலவே சிஎன்ஏபி என்பது - உங்களுக்கு தெரியாத மொபைல் நம்பரில் இருந்து ஒரு அழைப்பு வரும் போது, அந்த அழைப்பாளரின் சரிபார்க்கப்பட்ட பெயரையும் (Verified name), அவருடைய மொபைல் நம்பரையும் உங்களுக்கு காண்பிக்கும் ஒரு நெட்வொர்க்-நிலை அம்சம் (Network-level feature) ஆகும்.
2026 இல் முழுமையாக அமல்: கடந்த அக்டோபர் 2025 இல், டிராய் (TRAI) என்கிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (Telecom Regulatory Authority of India) அங்கீகரிக்கப்பட்ட சிஎன்ஏபி இப்போது படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் (ஜியோ முதல் பிஎஸ்என்எல்) சிஎன்ஏபி அம்சத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இது 2026 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பெரும்பாலான பயனர்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








