PF திட்டத்தில் புதிய மாற்றம்.. ஊழியர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.. இதோ முழு விவரம்..
வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தொடர்ந்து பல்வேறு புதிய மாற்றங்களைச் செய்து வருகிறது. அதுவும் இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் பிஎஃப் தொடர்பாக ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அடிப்படை ஊதிய வரம்பை மாதம் ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000-ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதுவும் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

தற்போதைய நடைமுறையின் கீழ், அடிப்படை சம்பளம் மாதம் ரூ.15,000 வரை பெறும் ஊழியர்கள் கட்டாயமாக பிஃஎப் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். ஆனால் இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள புதிய மாற்றத்தின்படி, இந்த வரம்பு ரூ.25,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.25,000-க்கு குறைவாக இருந்தால், வேலை கொடுக்கும் நிறுவனம் கட்டாயம் அவருக்கு பிஎஃப் கணக்கை தொடங்கி, தனது கைக்காசையும் அதில் போட்டே ஆக வேண்டும்.
இதற்கு முன்பு கட்டாய பிஎஃப். வரம்பு ரூ.15,000 ஆக இருந்த நிலையில், தற்போது அது ரூ.25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால்,ரூ.25000 வரை அடிப்படை ஊதியம் பெறும் தனியார் மற்றும் அமைப்புசார் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பிஎஃப் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளனர். இந்த மாற்றத்தின் மூலம், இதுவரை கட்டாய பிஎஃப். வரம்புக்கு வெளியே இருந்த கூடுதல் ஊழியர்களும் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள்.
இந்த ஊதிய வரம்பு உயர்வின் மூலம், நாடு முழுவதும் சுமார் 51 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பிஎஃப்-ன் சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்புத் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், ஊழியர்களின் ஓய்வுக்கால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த வகையில். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிஎஃப் ஊதிய வரம்பு உயர்வு, நடுத்தர வருவாய் பெறும் ஊழியர்களுக்கு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம், அவர்களுக்கு பிஎஃப் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரித்து, ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பில் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.

பிஎஃப் திட்டத்திற்கான அடிப்படை ஊதிய வரம்பு கடைசியாக 2014-ஆம் ஆண்டில் ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் சுமார் 12 ஆண்டுகளாக இந்த வரம்பில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், தற்போதைய பணவீக்க நிலை, தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு மற்றும் முறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவது போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு, பிஎஃப் ஊதிய வரம்பை ரூ.25,000 ஆக உயர்த்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் முன்மொழிந்திருந்தது.
அதேபோல் பிஎஃப் வரம்பிற்குள் வரும் ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் இருந்து 12 சதவீதம் தொகையானது வருங்கால வைப்பு நிதிக்காகப் பிடித்தம் செய்யப்படும். இதனால் ஊழியர்கள் மாதம் கையில் வாங்கும் நிகர ஊதியம் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. ஆனாலும் அதே அளவிலான தொகையை நிறுவனமும் ஊழியரின் பிஎஃப் கணக்கில் செலுத்தும் என்பதால் இது அவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications
