PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்.. வருகிறது புதிய E-PRAAPTI வெப்சைட்.. எதற்கு தெரியுமா? இதோ முழு விவரம்..
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு புதிய வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அந்தவகையில் EPFO அமைப்பு 'இ-ப்ராப்தி' (E-PRAAPTI) என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது EPFO அமைப்பு விரைவில் இ-ப்ராப்தி' (E-PRAAPTI) என்ற வலைத்தளத்தை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இதன் மூலம் உறுப்பினர்கள் தங்களின் பழைய மற்றும் செயலற்ற பிஎஃப் கணக்குகளை கண்காணிக்கவும், மீண்டும் செயல்படுத்தவும் முடியும். மேலும் இந்த வலைத்தளம் மூலம் பழைய பிஎஃப் கணக்குகளில் தேங்கி கிடக்கும் பணத்தைப் பயனர்கள் பெறமுடியும். அதுவும் இந்த தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு பல நிறுவனங்களில் வேலை மாறி யு.ஏ.என் (UAN) எண் இல்லாமல் போன பிஎஃப் கணக்குகளை இந்த தளம் வாயிலாகக் கண்டறியலாம். குறிப்பாக ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு சரிபார்த்து, பழைய கணக்கை பயனர்கள் தற்போதைய யு.ஏ.என் எண்ணுடன் இணைக்க முடியும். பழைய பிஎஃப் கணக்குகளின் விடுபட்ட தகவல்களைச் சரிசெய்து, அதை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியும்.
மேலும் EPFO அமைப்பு தனது சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி வங்கிகளுக்கு இணையான வேகத்தில் சேவையை வழங்க உள்ளது. இதற்காக EPFO 3.O என்கிற புதிய திட்டத்தை 2025 ஆம் ஆண்டு தொடங்கியது. குறிப்பாக இந்த திட்டம் 2026-ம் ஆண்டு மத்தியில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் வர இருக்கும் 5 முக்கிய மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
வங்கிகளுக்கு இணையான டிஜிட்டல் சேவை
தற்போது நடைமுறைப்படி ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை எடுப்பதற்குப் பல நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. ஆனால் EPFO 3.O புதிய திட்டத்தில் ஊழியர்கள் தங்களது பணத்தை எளிதாகவும், வேகமாகவும் டிஜிட்டல் முறையில் பெறும் வசதி கொண்டுவரப்பட உள்ளது. குறிப்பாக வங்கிகளுக்கு இணையான வேகத்தில் டிஜிட்டல் சேவைகளை EPFO நிறுவனம் மேம்படுத்த உள்ளது.
ஒரு கிளிக் மூலம் வங்கி சேவைகளை பெறுவது போலவே, பிஎஃப் (PF) சேவையும் ஒரு கிளிக் மூலம் செய்ய முடியும். அதேபோல் EPFO 3.O முழுமையாகச் செயல்படுத்தப்பட்ட பின்னர் பிஎஃப் பணத்தை டிஜிட்டல் முறையில் நம்மால் மேலாண்மை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
யுபிஐ வசதி
EPFO 3.O திட்டத்தில் முக்கிய மாற்றமாக யுபிஐ மூலம் பணத்தை நேரடியாக பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாம் இப்போது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் எடுத்து பயன்படுத்துகிறோம். இதேபோன்று தான் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நாம் யுபிஐ மூலம் எடுத்தப் பயன்படுத்தலாம். குறிப்பாக உறுப்பினர்கள் தங்களின் தொகையை யுபிஐ மூலம் நேரடியாக வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
ஏடிஎம் கார்டு
தகுதி உள்ள உறுப்பினர்களுக்குப் பிரத்தியேக ஏடிஎம் கார்டுகளும் வழங்கப்படும். இதன் மூலம் அவசர தேவைகளுக்குப் பிஎஃப் பணத்தை எளிமையாக எடுக்க முடியும். அதுவும் இந்த வசதியில் மொத்த இருப்பில் இருந்து 75 சதவீதம் வரை பணம் எடுக்க அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள 25 சதவீதம் ஓய்வூதிய பாதுகாப்பிற்காகக் கணக்கில் வைக்கப்படும்.
நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை
பிஎஃப் பணத்தை எடுக்க அல்லது திருத்தங்களைச் செய்ய நிறுவனத்தின் டிஜிட்டல் கையொப்பம் அவசியமாக இருந்தது. ஆனால் தற்போது அவை மாற்றப்பட்டு பெரும்பாலான கிளைம்களுக்கு நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை என்கிற நிலை உருவாகியுள்ளது. அதேபோல் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர் போன்ற விவரங்களை உறுப்பினர்களே ஓடிபி மூலம் திருத்திக் கொள்ளலாம் என்கிற புதிய விதிமுறைகள் வரவுள்ளது.

பிஎஃப் தொகையில் 75 சதவீதம் பணத்தை எந்த ஆவணங்களும் இல்லாமல் பெற முடியும். வேலையிலிருந்து நீக்கப்படுகிறீர்கள் அல்லது ராஜினாமா செய்கிறீர்கள் போன்ற காரணங்களின் போது பிஎஃப் தொகையில் இருந்து 75 சதவீதம் உடனடியாக பெறமுடியும்.
புதிய நிறுவனம்
நீங்கள் ஒரு வேலையை விட்டு மற்றொரு வேலைக்குச் சேரும்போது பழைய பிஎஃப் தொகையை புதிய நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்ற இனி விண்ணப்பிக்க அவசியம் இருக்காது. அதாவது புதிய சிஸ்டம் தானாகவே புதிய கணக்கிற்கு மாற்றிவிடும். மேலும் மருத்துவ தேவைகளுக்கு இருக்கும் தானியங்கி தீர்வு வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications