EPFO மெம்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூலை 2 முதல் மீண்டும் ஆரம்பம்.. பிஎஃப் தாரர்கள் கவனம்!
இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation), தனது ஆன்லைன் மெம்பர் (Online Member) மற்றும் எம்பிளாயர் சேவைகளின் (employer services) இடைநிறுத்தத்தை மேலும் ஒரு நாள் நீட்டித்துள்ளது. இதனால், முக்கிய டிஜிட்டல் வசதிகள் மீண்டும் செயல்பட தொடங்கும் நாள் ஜூலை 2 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இபிஎப்ஓ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, இணையவழி சேவைகள் ஜூலை 1 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை கிடைக்காது. ஜூலை 2 ஆம் தேதி நள்ளிரவு 00:00 மணி முதல் அமைப்புகள் மீண்டும் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சேவை முடக்கம், இபிஎப்ஓ-வின் கோரிக்கை செயலாக்க அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்ட தரவுத்தள ஒருங்கிணைப்பு மற்றும் மென்பொருள் மேம்படுத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். ஜூன் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த இடமாற்ற செயல்முறை, சேவை வழங்குதலை மேம்படுத்தவும், செயலாக்கத் திறனை அதிகரிக்கவும், சந்தாதாரர்கள் மற்றும் எம்பிளாயர்களுக்கு வேகமான மற்றும் பாதுகாப்பான பயனர் அனுபவத்தை வழங்கவும் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த பராமரிப்பு காலத்தில், பயனர்களால் மெம்பர் இன்டர்பேஸ் மற்றும் எம்பிளாயர் இன்டர்பேஸை அணுக முடியாது. இதனால், இந்த இணையதளங்களுடன் இணைக்கப்பட்ட அனைத்து இணையவழி சேவைகளும் திறம்பட நிறுத்தப்படும். இதில் இணையவழி கோரிக்கை சமர்ப்பிப்புகள், பாஸ்புக் பதிவிறக்கங்கள் மற்றும் யுஏஎன் தொடர்பான பல வசதிகளும் அடங்கும்.
"இபிஎப்ஓ, கோரிக்கை செயலாக்க அமைப்புக்கான (Claims Processing System) திட்டமிடப்பட்ட தரவுத்தள ஒருங்கிணைப்பு மற்றும் மென்பொருள் பயன்பாடுகளை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது," என்றும் இபிஎப்ஓ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், அதன் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு இந்த தற்காலிக இடையூறு அவசியம் என்றும் அது கூறியுள்ளது.
ஆகையால் இந்த முடக்க காலத்தில் (ஜூலை 2 ஆம் தேதி வரை) புதிய ஆன்லைன் கோரிக்கைகளை தாக்கல் செய்ய முடியாது என்றும், ஜூன் 26 ஆம் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள், சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட பின்னரே செயல்படுத்தப்படும் என்றும் இபிஎப்ஓ அமைப்பு தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த இடையூறு, உமாங் (Umang) ஆப் மூலம் கிடைக்கும் சேவைகளுக்கும் பொருந்தும். ஒரு தனி ஆலோசனையில், திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக, அரசாங்க ஆதரவு பெற்ற இந்த தளத்தில் உள்ள அதன் வசதிகள் ஜூலை 2 வரை அணுக முடியாத நிலையில் இருக்கும் என்று இபிஎப்ஓ கூறியுள்ளது.
உமாங் ஆப்பில் உள்ள பல சந்தாதாரர் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன; அவற்றுள் பிஎஃப் இருப்பு சரிபார்ப்பு, ஆன்லைன் கோரிக்கை தாக்கல், கோரிக்கை நிலை கண்காணிப்பு, குறை பதிவு, நிறுவன தேடல், திட்ட சான்றிதழ் விண்ணப்பங்கள் மற்றும் ஜீவன் பிரமாண் சான்றிதழ் சேவைகள் ஆகியவை அடங்கும்.
உமாங் ஆப்பில் என்னென்ன இபிஎப்ஓ சேவைகள் கிடைக்காது? உமாங் என்பது யூனிஃபைடு மொபைல் அப்ளிகேஷன் பார் நியூ-ஏஜ் கவர்னன்ஸ் (Unified Mobile Application for New-age Governance) என்கிற ஒரு அதிகாரப்பூர்வ அரசு தளமாகும். இது பயனர்கள் இபிஎப்ஓ அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலேயே, தங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் இபிஎப்ஓ சேவைகளை எளிதாக பெற உதவுகிறது.
தற்போது நடைபெற்று வரும் இந்த மேம்படுத்தல் பணி நிறைவடைந்தவுடன், உறுப்பினர்களுக்கான ஒட்டுமொத்த அனுபவம் கணிசமாக மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இபிஎப்ஓ கூறியுள்ளது. கணினி அமைப்பு சீரமைக்கப்படும் போது ஏற்படும் தற்காலிக அசௌகரியத்தை பொறுத்துக்கொள்ளுமாறு ஓய்வூதிய நிதி அமைப்பு சந்தாதாரர்களை வலியுறுத்தியுள்ளது. அவரச உதவி தேவைப்படும் உறுப்பினர்கள் 14470 என்ற எண்ணில் இபிஎப்ஓ அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications