PF அக்கவுண்ட் இருக்கா? EPFO 3.0 அப்டேட்.. 5 முக்கிய மாற்றங்கள் என்னென்ன? இதோ விவரம்..
இபிஎஃப்ஓ (EPFO)என்று அழைக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) தனது சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி வங்கிகளுக்கு இணையான வேகத்தில் சேவையை வழங்க உள்ளது. இதற்காக EPFO 3.O என்கிற புதிய திட்டத்தை 2025 ஆம் ஆண்டு தொடங்கியது.
குறிப்பாக இந்த திட்டம் 2026-ம் ஆண்டு மத்தியில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் வர இருக்கும் 5 முக்கிய மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

1. தற்போது நடைமுறைப்படி ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை எடுப்பதற்குப் பல நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. ஆனால் EPFO 3.O புதிய திட்டத்தில் ஊழியர்கள் தங்களது பணத்தை எளிதாகவும், வேகமாகவும் டிஜிட்டல் முறையில் பெறும் வசதி கொண்டுவரப்பட உள்ளது. குறிப்பாக வங்கிகளுக்கு இணையான வேகத்தில் டிஜிட்டல் சேவைகளை EPFO நிறுவனம் மேம்படுத்த உள்ளது.
அதுவும் ஒரு கிளிக் மூலம் வங்கி சேவைகளை பெறுவது போலவே, பிஎஃப் (PF) சேவையும் ஒரு கிளிக் மூலம் செய்ய முடியும். அதேபோல் EPFO 3.O முழுமையாகச் செயல்படுத்தப்பட்ட பின்னர் பிஎஃப் பணத்தை டிஜிட்டல் முறையில் நம்மால் மேலாண்மை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
2. இந்த EPFO 3.O திட்டத்தில் முக்கிய மாற்றமாக யுபிஐ மூலம் பணத்தை நேரடியாக பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாம் இப்போது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் எடுத்து பயன்படுத்துகிறோம். இதேபோன்று தான் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நாம் யுபிஐ மூலம் எடுத்தப் பயன்படுத்தலாம். குறிப்பாக உறுப்பினர்கள் தங்களின் தொகையை யுபிஐ மூலம் நேரடியாக வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த வசதிக்கு நல்ல வரவேற்பு இருக்கும்
3.அதேபோல் தகுதி உள்ள உறுப்பினர்களுக்குப் பிரத்தியேக ஏடிஎம் கார்டுகளும் வழங்கப்படும். இதன் மூலம் அவசர தேவைகளுக்குப் பணத்தை எளிமையாக எடுக்க முடியும். அதுவும் இந்த வசதியில் மொத்த இருப்பில் இருந்து 75 சதவீதம் வரை பணம் எடுக்க அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள 25 சதவீதம் ஓய்வூதிய பாதுகாப்பிற்காகக் கணக்கில் வைக்கப்படும்.
மேலும் பணத்தை கிளைம் செய்ய இதுவரை 13 வகை காரணங்கள் இருந்தன. ஆனால் அவை தற்போது மூன்றாக மாற்றப்பட்டுள்ள. அதன்படி கல்வி, மருத்துவம், திருமணம் போன்ற அத்தியாவசிய தேவைகள். வீடு வாங்குதல், புதுப்பித்தல் போன்ற வீட்டுத் தேவைகள். வேலையின்மை போன்ற காரணங்களால் ஏற்படும் சிறப்புச் சூழல்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
4.இதற்கு முன்பு பிஎஃப் பணத்தை எடுக்க அல்லது திருத்தங்களைச் செய்ய நிறுவனத்தின் டிஜிட்டல் கையொப்பம் அவசியமாக இருந்தது. ஆனால் தற்போது அவை மாற்றப்பட்டு பெரும்பாலான கிளைம்களுக்கு நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை என்கிற நிலை
உருவாகியுள்ளது. அதேபோல் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர் போன்ற விவரங்களை உறுப்பினர்களே ஓடிபி மூலம் திருத்திக் கொள்ளலாம் என்கிற புதிய விதிமுறைகள் வரவுள்ளது.
இதுதவிர பிஎஃப் தொகையில் 75 சதவீதம் பணத்தை எந்த ஆவணங்களும் இல்லாமல் பெற முடியும். வேலையிலிருந்து நீக்கப்படுகிறீர்கள் அல்லது ராஜினாமா செய்கிறீர்கள் போன்ற காரணங்களின் போது பிஎஃப் தொகையில் இருந்து 75 சதவீதம் உடனடியாக பெறமுடியும்.

5. பொதுவாக நீங்கள் ஒரு வேலையை விட்டு மற்றொரு வேலைக்குச் சேரும்போது பழைய பிஎஃப் தொகையை புதிய நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்ற இனி விண்ணப்பிக்க அவசியம் இருக்காது. அதாவது புதிய சிஸ்டம் தானாகவே புதிய கணக்கிற்கு மாற்றிவிடும். மேலும் மருத்துவ தேவைகளுக்கு இருக்கும் தானியங்கி தீர்வு வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
EPFO 3.0 திட்டம் ஆனது உங்களுக்குத் தேவைப்படும்போது உங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கும். இந்த புதிய முறை 2026-ம் ஆண்டின் நடுப்பகுதியில் முழுமையாக நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








