புதிய சம்பள ரூல்ஸ்.. மாதம் 15,000 ரூபாயோ.. 50,000 ரூபாயோ.. ரூ.1,800 கட்டாயம்.. அதுக்கு மேல் ஊழியர் விருப்பம்!
இந்தியாவில் பணிபுரியும் கோடிக்கணக்கான ஊழியர்களின் ஓய்வுக்கால சேமிப்புத் திட்டமான வருங்கால வைப்பு நிதியில் ஒரு முக்கியமான மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது புதிய விதிமுறைகளின்படி, கட்டாய பிஎஃப் பங்களிப்பு குறித்த தெளிவான விளக்கங்களை கொடுத்துள்ளது.
இபிஎஃப் திட்டம் 2026 (EPF Scheme 2026) ஆனது ஜூன் 29ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சமூக பாதுகாப்பு குறியீடு, 2020 (Code on Social Security, 2020) இன் கீழ் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஊழியர்களுக்கான கட்டாய வருங்கால வைப்பு நிதி பங்களிப்பின் உச்சவரம்பு இதில் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான விதிகளின்படி, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் (Basic Salary + DA) 12 சதவீதத்தை ஊழியரும், அதற்கு இணையான தொகையை ஊழியர்கள் பணிபுரியம் நிறுவனமும் பிஎஃப் நிதியில் பங்களிக்க வேண்டும். இதற்கு சட்டப்பூர்வ ஊதிய உச்சவரம்பு (Statutory Wage Ceiling) மாதம் ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அவர் பிஎஃப் கணக்கில் கட்டாயமாக பங்களிக்க வேண்டிய குறைந்தபட்ச தொகை, இந்த ரூ.15,000 தொகையில் இருந்து கணக்கிடப்படுகிறது. இதில் 12 சதவீதமான ரூ.1,800 மட்டுமே வைப்பு நிதியில் மாதந்தோறும் சேர்க்கப்படுகிறது. சம்பளம் எவ்வளவாக இருந்தாலும் ரூ.1,800 வரம்பாக இருக்கிறது.
புதிய விதிகளின்படி, அடிப்படைச் சம்பளம் ரூ.15,000 க்கு மேல் இருக்கும் ஊழியர்களுக்கு, பிஎஃப் பங்களிப்பை மாதம் ரூ.1,800 ஆக வைத்து கொள்ளவும் அதற்கு மேல் பங்களிப்பை உயர்த்தி கொள்ளவும் விருப்ப உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, அடிப்படைச் சம்பளம் அதிகமாக இருந்தாலும், ஊழியர் விரும்பினால் பிஎஃப் பங்களிப்பை மாதம் ரூ.1,800 இல் மட்டுமே வைக்கலாம்.
மீதமுள்ள தொகையை கையில் கிடைக்கும் சம்பளமாக பெற்றுக்கொள்ள ஊழியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கையில் கிடைக்கும் சம்பளம் (Take-home Pay) அதிகரிக்கும்போது குறுகிய கால நிதித் தேவைகளுக்கு பூர்த்தி செய்து கொள்ள முடியும். மேலும், ஊழியர் ரூ.1,800-க்கு மேல் கூடுதல் தொகையை தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) வழியாக செலுத்தலாம்.
ஆனால், இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், ஊழியர் தானாக முன்வந்து கூடுதல் தொகையைச் செலுத்தினால், அதற்கு இணையான தொகையை முதலாளி (Employer) செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது. அவ்வாறு முதலாளி கூடுதல் பங்களிப்பு கொடுக்க வேண்டுமானால், அது நிறுவனத்தின் கொள்கை, வேலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யப்படும்.
ஆகவே, நிதி நெருக்கடி அல்லது குடும்பத் தேவைகள் இருக்கும் காலங்களில், ஊழியர்கள் தங்கள் விருப்பப்படியான கூடுதல் பங்களிப்பைக் குறைத்துக்கொள்ளவோ அல்லது நிறுத்தி வைக்கவோ இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது. இந்த விதிகள் பிஎஃப் நிதியின் அடிப்படைப் பலன்களை மாற்றவில்லை. மாறாக, இபிஎஃப்ஓ நிர்வாகத்தை எளிமையாக்க கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், வீட்டு வசதி, கல்வி, திருமணம் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காகப் பணம் எடுக்கும் நடைமுறைகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம், நிதியைப் பாதுகாக்க, ஒட்டுமொத்த இருப்பில் குறைந்தபட்சம் 25 சதவீத தொகையை எப்போதும் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்ற விதியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் பிஎஃப் தொகையைச் சரியாகச் செலுத்துவதை உறுதி செய்ய, தணிக்கை மற்றும் மின்னணு அறிக்கையிடல் முறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும், பிஎஃப் வட்டி விகிதங்கள், யுஏஎன் (UAN) நடைமுறை மற்றும் வரிச் சலுகைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. உறுப்பினர்களின் கணக்குகள் தடையின்றி புதிய சட்டத்தின் கீழ் தொடர்ந்து செயல்படும்.
புதிய இபிஎஃப் திட்டம் 2026 ஆனது ஊழியர்களின் சம்பளத்தில் பிஎஃப் பங்களிப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதில் நிலவிய குழப்பங்களை தீர்த்துள்ளது. ரூ.1,800 கட்டாயப் பங்களிப்பை உறுதி செய்துள்ளது. ஆகவே, கையில் கிடைக்கும் ஊதியத்தை (Take-home salary) கூடுதலாக நிர்வகிக்க முடியும். ஏனென்றால், குறைவான சம்பளத்தில் கோடிக்கணக்கான ஊழியர்கள் பணி புரிகின்றனர்.


Click it and Unblock the Notifications