ஒரே நேரத்தில் இரண்டு நல்ல விஷயங்களை சொன்ன EPFO.. உற்சாகத்தில் PF சந்தாதாரர்கள்.. இதோ விவரம்..
சமீபத்தில் வெளியான தகவலின்படி, தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிக்கான 8.25 சதவீத வட்டிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆகேவ 7 கோடிக்கு மேற்பட்ட சந்தாதாரர்களின் கணக்கில் இம்மாதம் வட்டி வரவு வைக்கப்படும். இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட தொகை, அவர்களின் எதிர்கால நிதி பாதுகாப்பிற்காகத் தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி (EPF) கணக்கில் சேமிக்கப்படுகிறது. இந்த சேமிப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்பட்ட வட்டி வழங்கப்பட்டு, அது உறுப்பினர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

குறிப்பாக தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி அமைப்பின் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரியம், ஆண்டுதோறும் வட்டி விகிதத்தை முடிவு செய்கிறது. அதன்படி கடந்த மார்ச் 2-ஆம் தேதி மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற மத்திய அறங்காவலர்கள் வாரியக் கூட்டத்தில், 2025-2026 நிதியாண்டிற்கான வருங்கால வைப்புநிதி வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாகத் தொடர்ந்து வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்பின்பு இந்த முடிவு மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனே 2025-2026 நிதியாண்டுக்கு 8.25 சதவீத வட்டிவிகிதம் வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதைதொடர்ந்து மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் உத்தரவுப்படி 7 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர் வைப்புநிதி சந்தாதாரர்களின் கணக்குகளுக்கு 8.25 சதவீத வட்டி விகிதம் இம்மாதம் வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆகவே இதன் மூலம் தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கு 2023-2024 நிதியாண்டில் இருந்து தொடர்ந்து 3-வது ஆண்டாக 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏடிஎம் மற்றும் யுபிஐ
மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த மாதம் (ஜூன் 2026) இறுதிக்குள் ஏடிஎம்கள் மற்றும் யுபிஐ மூலம் நேரடியாக பிஎஃப் பணம் எடுக்கும் வசதியைப் பெறுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது 'EPFO 3.0' என்று அழைக்கப்படும் திட்டம் ஆனது வருங்கால வைப்பு நிதி பணம் எடுக்கும் செயல்முறையை முற்றிலும் காகிதமில்லாததாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய வசதியின் தொழில்நுட்பச் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் தெரிவித்தார். இதற்காக, தொழிலாளர் துறை தனது மைய சேவையக (Main Server) உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவை நிறைவடைந்ததும், இந்தச் சேவை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய சேவை நடைமுறைக்கு வந்த பிறகு, வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள் தங்களது சேமிப்புத் தொகையைத் தாங்களே எளிதாக திரும்பப் பெற முடியும். இதற்காக இனி முதலாளிகளின் கையொப்பங்களையோ, நீண்ட ஆவண நடைமுறைகளையோ பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்காது.
அதுவும் PF தொகையை UPI மூலம் பெற விரும்பினால், முதலில் உங்கள் UAN (Universal Account Number) செயலில் (Active) இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே UAN-ஐ செயல்படுத்தியிருந்தாலும், அது தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பதை மீண்டும் சரிபார்ப்பது நல்லது. ஏதேனும் காரணங்களால் உங்கள் UAN செயலற்றதாக (Inactive) இருந்தால், இந்த புதிய UPI வசதியைப் பயன்படுத்த முடியாது. எனவே, அடுத்த கட்டத்திற்குச் செல்லும் முன் உங்கள் UAN நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications