EPF 2026: மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!
மாத சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பிஎஃப் பணத்தில் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதாவது இந்தியாவில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் EPFO திட்டத்தின் மூலம் தங்களது எதிர்காலத்திற்காகப் பணத்தை சேமித்து வருகின்றனர். இந்த சேமிப்பு ஓய்வுக்காலத்திற்கான நிதியை உருவாக்குவது மட்டுமின்றி, பல்வேறு தேவைகளிலும் ஊழியர்களுக்கு நிதி ஆதரவாக அமைகிறது.
இதனால் PF என்பது வெறும் மாதாந்திர சேமிப்பு திட்டம் என்ற வரம்பைத் தாண்டி முக்கியத்துவம் பெறுகிறது. பிஎஃப் சேமிப்பில் போடும் பணம் ஓய்வூதிய காலத்தில் மட்டும் உதவாமல் பல முக்கிய அவசர கால தேவைகளுக்கும் உதவுகிறது. எனவே ஊழியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து முக்கியமான EPFO வின் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

இன்சூரன்ஸ்
EPF கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு பணிபுரியும் காலத்தில் எதிர்பாராத மரணம் ஏற்பட்டால், EDLI திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இதற்காக ஊழியர்கள் தனியாக எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அதாவது நிறுவனம் சம்பளத்தில் இருந்து 0.5 சதவீதம் பணத்தைக் காப்பீட்டில் செலுத்தும்.
ஊழியர் பணியில் இருக்கும்போது எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால், இந்த காப்பீட்டுத் தொகை அவருடைய வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும். இதனால் குடும்பத்தினருக்கு நிதி உதவி கிடைக்கும்.
பென்ஷன்
EPFO திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பென்ஷன் பெறும் வசதியும் உள்ளது. ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் EPFO-வில் பங்களிப்பு செய்திருந்தால், ஓய்வு பெற்ற பிறகு பென்ஷன் பெற தகுதி கிடைக்கும்.
இந்த பென்ஷன் வசதி மூலம் ஊழியர்கள் தங்களது ஓய்வுக்காலத்தில் மாதந்தோறும் வருமானத்தைப் பெற முடியும். குறிப்பாக, ஓய்வு காலத்தில் தினசரி மற்றும் அத்தியாவசிய செலவுகளைச் சமாளிக்க இந்த தொகை உதவியாக இருக்கும்.
வரி இல்லை
EPFO கணக்கில் ஊழியர்கள் சேமித்து வரும் தொகைக்கு அரசு வட்டி வழங்குகிறது. குறிப்பாக அந்த வட்டி பணத்திற்கு எந்த ஒரு வரியும் கிடையாது. எனவே இந்த வட்டித் தொகைக்கு வருமான வரி விலக்கு கிடைப்பதால், ஊழியர்கள் தங்களது PF சேமிப்பின் மூலம் கிடைக்கும் வட்டியை வரி பிடித்தம் இல்லாமல் பெற முடியும்.
அவசர தேவைகள்
அவசர தேவைகள் ஏற்படும் போது PF கணக்கை முழுமையாக மூடாமல், குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அதிலிருந்து ஒரு பகுதி பணத்தை எடுத்துக்கொள்ளலாம். மருத்துவ அவசரநிலைகளுக்கு குறிப்பிட்ட அளவு தொகையைப் பெற முடியும். அதேபோல், வீடு அல்லது மனை வாங்குவதற்கும், குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் PF தொகையை எடுக்க வாய்ப்பு உள்ளது. மேலும், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்ற செலவுகளுக்காகவும், தேவையான பணிக்காலம் முடிந்திருந்தால் PF தொகையில் 50% வரை பெற்றுக்கொள்ள முடியும்.

பிஎஃப் சமமான பங்கு
ஊழியரின் சம்பளத்தில் இருந்து 12% PF-க்காக பிடித்தம் செய்யப்படும் நிலையில், அதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கிறது. இதில் 8.33% ஓய்வூதிய திட்டத்திற்கும், மீதமுள்ள தொகை PF கணக்கிலும் சேர்க்கப்படுகிறது.
UMANG செயலி: UMANG செயலி மூலம் ஊழியர்கள் தங்களது PF கணக்கு இருப்பை எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும், e-Nomination செய்வதுடன், PF பணத்தை ஆன்லைனில் விண்ணப்பித்துப் பெறும் வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications
