செப்.20 க்கு அப்புறம்.. இன்டர்நெட் சேவையில் எலான் மஸ்க்.. ஜியோ வயிற்றில் புளியை கரைக்கும் ஸ்டார்லிங்க்!
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைக்கும் விதமாக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்தின் சாட்டிலைட் இன்டர்நெட் சேவை மாறியிருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்டார்லிங் நிறுவனம், உலகளவில் 32 நாடுகளில் சாட்டிலைட் மூலம் இன்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது. சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான சாட்டிலைட்களை, வெறும் இன்டர்நெட் சேவைக்காக மட்டுமே ஸ்டார்லிங்க் நிறுவனம் விண்ணில் செலுத்தி இருக்கிறது.

சொல்லப்போனால், பல நாடுகளில் உள்நாட்டு நிறுவனங்களையே பின்னுக்கு தள்ளி ஸ்டார்லிங்க் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. இந்த இன்டர்நெட் சேவை, நேரடியாக சாட்டிலைட் மூலம் வழங்கப்படுவதால், இதுவரை நாம் பயன்படுத்தி வந்த டெலிகாம் நிறுவனங்களின் சேவைகள் கிடைக்காத இடத்திலும், இதை பயன்படுத்த முடியும். குறிப்பாக, பேரிடர் காலங்களிலும் தடையில்லாமல், இன்டர்நெட்டை மக்களுக்கு கொடுக்க முடியும்.
சமீபத்தில் உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட போர் நடிவடிக்கைகளின் போதுகூட ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேவைகள் தடையில்லாமல், வழங்கப்பட்டது. இதனால், அரசாரங்கத்தின் அறிவிப்புகளும் உதவிகளும் தடையில்லாமல், மக்களுக்கு சென்று சேர்ந்தது. ஆகவே, வருங்காலத்தில், சாட்டிலைட் இன்டர்நெட் சேவை மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்தும் என்பதை உலக நாடுகள் கண்டு கொண்டன.
இந்தியாவிலும் கூட ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சாட்டிலைட் இன்டர்நெட் சேவைகளை வழங்கும் பணிகளில் ஏற்கனவே, இறங்கிவிட்டன. அதாவது, ஜியோவின் கீழ் செயல்படும் ஜியோ ஸ்பேஸ் டெக்னாலஜி (Jio Space Technology) மற்றும் ஏர்டெல்லின் கீழ் செயல்படும் ஒன்வெப் (OneWeb) ஆகிய நிறுவனங்கள் சாட்டிலைட் மூலம் இன்டர்நெட் சேவையை வழங்கும் முதல்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலிலேயே, எலான் மஸ்க், இந்திய டெலிகாம் (Telecom) மார்கெட்டில் நுழைய மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக 2022ஆம் ஆண்டே மத்திய தொலைத்தொடர்பு துறையிடம், குளோபல் மொபைல் பர்சனல் கம்யூனிகேஷன் சாட்டிலைட் (Global Mobile Personal Communication Satellite) உரிமத்துக்கு விண்ணப்பித்துள்ளார். அதோடு ப்ரீ-புக்கிங் சாட்டிலைட் சேவைக்கான பணிகளையும் தொடங்கியிருக்கிறார்.
இருப்பினும், மத்திய அரசு எந்த கிரீன் சிக்னலும் காட்டாமல் இருந்ததால், ப்ரீ-புக்கிங் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவில் சாட்டிலைட் மூலம் இன்டர்நெட் சேவை வழங்குவதில் விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள், விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை என்பதால் ஸ்டார்லிங் நிறுவத்துக்கு உரிமம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டது.
இந்த நேரத்தில், மத்திய தொலைத்தொடர்பு துறையின் உயர்மட்ட அதிகாரிகளும் ஸ்டார்லிங்க் உயர்மட்ட குழுவும் அதுதொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பேச்சு வார்த்தை செப்டம்பர் 20 ஆம் தேதி நடக்க இருப்பதாகவும், அப்போது ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு துறை சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், இந்தியாவில் சாட்டிலைட் மூலம் இன்டர்நெட் சேவையை வழங்க அனுமதி கோரி ஸ்டார்லிங்க் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணபம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அதுதொடர்பான முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஸ்டார்லிங் நிறுவனம், இந்தியாவில் சாட்டிலைட் இன்டர்நெட் சேவையை விரைவில் வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை போலல்லாமல், ஸ்டார்லிங்க் நிறுவனம், ஏற்கனவே பல நாடுகளில் சேவைகளை வழங்க தொடங்கிவிட்டது. இதனால், இங்குள்ள நிறுவனங்கள் அதனுடன் போட்டிப் போடுவதில் சிரமம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, இங்குள்ள நிறுவனங்களுக்கு எலான் மஸ்க்கின் நடவடிக்கைகள் வயிற்றில் புளியை கரைக்கும் வகையிலேயே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








