நவகிரகங்களும் உச்சத்தில் இருக்கும் போல.. உட்கார்ந்த இடத்தில் கெத்து காட்டிய Elon Musk!
எலான் மஸ்க் என்றதும் நியாபத்திற்கு வருவது டெஸ்லா நிறுவனம் தான். உலகம் முழுவதும் உள்ள கார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் கார்களில் ஆர்வம் காட்டி வந்த நேரத்தில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து அதில் பெரிதும் வெற்றியையும் கண்டவர் எலான் மஸ்க். இவருக்கு சொந்தமான மற்றொரு நிறுவனம் தான் ஸ்பேஸ் எக்ஸ். இந்த நிறுவனம் விண்வெளி பயணத்தில் பெரும் பங்காற்றி வருகிறது. நாசாவிற்கே பெரிதும் உறுதுணையாக இருப்பது ஸ்பேஸ் எக்ஸ் தான்.

கால் பதிக்கும் இடமெல்லாம் வெற்றி
எலான் மஸ்க்கின் கனவுத்திட்டமாக இருப்பது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது தான். இதற்கான தீவிர முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மனிதர்களின் மூளையுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தையும் மஸ்க் நடத்தி வருகிறார். அது நியூரோலிங்க் நிறுவனம் ஆகும்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம் மஸ்க் ட்விட்டரை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் மஸ்க் இதை நிராகரித்தார். இந்த நிலையில் தான் புதிய துறையை கையில் எடுத்தார் மஸ்க்.

சென்ட் பாட்டில் சேல்ஸ் மேன் ஆன மஸ்க்
உலகப் பணக்காரர்களில் பிரதான இடம் பிடித்திருக்கும் எலான் மஸ்க் சமீபத்தில் தனது ட்விட்டர் பயோவை "perfume salesman" என மாற்றினார். மஸ்க் திடீரென இப்படி மாற்ற காரணம் என்ன என்று சமூகவலைதள வாசிகள் புலம்பித் தவித்தனர். ஆனால் மஸ்க் உண்மையாக சென்ட் பாட்டில் சேல்ஸ் மேன் ஆக மாறினார். ஆம், தற்போது மஸ்க் வாசனை திரவிய தொழிலில் நுழைந்து உட்கார்ந்த இடத்திலேயே வெற்றியும் பெற்று இருக்கிறார்.

தலைசுத்த வைக்கும் விற்பனை
தொடர்ந்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் "தயவுசெய்து எனது வாசனை திரவியத்தை வாங்கவும், அப்போது தான் என்னால் ட்விட்டரை வாங்க முடியும்" என்று நகைச்சுவையாக ட்விட் செய்தார்.
எலான் மஸ்க்கின் இந்த பர்ன்ட் ஹேர் பெர்ஃப்யூமிற்கு பெரிய அளவு விளம்பரங்கள் எல்லாம் ஒன்றுமில்லை. வெறும் மக்ஸ் ட்வீட் மட்டுமே விளம்பரமாகும். ஆனால் இதன் விற்பனை தலைசுத்த வைக்கும் வகையில் இருக்கிறது.

உட்கார்ந்த இடத்தில் கெத்து காட்டிய மஸ்க்
"பர்ன்ட் ஹேர்" என்று அழைக்கப்படும் புதிய வாசனை திரவியம் அறிமுகமான சில மணிநேரங்களில் 20,000 பாட்டில்கள் விற்பனையானது. இதன் ஒரு பாட்டிலின் விலை ரூ.8,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே 20,000 பாட்டில்கள் ரூ.16.8 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. இப்படியே போனால் மஸ்க் சென்ட் விற்றே ட்விட்டரை வாங்கிவிடுவார் போல் இருக்கிறது என பலரும் கிசுகிசுத்தனர்.

ட்விட்டரை வாங்குவாரா மஸ்க்?
அக்டோபர் இறுதிக்குள் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இதை செய்ய தவறும் பட்சத்தில், நவம்பரில் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை மீறிய வழக்கு விசாரணைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
எலான் மஸ்க் பெர்ப்யூம் பாட்டில்களை தி போரிங் நிறுவனம் மூலமாக விற்பனை செய்கிறார். மஸ்க் இப்படி செய்வது முதன்முறை அல்ல, முன்னதாக மஸ்க், போரிங் நிறுவனத்தின் மூலம் தொப்பிகளையும், நெருப்புகள் கக்கும் துப்பாக்கிகளையும் விற்பனை செய்தார் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

மஸ்க் இன் பெயர் காரணம்
பர்ன்ட் ஹேர் என்ற வாசனை திரவியம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. "என்னைப் போன்ற பெயருடைய ஒருவர் வாசனைத் தொழிலில் இறங்குவது என்பது தவிர்க்க முடியாதது- நான் ஏன் இவ்வளவு நேரம் போராடினேன்!" என நகைச்சுவையாக மஸ்க் மீண்டும் ட்வீட் செய்தார்.
மஸ்க் இருப்படி குறிப்பிடக் காரணம், மஸ்க் என்பதன் பொதுவான பொருள் ஒரு வலுவான மணம் கொண்ட சிவப்பு-பழுப்பு நிறப் பொருள், வாசனை திரவியத்தில் ஒரு முக்கிய மூலப்பொருள் என்பதாகும்.

அவுட் ஆஃப் ஸ்டாக்
தொடர்ந்து மஸ்க் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில் 28700 பர்ன்ட் ஹேர் சென்ட் பாட்டில்கள் விற்றுத் தீர்த்துவிட்டதாகவும் 1300 மட்டுமே பாக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பதிவிட்ட அடுத்த ட்வீட்டில் அனைத்து பாட்டில்களும் விற்பனையாகிவிட்டதாக தெரிவித்தார். அறிமுகமான சில நாட்களிலேயே அனைத்து பாட்டில்களும் விற்று அவுட் ஆஃப் ஸ்டாக் ஆகி இருக்கிறது.
தொழிலதிபர் என்றால் அது இவர் தான்
அனைத்து பாட்டில்களும் விற்று தீர்ந்துவிட்டது என மஸ்க் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த சென்ட் பாட்டில்களை 30,000 பேர் ஆர்டர் செய்திருக்கின்றனர். அவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் டெலிவரி தொடங்கப்படும் என மஸ்க் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு நிறுவனமும் ஒரு பொருளை தயார் செய்து அதை விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய படாதபாடு படும் நிலையில் பெரிதாக விளம்பரம் எதுவும் இல்லாமல் ட்வீட் மூலமாகவே மஸ்க் தனது சென்ட் பாட்டில்களை அவுட் ஆஃப் ஸ்டாக் ஆக்கி இருக்கிறார்.
ஒரு பாட்டில் 8400 என்ற வீதம் 30000 பாட்டில்களை விற்று கோடிக் கணக்கில் உட்கார்ந்த இடத்திலேயே வருமானம் ஈட்டி தனது தொழிலதிபர் திறமையை நிரூபித்து காட்டி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications