மாட்டிக்காதீங்க.. ஏடிஎம் பணம்.. வங்கி பணம்.. கியூஆர் கோட் வேணும்.. இது தெரியாம பணம் எடுத்துட்டு போயிடாதீங்க!
தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால், ஏடிஎம், வங்கி பணம் மட்டுமல்லாமல், சாமானிய மக்கள் கையில் எடுத்து செல்லும் பணம் வரையில் என்னென்ன ஆவணங்கள் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் என்ன? ஆவணங்கள் இல்லாத பணம் என்னவாகும்?
நாடாளுமன்ற தேர்தல் 2024 (Lok Sabha Elections 2024) நெருங்கிவிட்டது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றே தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. அதிலும் பணப்பட்டுவாடாவை தடுக்க வங்கிகள் தொடங்கி சாமானிய மக்கள் வரையில் பின்பற்றப்பட வேண்டிய விதிகளை எளிதாக கடந்து சென்றுவிட முடியாது.

இந்த விதிகள் குறித்து தெரியாமல் பணத்தை எடுத்து சென்றுவிட்டு வாகன தணிக்கையின்போது பறக்கும்படை அலுவலர்களிடம் பலர் மாட்டி கொள்கின்றனர். ஆகவே, பொதுமக்கள் ஆவணங்களின்றி எவ்வளவு பணத்தை எடுத்து செல்லலாம், எவ்ளவு பணத்தை எடுத்து செல்ல ஆவணங்கள் தேவை, வங்கி பணம் எவ்வாறு கொண்டு செல்லப்படுகிறது ஆகிவற்றை இப்போது தெரிந்து கொள்வோம்.
வங்கி பணம் அல்லது ஏடிஎம் பணத்தை எடுத்து செல்லும் விதிகள்: தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி வங்கியில் இருந்து ஏடிஎம் மெஷின்களுக்கோ அல்லது ஒரு வங்கியில் இருந்து மற்றொரு கிளை வங்கிக்கோ பணத்தை எடுத்து செல்லும்போது, கியூஆர் கோட் (QR Code) நடைமுறையை பின்பற்ற வேண்டும். இந்த கியூஆர் கோட் தேர்தல் ஆணையத்தின் ஜி-விஜில் (C-Vigil) மூலம் வழங்கப்படுகிறது.
இந்த கியூஆர் கோடை பெற பணத்தை எடுத்து செல்லும் முன்பே வங்கிகள் அதுகுறித்த முழு விவரங்களையும் கொடுக்க வேண்டும். அதேபோல பணத்துக்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். அதாவது, பணப் பரிமாற்றம் செய்யப்படும் தேதி, எவ்வளவு பணம் கொண்டு செல்லப்படுகிறது, எங்கிருந்து வருகிறது மற்றும் எங்கு செல்கிறது உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும்.

அதேபோல வங்கி வாகனத்தின் எண், அதில் இருக்கும் வங்கி ஊழியர், ஓட்டுநரின் பெயர் மற்றும் அவர்களின் அடையாள சான்றிதழ்கள் அந்த ஆப்பில் கொடுக்கப்பட வேண்டும். இந்த விவரங்கள் கொடுக்கப்பட்ட பிறகு கியூஆர் கோட் உருவாக்கப்படும். இந்த கியூஆர் கோட்டை பிரிண்ட் எடுத்து வாகனங்களில் எடுத்து செல்ல வேண்டும். இது தேர்தல் பறக்கும்படை அலுவர்களுக்கும் பகிரப்படுகிறது.
ஆகவே, பணத்தை எடுத்து செல்லும் போது, இந்த வங்கி வாகனங்கள், பறக்கும்படை அலுவலர்களிடம் சிக்கினால், இந்த கியூஆர் கோடை காண்பித்து சென்றுவிடலாம். இந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்ய பறக்கும்படியானது, மொபைல் ஆப் வைத்திருக்கிறது. இந்த விதிமுறை ஒவ்வொரு முறையும் பணத்தை எடுத்து செல்லும்போதும் பின்பற்றப்படுகிறது.
அதேபோல ஒரே நேரத்தில் பல்வேறு வங்கி வாகனங்கள் சென்றாலும், தனித்தனியே கியூஆர் கோட் பெற வேண்டும் என்று வங்கி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியே ஏடிஎம் மற்றும் வங்கி பணம் கையாளப்படுகிறது. இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி பணம் கிடைக்கிறது. இப்போது, பொதுமக்களுக்கான விதிகளை பார்ப்போம்.
பொதுமக்கள் பணத்தை எடுத்து செல்லும் விதிகள்: தேர்தல் விதிகளின்படி ரூ.50,000 பணத்தை ரொக்கமாக கையிலோ அல்லது வாகனத்திலோ எடுத்து செல்லலாம். இப்படி எடுத்து செல்லும்போது, பறக்கும்படியினர் மறித்தால், அந்த பணத்தை எதற்காக எடுத்து செல்கிறீகள் என்று சொல்லிவிட்டு சென்றுவிடலாம். ஆனால், ரூ.50,000 மேல் பணத்தை எடுத்து சென்றால், ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
இந்த ஆவணங்கள் கையில் இல்லையென்றாலும், வீட்டிற்கே சென்று எடுத்து வந்து கொடுத்துவிட்டு பணத்தை எடுத்து செல்லலாம். இதற்காக அவகாசம் வழங்கப்படுகிறது. அப்படி ஆவணம் இல்லையென்றால், பணம் பறிமுதல் செய்யப்பட்டுவிடும். அதுவே ரூ.10 லட்சத்தும் மேல் பணம் எடுத்து சென்றால், வரிமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
ஆகவே, ரூ.50,000-க்கும் மேலான தொகையை எடுத்து செல்லும்போது, முறையான ஆவணங்களை கூடவே எடுத்து செல்வது நல்லது. இந்த விதிகளை சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் கட்டயாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இவர்கள் மாவட்டம் அல்லது மாநிலங்கள் அளவில் பயணம் செய்வார்கள். ஆகவே, ஆவணங்களுக்காக வீடுகளுக்கோ அலுவலகங்களுக்கோ செல்வது கடிமனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications