மின்சார வாகனம் பயன்படுத்திப் பல லட்சம் சேமிக்கலாம்.! யார் இந்த ஜரைல் லோபோ?
2000 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வளிமண்டலத்தில் கார்பன் துகள்கள் அதிகரித்துள்ளதாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றின் இயல்பு நிலையம் மாறியுள்ளது. அதுமட்டுமின்றி காற்றில் நஞ்சு தன்மை கலந்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
சுற்றுப்புறச்சூழல் மற்றும் மனித இனமே ஆபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இவற்றை எல்லாம் நாம் சரி செய்துகொள்ள வெறும் 12 ஆண்டு கால அவகாசம் மட்டுமே உள்ளதாகப் பல முக்கிய ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.

பூமி ஆபத்தான நிலைக்கு காரணம் யார்?
பூமி வெப்பமயம் ஆனது மற்றும் பூமி தற்பொழுது சந்தித்துக்கொண்டிருக்கும் பருவநிலை மாற்றம் ஆகிய அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாக அதிகரித்து இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை கூறப்படுகிறது. பூமி ஆபத்தான நிலையைச் சந்திப்பதற்கு நாம் அனைவருமே ஒரு காரணமாக இருந்திருக்கிறோம் என்பதே உண்மை. இதனைச் சரி செய்வதற்கு நாம் அனைவரது பங்கும் நிச்சயம் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

18 ஆண்டுகளாக மின்சார கார் பயன்படுத்துகிறார்
இந்த நிலையைச் சமாளிப்பதற்குத் தான் பசுமை போக்குவரத்திற்கு மாறும் படி விஞ்ஞானிகள் ஒரு தீர்வு வழங்கியுள்ளனர். இந்தியாவும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும்படி மக்களிடம் வலியுறுத்துகிறது. விஞ்ஞானிகளின் கூறிய கருத்தை, சுமார் 18 ஆண்டுகளாகப் பெங்களூருவைச் சேர்ந்த 63 வயது ஜரைல் லோபோ என்பவர் பின்பற்றி வருகிறார் என்பது தான் ஆச்சரியம்.

யாருப்பா இந்த ஜரைல் லோபோ?
பெங்களூருவைச் சேர்ந்த ஜரைல் லோபோ, மின்சார வாகனங்களை சுமார் 2001 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வருகிறார். சுற்றுப்புறச்சூழலைக் காப்பாற்றத் தனது பங்காக மின்சார வாகனங்கள் இருக்கும் என்பதை உணர்த்த அவர், 18 ஆண்டுகளாக மின்சார வாகனங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார். அவர் மட்டுமின்றி அவர் குடும்ப நபர்களையும் மின்சார வாகனங்களையே பயன்படுத்த வைத்துள்ளார்.

10 மின்சார வாகனங்கள்
ஜரைல் லோபோவிடம் இதுவரை மொத்தமாக 10 மின்சார வாகனங்கள் உள்ளது, அதில் 6 ரேவா கார்கள் மற்றும் 4 மகேந்திர எலக்ட்ரிக் e20 கார்களை அவர் வைத்துள்ளார். உலகம் முழுதும் பசுமை போக்குவரத்து முறையை ஊக்குவிக்க வேண்டும் என்பதே ஜரைல் லோபோவின் முக்கிய நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எக்ஸ்ட்ரா ரீஇன்போர்ஸ்டு பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட்
உலகம் முழுதும் பசுமை போக்குவரத்துக்கு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவரின் ஆர்வமே, 2017 ஆம் ஆண்டில் எக்ஸ்ட்ரா ரீஇன்போர்ஸ்டு பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட் (Xtra Reinforced Plastic Private Limited) என்ற நிறுவனத்தைத் துவங்கக் காரணமாக இருந்திருக்கிறது.

பசுமை முயற்சி கைகொடுக்கும்
மலிவான விலையில் எலக்ட்ரிக் கார்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே ஜரைல் லோபோவின் லட்சியம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் விரைவில் ஜீரோ எமிஷன் போக்குவரத்து பிரபலமடையும் மற்றும் சுற்றுப்புறச்சூழலைக் காப்பதற்கு இதுபோன்ற முயற்சிகள் கைகொடுக்கும் என்று அவர் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மின்சார வாகனம் தயாரிப்பில் 14 ஆண்டுகள் அனுபவம்
முயற்சியின் முதல் படியாக, இந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தைத் தான் துவங்கியுள்ளதாக ஜரைல் லோபோ தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மின்சார ரேவா கார்களை உருவாக்குவதில் இவருக்கு 14 ஆண்டுகள் அனுபவம் உள்ளதென்பது கூடுதல் சிறப்பு. முதல் முதலில் 2001 ஆம் அணில் ரேவா கார்கள் அறிமுகம் செய்தபொழுது அதை வாங்கி பயன்படுத்திய சிலரில் ஐவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோல்ஃப் மின்சார வாகனம்
இவர் உருவாக்கியுள்ள கோல்ஃப் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதனால் முக்கியமாக ஆண்டுக்கு வீணாய் நாம் செலவு செய்யும் பணத்தில் பல லட்சத்தைச் சேமிக்க முடியும் என்கிறார் ஜரைல் லோபோ. இவரின் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு வெறும் 10 யூனிட் மின்சாரம் மட்டுமே தேவைப்படுகிறது, யூனிட்டிற்கு வெறும் 5 ரூபாய் என்ற கணக்கில் கிலோமீட்டருக்கு வெறும் 50 பைசா மட்டுமே செலவாகும் என்கிறார் ஜரைல் லோபோ.

அதிகம் சேமிக்கலாம்
இவர் உருவாகியுள்ள மின்சார வாகனத்தைப் பயன்படுத்திச் சரியாக 80 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என்கிறார். குறைந்த செலவில் அதிக தூரம் பயணித்து, சுற்றுப்புறச்சூழலையும் காத்து உங்களின் பணத்தையும் சேமித்து பூமியைக் காப்பாற்றப் பசுமை போக்குவரத்துக்கு முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜரைல் லோபோ.

மக்களின் பங்கு அவசியம்
இந்தியாவில் பல இடங்களின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ண்ட்கள் திறக்கப்பட்டுள்ளன, பல முன்னணி கார் நிறுவனங்களும் மின்சார கார்களை தயாரிப்பில் ஆர்வம் காட்டி, மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கியுள்ளன. இந்த முயற்சியில் மக்களின் பங்கு முக்கிய தேவை என்பதினால், அனைவரும் முடிந்தவரை விரைவாகப் பசுமை போக்குவரத்துக்கு முறைக்கு மாறுவதற்கு முயற்சி செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications