5ஜி சேவை.. டவுன்லோட் வேகம்.. இந்தியாவுக்கு எந்த இடம்? சேவையில் அதிருப்தி.. Ookla அறிக்கை..
இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு ஆக்டோபர் மாதம் 5ஜி (5G) சேவை அறிமுகம் செய்யப்பட்டது. ஏர்டெல் (airtel), ஜியோ (jio) நிறுவனங்கள் தற்போது இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. அதேபோல் வோடபோன் ஐடியா (vi) நிறுவனம் இன்னும் 6 மாதங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறியுள்ளது.
அதேசமயம் பிஎஸ்என்எல் (Bsnl) நிறுவனம் இன்னும் 4ஜி சேவையைக் கூட அறிமுகம் செய்யவில்லை. அதாவது இந்நிறுவனம் கூடிய விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்றும், அடுத்த ஆண்டு 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவை பயன்பாடு குறித்த ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மிகவும் பிரபலமான Ookla நிறுவனம் தான் இந்த 5ஜி சேவை பயன்பாடு குறித்த தகவலை வெளியிட்டது. குறிப்பாக நாட்டில் 5ஜி சேவை கிடைக்கப் பெறுவது குறித்த தகவல், இணைப்பு வேகம், டவுன்லோடு வேகம், பயனர்கள் திருப்தி போன்றவை இதில் அடங்கியுள்ளது. 5ஜி சேவை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் 5ஜி டவுன்லோடு வேகத்தைப் பொறுத்தவரையில் உலக அளவில் இந்தியா 14-வது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் இருந்த டவுன்லோடு வேகத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் நொடிக்கு 301.86 மெகாபைட் என டவுன்லோடு வேகம் இருந்துள்ளது. அப்லோட் வேகம் நொடிக்கு 18.93 மெகாபைட்டாக இருந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு நாட்டில் 5ஜி சேவை பெறுவதும் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 52.0 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இருந்தபோதிலும் சேவையின் தரம், கஸ்டமர் கேர், விலை போன்ற காரணங்களால் 5ஜி சேவை பயன்படுத்தும் பயனர்கள் திருப்தி அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த ஆண்டு 5ஜி சேவையை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை லட்சக் கணக்கில் உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம் ரூ.10,000 முதல் ரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 5ஜி போன்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் 4ஜி எல்டிஇ சேவையை விட இந்த 5ஜி சேவை மூலம் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் மொபைல் கேமிங் அனுபவங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 4 லட்சம் 5ஜி பேஸ் ஸ்டேஷன் என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. குறிப்பாக இதன் மூலம் உலக அளவில் 5ஜி சேவை கட்டமைப்பில் வேகமான முன்னேற்றத்தை இந்தியா கண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அண்மையில் கூட ஐபிஎல் 2024 போட்டிகளை பார்க்கப் பல சலுகைகளை ப்ரீபெய்ட் திட்டங்களில் வழங்கின இந்த இரண்டு நிறுவனங்கள். குறிப்பாக இந்நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளன.


Click it and Unblock the Notifications