புது ரூல்ஸ்.. ஜூன் 1 முதல் அமல்.. பேலன்ஸ் இல்லாத வங்கி கணக்கு.. யூஸ் பண்ணாத கணக்கு.. மொத்தமா மூடப்படும்!
பேலன்ஸ் இல்லாத வங்கி கணக்குகள், மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கி கணக்குகள் அனைத்தும் மொத்தமாக மூடப்பட இருக்கிறது. இப்படி இருக்கும் வங்கி கணக்குகளுக்கு மே 31ஆம் தேதிக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது, வங்கி வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு பெரும் தொல்லையாக இருப்பது, இந்த மினிமம் பேலன்ஸ் விதிகள்தான். இது வங்கிக்கு வங்கி மாறினாலும், அதை பராமரிக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படுவதை யாராலும் மாற்ற முடியாது. இதனால், வங்கியில் குறிப்பிட்ட தொகையை எப்போதும் இருப்பில் வைத்து கொள்ள வேண்டி இருக்கிறது.

பல வாடிக்கையாளர்கள் இதை கண்டு கொள்ளலாமல், அவர்களது வங்கி கணக்கில் பணமே இல்லாமலேயே வைத்திருப்பார்கள். அதேபோல வங்கி கணக்கை தொடங்கிவிட்டு, பல ஆண்டுகள் அதில் எந்தவித பரிவர்த்தனைகளையும் செய்யாமலும் இருப்பார்கள். இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் விதமாக புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த விதிகள் மூலம் பணமே இல்லாத வங்கி கணக்குகள், 3 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கி கணக்குகள் மூடப்பட இருக்கின்றன. இப்படி செய்யப்படாமல் இருக்க கேஒய்சி (KYC) ஆவணங்களை சமர்பிக்க மே 31ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
எந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு இது பொருந்தும்? இந்த புதிய விதிகள் பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு தொடங்கிவிட்டு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக (ஏப்ரல் 30 2024ஆம் ஆண்டு வரையில்) பயன்படுத்தாமல் இருந்தால், அது ஜூன் 1ஆம் தேதியில் மூடப்படும்.

அதேபோல பணமே இல்லாத கணக்குகளும், ஜீரே பேலன்ஸ் இருக்கும் கணக்குகளும் ஜூன் 1ஆம் தேதியில் இருந்து மூடப்படும். ஆனால், டீமேட் கணக்குகளுடன் (DEMAT Accounts) இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள், லாக்கர்கள் (Lockers), மாணவர்கள் உள்பட 25 வயதுக்குட்பட்டவர்களின் வங்கி கணக்குகள், மைனர் வங்கி கணக்குகள் மூடப்படாது.
ஆகவே, பிஎம்ஜேஜேபிஒய் (PMJJBY), பிஎம்எஸ்பிஒய் (PMSBY), எஸ்எஸ்ஒய்/ஏபிஒய் (SSY/APY) மற்றும் டிபிடி (DBT) கணக்குகள் மூடப்படாது. அதேபோல கோர்ட் அல்லது வருமான வரித்துறையால் முடக்கப்பட்ட கணக்குகளும் மூடப்படாது. இந்த கணக்குகள் அல்லாத மற்ற வங்கி கணக்குகள் அனைத்துக்கும் புதிய விதிகள் பொருந்தும்.
இப்போது வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? உங்களது வங்கி கணக்கு மூடப்படாமல் இருக்க வேண்டுமானால், அதை செயலற்ற (Inoperative) கணக்கில் இருந்து ஆக்டிவேட் செய்ய வேண்டும். மீண்டும் அதில் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் மே 31ஆம் தேதிக்குள் கேஒய்சி ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
அதாவது, பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மின்சார கட்டண சீட்டு போன்ற ஆவணங்களை எடுத்து கொண்டு அருகில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையை அணுகி ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இதை செய்து முடித்துவிட்டால், ஜூன் 1ஆம் தேதியில் உங்களது கணக்கு மூடப்படாது.
செயலற்ற கணக்குகளை எப்படி தெரிந்து கொள்வது? உங்களது வங்கி கணக்கு செயலற்ற நிலைக்கு சென்றுவிட்டதா என்பதை அறிய https://www.pnbindia.in/inoperactive-accounts.aspx பக்கத்துக்கு செல்லுங்கள். அதில் உங்களது பெயர் (வங்கி கணக்கில் கொடுக்கப்பட்டது) மற்றும் முகவரி கொடுங்கள். இப்போது, உங்களது கணக்கில் ஸ்டேட்டஸ் தெரிந்துவிடும். வரும் நாட்களில் மற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கும் கொண்டுவரப்படலாம்.


Click it and Unblock the Notifications








