Google Maps அடிக்கடி யூஸ் பண்றீங்களா.. அப்போ இந்த 7 அம்சங்களைக் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
உலகம் முழுவதும் அதிக மக்கள் கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியை பயன்படுத்துகின்றனர்.காரணம் என்னவென்றால் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்வோருக்குப் பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ். குறிப்பாக இந்த கூகுள் மேப்ஸ் செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய அம்சங்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
அதேபோல் கூகுள் மேப்ஸ் ஒரு வரைபடம் மட்டுமல்ல, பயணத்தில் போது நமக்குப் பயனுள்ள பல தகவல்களை வழங்கும் செயலி ஆகும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கூகுள் மேப்ஸ் செயலியில் கிடைக்கும் சில முக்கிய அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

நேவிகேஷன்: கூகுள் மேப்ஸ் செயலியில் அதிக மக்கள் பயன்படுத்துவது நேவிகேஷன் அம்சமாகும். குறிப்பாக நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை மட்டும் குறிப்பிட்டால் போதும், தெளிவான வழியை இது காட்டும். தினமும் அடிக்கடி இந்த அம்சத்தை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ராஃபிக் அப்டேட்ஸ்: கூகுள் மேப்ஸ் செயலியில் உள்ள ட்ராஃபிக் அப்டேட் தகவல் மூலம் நீங்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். அதாவது இது எந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது போன்ற தகவல்களை முன்கூட்டியே வழங்குவதால், அந்த வழிகளைத் தவிர்ப்பதன் மூலம் உங்களது நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
ஸ்பீடு அலர்ட் (Speed Alert): போக்குவரத்து விதியில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை விட வேகமாக வாகனம் ஓட்டினால், கூகுள் மேப்ஸின் வேக எச்சரிக்கை உங்களை எச்சரிக்கும். இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்ய கூகுள் மேப்ஸ் செயலியில் செட்டிங்க்ஸ் பிரிவுக்குச் சென்று வேக எச்சரிக்கையை ஆன் செய்யவும்.
ஸ்ட்ரீட் வியூ (Street View): கூகுள் மேப்ஸ் செயலியில் ஸ்ட்ரீட் வியூ அம்சம் மூலம் நீங்கள் விரும்பிய பகுதியின் 360 டிகிரி காட்சியையும் பார்க்கலாம். குறிப்பாக தேடிய இடத்தைப் பற்றி துல்லியமாகத் தெரிந்துகொள்ள இது உதவும்.
குறுகலான பாதையைத் தவிர்க்கலாம் (Avoiding Narrow Roads): அதாவது நீங்கள் வழக்கமான பாதையில் செல்லாமல் ஒரு புதிய பாதையில் செல்லும் போது சில நேரம் குறுகலான பாதைகளில் நாம் மாட்டிக் கொள்ள நேரிடும். இதனைத் தவிர்க்க தான் சமீபத்தில் ஒரு புதிய வசதியைக் கூகுள் மேப்ஸ் கொண்டுவந்தது. அதாவது இந்த வசதியின் மூலம் நாம் செல்லும் பாதையில் குறுகலான இடம் இருக்கிறதா என்பதைக் கணித்து மேப்ஸ் நமக்குச் சொல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த வசதியை ஏஐ (AI) மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறது கூகுள். அதாவது ஏஐ வசதியானது சாட்டிலைட் மேப்ஸ், ஸ்ட்ரீட் வியூ படங்கள் மற்றும் ஒரு சாலை குறித்த கூடுதல் தகவல்களைச் சேகரித்து அது குறுகலான பாதையா இல்லையா என்பதனை பயனாளர்களுக்குக் கணித்துச் சொல்லுமாம். மேலும் இந்த வசதி இந்தியாவில் சில முக்கியமான நகரங்களில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நகரங்களிலும் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிளைஓவர் அலர்ட் (Flyover Alerts): நெரிசல் அதிகமாக உள்ள நகரச் சாலைகளில் பயணம் செய்யும் போது, ஒரு ஃபிளைஓவர் வந்தால் மேலே செல்ல வேண்டுமா அல்லது கீழே செல்ல வேண்டுமா என்ற குழப்பம் வரும். சில சமயங்களில் இந்த சிறிய தவறான முடிவால் பல கிமீ கூடுதல் பயணம் செய்த நிகழ்வுகளும் பலருக்கும் நிகழ்ந்திருக்கும். இந்த மிகப்பெரிய பிரச்சனையைத் தீர்க்க கூகுள் மேப்ஸ் செயலியில் ஃபளைஓவர் அலர்ட் என்ற வசதியை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது கூகுள். இந்த ஃபிளைஓவர் வசதி மூலம் நாம் மேலே செல்ல வேண்டுமா அல்லது ஃபிளைஓவருக்கு கீழே செல்ல வேண்டுமா என்பதனை மேப்ஸே தெளிவாகக் கூறிவிடும்.
சார்ஜிங் ஸ்டேஷன்கள்(Locating EV Charging Stations): இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயனாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், எங்கெல்லாம் எலெக்ட்ரிக் வாகன சார்ஜர்கள் இருக்கின்றன என்கிற தகவலைக் கூகுள் மேப்ஸ் மூலம் எளிமையாகத் தெரிந்து கொள்ள முடியும். அதுவும் சார்ஜரின் இருப்பிடம் பற்றி தகவல் மட்டுமின்றி அங்கு என்ன விதமான பிளக் டைப் இருக்கிறது. தற்போது அது பயன்பாட்டில் இருக்கிறதா இல்லையா போன்ற தகவலையும் வழங்கும் கூகுள் மேப்ஸ்.


Click it and Unblock the Notifications