தரமான கன்டென்ட் மேடம்! ChatGPT எழுதிய வார்த்தைகளை படித்த பிரதமர்! அதிர்ந்துபோன நாடாளுமன்றம்!
சாட்ஜிபிடி (ChatGPT) மூலம் எழுத்தப்பட்ட உரையை டென்மார்க் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஒரு நாட்டின் பிரதமர், இப்படி சாட்ஜிபிடியின் உரையை நிகழ்த்த காரணம் என்ன? அப்படி என்ன வார்த்தைகள் அந்த உரையில் இடம்பெற்றிருந்தன உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
அண்மைகாலமாக சாட்ஜிபிடியின் அதீத வளர்ச்சியை நாம் ஒவ்வொருவரும் பார்த்துவருகிறோம். நாள்தோறும் தினுசு தினுசாக சாட்ஜிபிடி குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன. ஓப்பன் ஏஐ (Open AI) மூலம் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி, வெறும் சில மாதங்களில் மிகப்பெரும் உச்சத்தை எட்டிவிட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சாட்ஜிபிடியின் வருகை, உலகின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களையே ஏஐ (AI) சாட்பாட்களை உருவாக்க தூண்டிவிட்டுள்ளது.

இப்போது, கூகுள் (Google), மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனங்களும் ஏஐ சாட்பாட்களை உருவாக்கி வெளியிட்டுள்ளன. அப்படி எங்கு பார்த்தாலும் சாட்ஜிபிடி ஆதிக்கத்தை காணமுடிகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது அசைன்மென்ட்களை எழுத சாட்ஜிபிடியை பயன்படுத்துகின்றனர். ஏன்? பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர்கள் கூட ஆய்வுகள் நடத்த சாட்ஜிபிடியின் உதவியை நாடுகின்றனர்.
கலை, கணிதம், அறிவியல் என எந்தத் துறையில் இருந்து, எந்த கேள்வியை கேட்டாலும் சாட்ஜிபிடி ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்களை அளிக்கிறது. அந்த வகையில், கவிதை முதல் கம்ப்யூட்டர் கோடிங் வரையில் சாட்ஜிபிடி வழங்கிவருகிறது. இந்த சாட்ஜிபிடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எந்த கட்டணமும் கிடையாது என்பதால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்த சாட்ஜிபிடி வெகுசன மக்களை கடந்து இப்போது அரசியல்வாதிகளின் வீட்டிற்குள்ளேயும் நுழைந்துவிட்டது. ஆம், டென்மார்க் பிரதமர் (Denmark PM) மெட்டே ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) சாட்ஜிபிடியை பயன்படுத்தியது மட்டுமல்லாமல், அதன் மூலம் தயாரிக்கப்பட்ட உரையை டென்மார்க் நாடாளுமன்றத்தில் (Denmark Parliament) பேசியிருக்கிறார். ஆனால், அந்த உரையை கேட்ட உறுப்பினர்கள், அவரை பாராட்டவே செய்திருக்கிறார்கள்.
அதாவது, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தனது உரையின்போது, "இந்த நாடாளுமன்றத்தை வழிநடத்துவது என்பது கௌரவமாக உள்ள அதே வேளையில் மிகவும் சவாலாகவும் உள்ளது. டென்மார்க்கின் எதிர்காலத்துக்காக கட்சிகளை கடந்து ஒத்துழைப்புடன் கடினமாக உழைத்து வருகிறோம். காலநிலை மாற்றத்துக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
குடிமக்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படுவதை உறுதி செய்துவருகிறோம். கடந்தாண்டு பல்வேறு சவால்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்திருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமை உடன் செயல்பட்டதை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்றார். இதை பேசிய பின்பு, மெட்டே ஃபிரடெரிக்சன் கூறுகையில், "இப்போது நான் படித்த வார்த்தைகள் என்னிடம் இருந்து வரவில்லை. வேறு எந்த மனிதராலும் எழுதப்படவும் இல்லை. இது சாட்ஜிபிடி மூலம் எழுதப்பட்ட வார்த்தைகளாகும்.
இந்த வார்த்தைகள், அரசாங்கம் உருவாக்கும் உரையைப்போல, இல்லையென்றாலும் செயற்கை நுண்ணறிவு நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆனால், அதே நேரத்தில் பயமுறுத்தவும் செய்கிறது. இந்த நேரத்தில் நாம் செயற்கை நுண்ணறிவு குறித்து கவலை கொள்ள வேண்டும். கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். சாட்ஜிபிடியின் வளர்ச்சி குறித்த கவலையை சாட்ஜிபிடி மூலமாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரிவித்துள்ளார்.
இதனால், அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு மீதான கட்டுப்பாடுகள் விதிப்பு குறித்த எண்ணத்தை உலக நாடுகளிடையே, இவரது பேச்சு ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications