அப்படியென்ன ஆர்டர் அது? 4 ஆண்டுகள் கழித்து வந்த பார்சல்! துள்ளிக்குதிக்கும் கஸ்டமர்! என்ன காரணம்?
இப்போதெல்லாம், ஆன்லைனில் ஆர்டர் போட்ட பிறகு, ஒரு நாள் தாமதமானால் கூட, அந்த ஆர்டரை கேன்சல் செய்யும் பழக்கம் நம்மிடையே வந்துவிட்டது. ஆனால், டெல்லியில் ஒருவர் நான்கு ஆண்டுகள் காத்திருந்து ஒரு பார்சலை பெற்றுள்ளார். இந்த பார்சல் 2019ஆம் ஆண்டே சீனாவிலிருந்து அனுப்பப்பட்டது.
இந்தியாவில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் வாழும் மக்கள் நேரடியாக கடைக்கு சென்று, பொருட்களை வாங்க விருப்பம் காட்டுவதில்லை. இதனால், அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) போன்ற ஆன்லைன் விற்பனை தளங்கள் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டிவிட்டன.

இதேபோல மக்களின் மனநிலையும் அதீத வளர்ச்சியை எட்டிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், முன்பெல்லாம், ஆன்லைனில் ஆர்டர் போட்டால், அந்த பார்சல் வரும் வரையில் பொறுமையாக காத்திருந்து வாங்குவார்கள். ஆனால், இப்போது ஒருநாள் தாமதமானால் கூட ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு, புதிதாக ஆர்டர் போட திட்டமிடுகின்றனர்.
இப்படி இருக்கையில் டெல்லியை சேர்ந்த ஒருவர் 2019ஆம் ஆண்டு மே மாதம் போட்ட ஆர்டருக்காக ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் காத்திருந்து அதை பெற்றுள்ளார். இந்த நான்கு ஆண்டுகளில் அதை கேன்சல் செய்யக்கூட அவர் சிந்திக்கவில்லை.
சீனாவில் விற்பனை செய்யப்படும் பொருள்களை மற்ற நாடுகளுக்கு டெலிவரி செய்யும் ஆன்லைன் தளங்களில் அலிஎக்ஸ்பிரஸ் (AliExpress) முதன்மையாக இருக்கிறது. இந்த தளத்தில் டெல்லியை சேர்ந்த நிதின் அகர்வால் என்பவர், 2019ஆம் ஆண்டு மே மாதம் ஒரு ஆர்டரை போட்டுள்ளார். அதோடு பணத்தையும் செலுத்தினார். அவரது ஆர்டர் டெலிவரிக்காக அனுப்பப்பட்ட நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக சீனாவில் சர்வதேச போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அடுத்த சில மாதங்களில், இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு மெல்லமெல்ல தளர்வாகி வரும் வேளையில், மத்திய அரசு 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் டிக்டாக் உள்ளிட்ட பெரும்பாலான சீன ஆப்களுக்கு தடைவிதித்தது. அதில், இவர் ஆர்டர் செய்த அலிஎக்ஸ்பிரஸ் ஆப்பும் இடம்பெற்றிருந்தது. இதன் காரணமாக, அலிஎக்ஸ்பிரஸ் சேவைகள் இந்தியாவில் தடைபட்டன.
பல்லாயிரக்கணக்கான ஆர்டர்கள் பாதியிலேயே தடைப்பட்டன. பலர் ஆர்டரை கேன்சல் செய்துவிட்டனர். அவற்றில் பெரும்பானானோருக்கு ஆர்டருக்கான பணம் திருப்பி கொடுக்கப்பட்டது. ஆனால், நிதின் அகர்வால் ஆர்டரை கேன்சல் செய்யாமல் இருந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் கடந்த ஜூன் 21ஆம் தேதி (புதன்கிழமை) அவருக்கு மற்றொரு டெலிவரி நிறுவத்தின் மூலம் பார்சல் வந்துசேர்ந்துள்ளது.
இதைக்கண்டு வியப்பும், ஆனந்தமும் அடைந்த நிதின் அகர்வால், தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த பார்சலின் போட்டேவை பதிவிட்டு தனது மனநிலையை வெளிப்படுத்தினார். அதில், "எப்போதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்! இதை, அலிஎக்ஸ்பிரஸில் (இப்போது இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது) 2019ஆம் ஆண்டு ஆர்டர் செய்தேன். இன்று பார்சல் டெலிவரி செய்யப்பட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த பார்சல் எங்கு தடைப்பட்டது, தாமதத்திற்கான காரணம் என்ன உள்ளிட்ட விவரங்களை, டெலிவரி செய்த நிறுவனம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. அதேபோல, நிதின் அகர்வால், என்ன ஆர்டர் செய்தார், என்ற தகவலையும் அவர் வெளியிடவில்லை. இதனால், அவரது ட்வீட்டில் பலர் கமெண்ட் செய்து அது என்ன? அது என்ன? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுபோல மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications