ஹிப்னாடிசம் பண்ணிட்டான் சார்.. 2 நிமிட பேச்சில் ரூ. 40 ஆயிரம் அனுப்ப வைத்த கொள்ளையன்!
சைபர் கிரைம் கும்பல்களிடம் இருந்து மக்கள் எவ்வளவோ முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், சில நிடங்களில் அலர்ட் ஆவதற்குள் ஏமாற்றப்பட்டு விடுகிறார்கள். அப்படி, டெல்லியில் 2 நிமிடம் மட்டுமே செல்போனில் பேசிய கொள்ளையன், ஒருவரிடம் இருந்து ரூ.40,000 பணத்தை அனுப்ப வைத்த சம்பவம் நடந்துள்ளது. 5 நிமிடத்துக்கு பிறகே தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் சைபர் கிரைம் கும்பல்கள், போலியான செல்போன் நம்பர்களை பயன்படுத்தி ஒருவருக்கு கால் செய்தோ, மெசேஜ் செய்தோ பார்ட் டைம் ஜாப் வாய்ப்பு உள்ளது, உங்களுக்கு லாட்டரி விழுந்துள்ளது, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் 10 மடங்கு லாபம் கிடைக்கும், உங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக விழுந்துள்ளது. இப்படி பல பொய்களை கூறி மக்களை நம்ப வைத்து அவர்களின் வங்கி தகவல்களை திருடி வருகிறது.

அதன்மூலம் பணத்தையும் கொள்ளையடித்து செல்கிறது. இப்படி நாள்தோறும் மக்களின் ஆசையை தூண்டி பண மோசடி நடந்துவருகிறது. இதுகுறித்த செய்திகள் வெளியாகி மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சைபர் கிரைம் கும்பல்கள், மக்களின் உணர்ச்சிகளை எளிதாக தூண்டிவிட்டு, நம்பவைத்து கழுத்தை அறுக்கிறது. அப்படியொரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவருக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து கால் வந்துள்ளது. இதை எடுத்து ரமேஷ் குமார் பேசியபோது, எதிரே இருந்த நபர், நீண்ட காலம் பழகியதை போல பேசி தொடங்கியுள்ளார். ரமேஷ் குமாரும், அந்த நபரை யாரோ பழைய நண்பர் என்று நம்பியிருக்கிறார். சில நிமிடங்கள் பேசிய ரமேஷ் குமாருக்கு எதிரே பேசியவரின் குரலும் தனக்கு தெரிந்த ஒரு டாக்டரின் குரலும் ஒரே மாதிரியாக இருப்பது போல தோன்றியுள்ளது.
இதை அந்த நபரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபரும் "ஆம், நான்தான் அது" என்று கூறிவிட்டு, பேச்சை தொடந்துள்ளார். அதன்பின் அந்த நபர், "நான் உனக்கு பணம் அனுப்புகிறேன். அதை பத்திரமாக வைத்திரு. மாலையில் மீண்டும் வாங்கிக்கொள்கிறேன்" என்று ரமேஷ் குமாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு ரமேஷ் ஒப்புக்கொள்ளவே, முதலில் செக்கிங் செய்கிறேன் என்ற பெயரில் அவருக்கு ரூ. 2 அனுப்பி வைத்துள்ளார்.
அப்போது, ரமேஷ் குமாருக்கு ஒரு லிங்க் வந்துள்ளது. அதைத் தொட்ட உடன், ரமேஷ் வங்கி கணக்கில் இருந்து ரூ. 20,000 பணம் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், அந்த நபருக்கு மீண்டும் கால் செய்து, விஷயத்தை தெரிவித்துள்ளார். அதற்கு அந்த நபர் "தெரியமால் நடந்துவிட்டது, இப்போதே பணத்தை அனுப்பிகிறேன்" என்று ரூ.20,000 அனுப்பப்பட்டதுபோல ஒரு லிங்கை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த லிங்கை தொட்ட உடனேயே மேலும் ரூ.20,000 பணம் பறிபோனது. இதையடுத்து மீண்டும் அந்த நபருக்கு கால் செய்தபோது, அவர் போன் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இப்போதுதான் ரமேஷ் குமாருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் வெறும் 5 நிமிடங்களில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து ரமேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார்.
குறிப்பாக அவர் தன்னை ஹிப்னாடிசம் செய்ததாகவும், பேசிய மயக்கி விட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன்பின், போலீசார், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் கால்களுக்கோ, மெசேஜ்களுக்கோ பதிலளிப்பதை தவிர்க்க வேண்டும். அப்படியே பேசினாலும் வங்கி, பணம் தொடர்பான தகவல்களை பகிரக்கூடாது என்று அறிவுரை வழங்கி அவரை அனுப்பிவைத்தனர். அவருக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.


Click it and Unblock the Notifications








