நட்புக்கே விபூதி.. AI மூலம் முகத்தையே மாற்றி ரூ.5 கோடி கொள்ளை!
ஹாலிவுட் கிரைம் படங்களில் வரும் காட்சிகளை பார்த்துவிட்டு, இதெல்லாம் நடக்கவே நடக்காது என்று நினைத்திருப்போம். ஆனால், அதுபோன்ற பல காரியங்களை ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் பல கொள்ளையர்கள் செய்துகாட்டி வருகின்றனர். அப்படி ஒருவருடைய உயிர் நண்பனின் முகத்தை மாற்றி ரூ.5 கோடி பணத்தை சுருட்டிய சம்பவம் இப்போது நடந்துள்ளது.
இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பேச்சாகவே இருக்கிறது. இதன் அதீத வளர்ச்சி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தங்க முட்டையிடும் வாத்து போல மாறியிருக்கிறது. இதனால் செயற்கை நுண்ணறிவை வைத்து எப்படி லாபம் பார்க்கலாம் என்பதில் மட்டுமே தொழில்நுட்ப நிறுவனங்கள் குறியாக இருக்கின்றன.

ஆனால், அதன் கருப்பு பக்கத்தை யாரும் கண்டுகொள்வதில்லை. ஏனென்றால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்த அளவுக்கு நன்மைக்காக பயன்படுத்தப்படுமோ, அதேவேளையில் தீமைக்கும் பயன்படுத்தப்படும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதை வைத்து டிஜிட்டல் கொள்ளையர்கள் அடுத்த லெவலுக்கு தங்களது திருட்டு சம்பவங்களை செய்துகாட்டி வருகின்றனர்.
அண்மையில், சீனாவில் ஒருவர் ஏஐ மூலம் போலியான ரயில் விபத்து செய்தியை உருவாக்கி தனது வெப்சைட்டில் வெளியிட்டு பல்லாயிரக்கணக்கான மக்களை நம்ப வைத்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பே ஏற்பட்டது. அதேபோல, அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலம் திரைக்கதை எழுதப்படுவதாக எழுத்தாளர்கள், கதையாசிரியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவங்கள் கூட நம்பும்படி இருக்கின்றன. ஆனால், அமெரிக்காவின் பிரபல பாடகரும், எழுத்தாளருமான ஃபிராங்க் ஓசன் (Frank Ocean) என்பவரின் குரலை ஏஐ மூலம் போலியாக உருவாக்கி அதை வைத்து பாடல்களை கம்போஸ் செய்து அதை விற்பனை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதை உங்களால் நம்ப முடிகிறதா?. இப்படி பல சம்பவங்கள் உலகின் எங்கோ ஒரு மூளையில் நாள்தோறும் நடந்துவருகின்றன.
இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சீனாவில் ஏஐ மூலம் ஒருவடைய முகத்தையே மாற்றி ரூ.5 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் மங்கோலியாவில் உள்ள பவோடவ் (Baotou) நகரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு புதிய மொபைல் நம்பரில் இருந்து வீடியோ கால் வந்துள்ளது. இவர் எடுத்தபோது எதிரே அவரது நெருங்கிய நண்பர் இருந்துள்ளார்.
இதனால் அவரும் பேச்சை தொடர்ந்துள்ளார். அப்போது எதிரே இருந்த அந்த நண்பர், தனக்கு ஒரு ஏலத்தை எடுக்க உடனடியாக 4.3 லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 5 கோடி) வேண்டும் என்றும் நாளையே திருப்பி கொடுக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதை நம்பி இவரும் உடனேயே பணத்தை அவர் சொன்ன வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பின் அந்த தொழிலதிபர், அவரது நண்பரை தொடர்பு கொண்டு ஏலம் எடுத்துவிட்டாயா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நண்பர், எந்த ஏலம் என்று கேட்டுள்ளார். அப்போதுதான், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீடியோ கால் வந்த மொபைல் நம்பருக்கு மீண்டும் கால் செய்துள்ளார். அப்போது அந்த நம்பர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன்பின் போலீசாரிம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பவோடவ் போலீசார் விசாரணை நடத்தியதில், ஏஐ மூலம் அந்த தொழிலதிபரின் நண்பரை போலவே போலியான முகத்தை உருவாக்கி வீடியோ கால் செய்து, ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதேபோல அவரது குரலும் ஏஐ மூலம் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பவோடவ் போலீசார் கூறுகையில், "ஒருவரது முகத்தைப் போலவே போலியாக உருவாக்கி வீடியோ, போட்டோக்களை உருவாக்க டீப்ஃபேக் (Deepfake) என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
இதை அனைவராலும் எளிதாக செய்துவிட முடியாது. ஆனால், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதை செய்து வீடியோ கால் மூலம் இப்போது பணம் கொள்ளையடிப்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளோம்" எனத் தெரிவித்தனர். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications