Facebook பயனர்களே உஷார்! நட்பு பேரில் நம்பிக்கை துரோகம்.. ரூ.20 லட்சம் இழந்த தம்பதிகள் கதை.!
சைபர் மோசடியில் கேரளாவை சேர்ந்த தம்பதியினர் ரூ.20 லட்சத்தை இழந்துள்ளனர். பேஸ்புக்கில் பேசி நட்பாகி நம்பிக்கையை உண்டாக்கி இந்த ஏமாற்ற செயலை செய்திருக்கிறது மோசடி கும்பல். விமான நிலையத்தில் சுங்க அனுமதிக்கு உதவி வேண்டும் என கூறி லீலைகளை செய்திருக்கிறது இந்த மோசடி கும்பல்.

நம்பிக்கை பேரில் நடக்கும் மோசடி
ஆன்லைன் மோசடிகள் குறித்து தொடர்ந்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே மோசடி செயல்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.
ஏராளமான ஏமாற்ற செயல்கள் நம்பிக்கையின் பேரில் தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அதன்படி தான் தற்போதும் நம்ப வைத்து ஒரு கும்பல் கேரள தம்பதிகளை ஏமாற்றி இருக்கிறது.

பாதிக்கப்பட்ட கேரள தம்பதிகள்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் இதுகுறித்து வெளியான தகவலின்படி, ஒரு NRI ஆணும் அவரது மனைவியும் பேஸ்புக்கில் நட்பாக பழகிய அந்நியர் ஒருவரிடம் ரூ.20 லட்சத்தை இழந்திருக்கின்றனர்.
கேரள தம்பதிகளிடம் பேஸ்புக் மூலம் அந்நியர் ஒருவர் நட்பு பாராட்டி உரையாடலை தொடங்கி இருக்கிறார். இந்த உரையாடலில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் வெளிநாட்டில் வசிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நட்பாக பேசி ஏமாற்றிய நபர்
மறுபுறம் பேசிய நபர் தொடர்ந்து நட்பாக பேசி நம்பிக்கையைப் பெற்று கேரள தம்பதிகளுக்கு நல்ல நண்பராக மாறி இருக்கிறார். தான் இந்தியாவுக்கு வரும் போது கண்டிப்பாக உங்களை சந்திப்பதாக அந்த நபர் கேரள தம்பதிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேஸ்புக்கில் பழகிய நண்பர், திடீரென கேரள தம்பதிகளை தொடர்பு கொண்டு தான் இந்தியாவுக்கு வந்துவிட்டதாகவும் சர்வதேச வருகையின் போது தனது பொருட்கள் சுங்கத்தில் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும் கூறி அதை மீட்பதற்கு நிதி உதவிகளை கேட்டுள்ளார்.

ரூ.3 கோடி டிமாண்ட் டிராஃப்ட்
புது டெல்லி விமான நிலையத்திற்கு வந்த போது சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அவர்கள் கைப்பறிய சாமான்களில் சுமார் ரூ.3 கோடிக்கான டிமாண்ட் டிராஃப்ட் இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
டிடியை சுங்கத்தில் இருந்து விடுவிக்கும் படி அந்த நபர் கேரள தம்பதிகளிடம் உதவி கோரி இருக்கிறார். மேலும் சுங்கத்தில் மாட்டிய அனைத்து பொருட்களையும் மீட்ட உடன் மொத்த பணத்தையும் திரும்பத் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்.

மோசடி செயல் அம்பலம்
அந்த நபர் கூறியதை உண்மை என்று கேரள தம்பதிகள் நம்பிய காரணத்தால் அந்த என்ஆர்ஐ கணவர் அவருக்கு உதவ ஒப்புக் கொண்டு, தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணத்தை ஏற்பாடு செய்து சுமார் ரூ.20.5 லட்ச பணத்தை அந்த நபருக்கு அனுப்பி இருக்கிறார்.
பணம் அனுப்பிய பிறகு குற்றம் சாட்டப்பட்டவரின் மொபைல் எண்ணை அந்த தம்பதியினர் தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரது மொபைல் எண் தொடர்நது ஸ்விட்ச் ஆஃப் என வந்திருக்கிறது. அப்போது தான் தநம்பதியினர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கின்றனர்.

சைபர் பிரிவு போலீஸார் விசாரணை
இதையடுத்து என்ஆர்ஐ கணவர் மற்றும் மனைவி எர்ணாகுளம் ஊரக சைபர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சைபர் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிஜிட்டில் இந்தியா
மோசடி செயல்கள் தொடர்ந்து ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. ஒரு மோசடி செயல் நடந்தால் அது அங்கு தானே நடந்திருக்கிறது இங்கு வரவில்லையே என்றும் யாருக்கோ நடந்திருக்கிறது நமக்கெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றும் அலட்சியம் காட்ட வேண்டாம். டிஜிட்டில் இந்தியாவில் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது அனைவரின் கடமையாகும்.

எச்சரிக்கை அவசியம்
டிஜிட்டல் யுகத்தில் பாதுகாப்பு என்பது மிக அவசியம். கையில் இருப்பது உங்கள் ஸ்மார்ட்போன் தான் என்றாலும் அதன் தகவலும் விவரங்களும் காற்றில் டேட்டாவாக அலை மோதிக் கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒரு விஷயம்.
கொரோனா பேரில் தொடங்கி பல்வேறு வகையில் மோசடி செய்தவர்களின் குறி தற்போது மின்சார கட்டணத்தை நோக்கி திரும்பி இருக்கிறது. பில் பாக்கி இருப்பதாகவும் அதை செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என பயனர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பி மோசடி செயல்கள் நடந்து வருகிறது எனவே எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியம்.


Click it and Unblock the Notifications








