CoWin டேட்டா லீக்! மக்களின் ஆதார், பான், மொபைல் நம்பர்கள் கசிவு! இனிமே என்னவாகும்?
மத்திய அரசின் கோவின் (CoWin) ஆப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த மக்களின் மொபைல் நம்பர், ஆதார் நம்பர், பிறந்த தேதி, பான் நம்பர், ஆகிய தகவல்கள் டெலிகிராமில் (Telegram) கசிந்துள்ளது. முக்கிய டேட்டாக்கள் கசிந்ததால் மிகப்பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
மத்திய அரசு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. இதன் மூலம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்த தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ், விமானம், ரயில், பேருந்துகளில் பயணம் செய்ய கட்டாயமாக்கப்பட்டதால், அதனை மத்திய அரசின் கோவின் ஆப் மூலம் மக்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனால், மக்கள் தங்களது மொபைல் நம்பர் (Mobile Number), பான் நம்பர் (PAN Number), பாஸ்போர்ட் நம்பர் (Passport Number), வாக்காளர் அடையாள அட்டை (Voter ID), ஆதார் நம்பர் (Aadhaar Number), பிறந்த தேதி (Date of Birth) உள்ளிட்ட விவரங்களை கொடுத்து, தடுப்பூசி சான்றிதழை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வந்தனர்.
இந்த டேட்டாக்களை பயன்படுத்தி மத்திய அரசும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து வந்தது. சொல்லப்போனால், நாட்டில் 80 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களில் 40 கோடிக்கும் அதிகமானோர், கோவின் ஆப் மூலம் கரோனா சான்றிதழை டவுன்லோட் செய்துள்ளனர். இதனால் மிகப்பெரும் டேட்டா இருப்பிடமாக கோவின் ஆப் இருக்கிறது.
இந்த சூழலில், கோவின் ஆப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த டேட்டாக்கள் அனைத்தும் டெலிகிராமில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் மக்களிடையே மிகப்பெரும் அச்சம் கிளம்பியிருக்கிறது. ஏனென்றால், கசிந்த டேட்டாக்கள் அனைத்தும், வங்கிகளுடன் நேரடி தொடர்புடையது. இதனால் சைபர் கிரைம் கும்பல்களுக்கு கொள்ளையடிக்க தீனி போட்டது போல, இப்போது நடந்திருக்கிறது.
முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம், அவரது மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரம், , காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளின் டேட்டாக்களும் இதில் லீக்காகி விட்டன. இதனால், எதிர்க்கட்சிகள் மோடி அரசை கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டன. இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இருப்பினும், இதுகுறித்த விசாரணையை தொடங்கிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, டெலிகிராம் பாட் (Telegram Bot) மூலம் டேட்டா கசிந்திருப்பது தெரியவந்துள்ளது. இவ்வளவு பெரிய டேட்டா கசிவு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல, இதற்கு மோடி அரசு மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனால், என்ன பின்விளைவுகள் வரும் என்பதை மத்திய அரசின் அறிக்கையை வைத்தே சொல்ல முடியும். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








