UPI சேவைக்குள் புது அமெரிக்க கம்பெனி.. 2022-ல் துரத்தப்பட்ட அதே கம்பெனி.. Google Pay, PhonePe உஷாரு!
ஏற்கனவே இந்திய யுபிஐ (UPI) சந்தையானது பல புதிய நுழைவுகளால் நாளுக்கு நாள் பூதாகரமாக வளர்ச்சி அடைந்துகொண்டே போகிறது. இதன் விளைவாக கூகுள் பே மற்றும் போன்பே ஆகிய 2 முக்கிய யுபிஐ தளங்களும் தங்களுடையய பயனர்களை பகிர வேண்டிய மற்றும் இழக்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையில் அமெரிக்காவை தளமாக கொண்ட கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான காயின்பேஸ் (Coinbase) ஆனது, இந்தியாவை விட்டு வெளியேறிய 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய சந்தைக்குள் மீண்டும் நுழைய தயாராகி வருவது போல் தெரிகிறது. கேட்ஜெட்ஸ் 360 வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, காயின்பேஸ் நிறுவனமானது, யுபிஐ உடன் இணைக்கப்பட்ட சேவைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியமான கூட்டாளர்களுடன் கலந்துரையாடலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நினைவூட்டும் வண்ணம் காயின்பேஸ் நிறுவனமானது முதலில் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் யுபிஐ அடிப்படையிலான கிரிப்டோ பரிவர்த்தனைகளை செயல்படுத்த முயற்சித்தது. இருப்பினும், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவானது (National Payments Corporation of India) இந்நிறுவனம் தொடங்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அதை இடைநீக்கம் செய்தது.
தற்போது காயின்பேஸ் நிறுவனமானது மீண்டும் இந்தியாவிற்குள் வர சாத்தியமான கூட்டாண்மைகளை ஆராய, இந்திய கிரிப்டோ நிறுவனங்களுடன் கலந்துரையாடலை தொடங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக, இந்நிறுவனத்தின் அதிகாரிகள் 2025 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாகவும் கேஜெட்ஸ் 360-யின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க, காயின்பேஸ் நிறுவனமானது முதலில் நாட்டின் நிதி நுண்ணறிவு பிரிவில் (FIU) பதிவு செய்ய வேண்டும். மார்ச் மாதத்தில், இந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் எப்ஐயு அதிகாரிகளை சந்தித்து பதிவு செயல்முறை பற்றிய விரிவான புரிதலை பெற திட்டமிட்டுள்ளனர். இருந்தாலும் இதற்கான ஒப்புதல் கிடைக்க பல மாதங்கள் ஆகலாம், இன்னும் சொல்லப்போனால் இது ஆண்டின் இறுதி வரை நீட்டிக்கப்படலாம்.
இந்நிறுவனம் அதன் யுபிஐ-எனேபிள்டு கிரிப்டோ பரிவர்த்தனைகளை ஆதரிக்க, கேஒய்சி சரிபார்ப்பு போன்ற முக்கிய சேவைகளுக்காக உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டு சேர வேண்டும். இது கடந்த 2022 ஆம் ஆண்டில் அதன் முந்தைய முயற்சியின் போது கவனிக்கப்படாத ஒரு முக்கியமான படியாகும். ஆனால் இம்முறை காயின்பேஸ் நிறுவனமானது சரியாக காய் நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இன்ஃபிபீம் அவன்யூஸின் (Infibeam Avenues) துணை நிறுவனமான ரெடிஃப்பே (RediffPay) இந்திய யுபிஐ சந்தைக்குள் நுழைவதும், இது நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதும் உறுதிசெய்யப்பட்டது. இதற்காக ரெடிஃப்.காம் (Rediff.com) நிறுவனமானது, என்பிசிஐ (NPCI) இடமிருந்து இந்தியாவிற்கான தேர்ட் பார்ட்டி தரப்பு அப்ளிகேஷன் ப்ரொவைடர் (Third Party Application Provider - TPAP) உரிமத்தை பெற்றுள்ளது.
ரெடிஃப்.காம் வழியாக கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, ரெடிஃப்பே-வின் யுபிஐ சேவைக்கு ஆக்சிஸ் வங்கி ஆனது பேமெண்ட் சிஸ்டம் வழங்குநர் (Payment System Provider) பேங்க் ஆக செயல்படும். மேலும் இது பயனர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கிரெடிட் மற்றும் வெல்த் மேனேஜ்மென்ட் தயாரிப்புகள் உட்பட பலவிதமான புதிய நிதி சேவைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
ரெடிஃப்பே ஆனது ரெடிஃப்,காம் வலைத்தளத்தின் கணிசமான வெப் டிராபிஃக்கையும், இன்ஃபிபீம் அவன்யூஸின் ஃபின்டெக் நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி, நாம் எதிர்பார்ப்பதை விட வேகமான வளர்ச்சி மற்றும் பிரபலத்தன்மையை அடையும் என்றும், இது பாதுகாப்பான மற்றும் திறமையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான யூசர் பிரென்டலி பிளாட்ஃபார்மை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
ரெடிஃப்ஒன் (RediffOne) அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெடிஃப்ஒன் மற்றும் ரெடிஃப்பே ஆகிய இரண்டும் எங்களுடைய பயணத்தின் முக்கிய தூண்கள் ஆகும் மற்றும் அளவிடக்கூடிய, உயர்-வளர்ச்சி எதிர்காலத்திற்கான களத்தை அமைக்கின்றன. மேலும் ரெடிஃப் வழியாக எங்கள் வருவாயில் 2-4 சதவீத பங்களிப்பை எதிர்பார்க்கிறோம், வரவிருக்கும் ஆண்டுகளில் இது 10% ஆக வளர வாய்ப்புள்ளது என்று விஷால் மேத்தா (நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்) கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








