யார்ரா நீங்கலாம்.. ChatGPT மூலம் போலியாக ரயிலையே கவிழ்த்த சீனாக்காரன்.. தட்டித்தூக்கிய போலீஸ்!
எதற்கெல்லாம் சாட்ஜிபிடியை (ChatGPT) பயன்படுத்தலாம், பயன்படுத்தக்கூடாது என்ற ஒரு கட்டுப்பாடில்லாமல் போய்விட்டது. சாட்ஜிபிடியை வைத்து நாள்தோறும் தினுசு தினுசாக குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. அந்த வரிசையில், சீனாவில் சோஷியல் மீடியா (Social Media) மீது அதீத ஆர்வம் கொண்ட ஒருவர் சாட்ஜிபிடியின் உதவியால் போலியாகவொரு ரயிலையே கவிழ்த்து, மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதுகுறித்த விவரம் இதோ.
ஓப்பன் ஏஐ (Open AI) மூலம் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மிகப்பெரும் மைல் கல்லை எட்டியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் சாட்ஜிபிடி பேச்சை காணமுடிகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர்கள் வரை சாட்ஜிபிடி பிரமலமடைந்துள்ளது. இந்த சாட்ஜிபிடியை வைத்து பலர் பணம் சம்பாதிக்க தொடங்கிவிட்டனர். ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எப்படியெல்லாம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு சாட்ஜிபிடி ஒரு எடுத்துக்காட்டாக மாறிவிட்டது.

ஒருபுறம் சாட்ஜிபிடியின் வருகை மாணவர்களுக்கு கோடிங் (Coding) எழுதுவது, கட்டுரை (Essay) எழுதுவது உள்ளிட்ட கல்வி சார்ந்த செயல்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மறுபுறம், சைபர் கும்பல் ஆசாமிகளுக்கு, அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் போலியாக ரிவ்யூ எழுவதற்கும், ஃபிஷிங் ( Phishing ) இமெயில்களை உருவாக்கி மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கும் பயன்பட்டுவருகிறது. இப்படி சைபர் கிரைம் கும்பல்கள் நாள்தோறும் புதுப்புது திருட்டு வழிகளை கண்டுபிடித்து வருகின்றனர்.
ஆனால், சீனாக்காரன் மூளையே மூளை என்பது போல, சீனாவின் கன்சு மாகாணத்தை (Gansu province) சேர்ந்த ஒருவர் சாட்ஜிபிடி மூலம் போலியாக ரயிலையே கவிழ்த்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. மே 8ஆம் தேதி கன்சு மாகாணத்தில் தீயாக ஒரு செய்தி பரவிவந்தது. அதில், பைஜியாஹாவ் (Baijiahao) ரயில் நிலையம் அருகே ரயிலொன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகவும், அதில் 20 பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியை பார்த்த உள்ளூர் மக்கள், தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் அதை பதிவிடத் தொடங்கிவிட்டனர். இதைக்கண்ட காங்டாங் கவுண்டி (Kongtong county) போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து சென்று பார்க்கையில், அப்படி எந்த ரயிலும் அங்கு விபத்துக்குள்ளாகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த செய்தியை பதிவிட்ட அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் கான்சு மகாணத்தை சேர்ந்த ஹாங் (Hong) என்பவருக்கு சொந்தமான வெப்சைட்டில் இருந்து அந்த செய்தி வெளியாகியிருப்பது தெரியவந்தது.
அதனடிப்படையில், அவரது இருப்பிடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சோஷியல் மீடியா மீது அதீத ஆர்வம் கொண்டவர் என்பதால், அதிக வீவ்ஸ் (Views) வர வேண்டும் என்பதற்காக போலியான செய்தியை வெளியிட்டதை ஒப்புக்கொண்டார். இதேபோல பல போலியான செய்திகளை அவர் வெளியிட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் வியப்பை ஏற்படுத்தும் விஷயம் என்னவென்றால், போலி செய்திகள் அனைத்தையும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி எழுதியுள்ளார் என்பதுதான். இப்போது அவரது வெப்சைட் முடக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட்போன் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்போதெல்லாம், வீவ்ஸ்களுக்காக போலியாக செய்திகள் வெளியிடப்படுவது அதிகரித்துவருகிறது. யூடியூப், ஃபேஸ்புக் போன்ற முக்கிய தளங்களில் பலர் போலிக்கணக்குகள் மூலம் அதை செய்துவருகின்றனர். இப்போது சாட்ஜிபிடி மூலம் செய்ய தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications








