பெயர் பிரச்சனை: சீனாவில் ஆப்பிள் ஐபேட்கள் பறிமுதல்

சீனாவில் பெயர் காப்புரிமையை காரணம் காட்டி ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஐபேட்களை அந்நாட்டு அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர்ந்த தொழில் நுட்பங்களை கொடுத்து சிறந்த இடத்தை பிடித்து இருக்கும் ஆப்பிள் நிறுவனம் இன்னும் அதி நவீன தொழில் நுட்பத்தினை வழங்கி வருகிறது. உலக அளவில் சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் நிறுவனம் என்ற நன் மதிப்பையும் பெற்றுள்ளது ஆப்பிள்.
இந்த நிலையில், சீனாவை சேர்ந்த ஷென்ஷென் ப்ரோவியூ என்ற நிறுவனம் கடந்த 2001 ம் ஆண்டு ஐபேட் என்ற பெயரை பதிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை காரணம் காட்டி ஆப்பிள் ஐபேட்களை சீனாவில் விற்பனை செய்யக்கூடாது என ஷென்ஷென் ப்ரோவியூ நிறுவனம் புகார் கொடுத்தது.
இதையடுத்து, பீஜிங் நகருக்கு அருகிலுள்ள ஷிஜிசுவாங் என்ற நகரிலுள்ள ஆப்பிள் விற்பனை நிலையத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஐபேட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, 20 நகரங்களில் விரைவில் சோதனை நடத்த இருப்பதாக ஷென்ஷென் ப்ரோவியூ நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவித்தனர். பெயர் காப்புரிமையை காட்டி சீனாவில் ஆப்பிள் ஐபேட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications