நிலா என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? நிலவில் பில்டிங் கட்டும் China.. 3டி பிரிண்டிங் ஆய்வு தொடக்கம்!
நிலவில் கட்டடங்கள் கட்டும் பணியை மேற்கொள்ள உள்ள சீனா (China) 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை (3D Printing Technology) கையில் எடுத்துள்ளது. வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
பொதுவாக நிலவில் கட்டடங்கள் கட்ட முடியுமா? அல்லது நிலவை உலக நாடுகள் சொந்தம் கொண்டாட முடியுமா? என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. விண்வெளியில் செயற்கைகோள்களை ( Satellites ) தவிர மீதம் உள்ள நிலா (Moon), கிரகங்கள் (Planets), சிறுகோள்கள் (Asteroids ) உள்ளிட்ட அனைத்தையும் எந்த நாடுகளும் சொந்தம் கொண்டாட முடியாது.

இதனை அனைத்து நாடுகளும் ஒப்புக்கொள்கின்றன. ஆனால், நிலவில் இருந்தோ, செவ்வாய் (Mars) கிரகத்தில் இருந்தோ எடுத்து வரப்படும் கற்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை அந்தந்த நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன.
அந்த வகையில், சீன நாட்டின் சாங்கி 5 (Chang'e 5) விண்கலம் நிலாவில் தரையிறங்கி அங்கிருந்து கல் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்துள்ளது. அதேபோல அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) தனது பெர்ஸெவேரன்ஸ் ரோவர் (Perseverance Rover) மூலம் செவ்வாய் கிரகத்தில் கல், மண் மாதிரிகளை சேகரித்து வருகிறது.
இவற்றை விரைவில் பூமிக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு நாடுகள் அடுத்தடுத்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், சீனா ஒருபடி மேலே சென்று நிலவில் கட்டடங்கள் கட்டும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே, நிலவில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணை வைத்து செங்கல் தயாரிக்க முடியுமா? அவ்வாறு தயாரித்தால் அதை வைத்து நிலவின் மேற்பரப்பில் எப்படி கட்டடங்கள் கட்டுவது என்பது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த கட்டடங்கள் நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ள விண்வெளி வீரர்கள் (Astronauts) தங்குவதற்காக கட்டப்பட உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பின் சீனா, வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சாங்கி (Chang'e) 6,7 மற்றும் 8 ஆகிய மூன்று விண்கலங்களை நிலவுக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த திட்டங்களில் விண்வெளி வீரர்களும் நிலாவுக்கு அனுப்பப்பட உள்ளனர். ஆகவே, இவர்கள் தங்குவதற்காக கட்டடங்களை கட்டும் திட்டத்தின் முதல்கட்ட பணிகளை சீனா தொடங்கியிருக்கிறது. நிலவின் மேற்பரப்பை 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் ஆராய்ந்து, எந்த பகுதியில் கட்டடங்களை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது குறித்து ஆய்வை தொடங்கியிருக்கிறது.
இந்த திட்டம் வெற்றியடைந்தால் நிலவில் கட்டடங்கள் கட்டும் முதல் நாடாக சீனா உருவெடுக்கும். இதனால் மற்ற நாடுகளும் நிலாவில் கட்டடங்கள் கட்டுவதற்கான திட்டங்களை தொடங்க வாய்ப்புள்ளது. அடுத்த 50 ஆண்டுகளில் நிலாவில் ஆய்வு செய்ய, கட்டடங்கள் கட்ட, அங்கிருந்து மாதிகளை எடுத்துவர சர்வதேச நாடுகள் ஒப்பந்தத்தை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும், நாசா உருவாக்கிவரும் ஆர்ட்டெமிஸ் 2 (Artemis 2) விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 4 வீரர்கள் நிலவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்த விண்வெளி வீரர்கள் குழுவில் நாசாவை சேர்ந்த ரீட் வைஸ்மேன் ( Reid Wiseman), விக்டர் க்ளோவர் ( Victor Glover), கிறிஸ்டினா ஹாம்மோக் கோச் (Christina Hammock Koch) மற்றும் கனேடியன் விண்வெளி நிறுவனத்தின் ஜெர்மி ஹேன்சன் (Jeremy Hansen) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications