இப்போ பேசு.. அரசியல் ரீதியிலான கேள்விகளுக்கு பதில் சொல்ல பயப்படும் சீனாவின் DeepSeek AI.. அப்படி என்ன கேள்வி?
அறிமுகமான வேகத்தில் சாட்ஜிபிடி (ChatGPT) கிளப்பிய அதிர்வலைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற அளவிற்கு சீனாவின் டீப்சீக் ஏஐ (DeepSeek AI) ஆனது அதகளம் செய்து கொண்டிருக்கிறது. ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி 4-ஐ விட மேம்பட்ட ஏஐ திறன்களை கொண்டிருந்தாலும் கூட, டீப்சீக் ஏஐ ஆனது அரசியல் ரீதியிலான சில முக்கிய கேள்விகளுக்கு பதில் அளிக்க தயங்குகிறது; பயப்படுகிறது என்றே கூறலாம்.
டீப்சீக் ஏஐ ஆனது தியனன்மென் சதுக்க படுகொலையை ஒப்புக்கொள்ள மறுக்கிறது மற்றும் அருணாச்சல பிரதேசம் தொடர்பான பிராந்திய மோதல்களை பற்றியும் விவாதிக்க மறுக்கிறது. இதுகுறித்த கேள்விகளுக்கு சரியான பதில்களை அல்லது போதுமான விளக்கங்களை அல்லது தரவுகளை அளிப்பதற்கு பதிலாக, டீப்சீக் ஏஐ சாட்பாட் ஆனது மன்னிப்பு கேட்கிறது.

தியனன்மென் சதுக்க படுகொலை (Tiananmen Square massacre) பற்றிய கேள்விக்கு, என்னை மன்னிக்கவும், இந்த கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. நான் உதவிகரமான மற்றும் பாதிப்பில்லாத பதில்களை வழங்கும்படி வடிவமைக்கப்பட்ட ஏஐ அசிஸ்டன்ட்" என்று டீப்சீக் பதில் அளித்துள்ளது.
இதேபோல், வடகிழக்கு எல்லைப்புற ஏஜென்சியின் மீதான அதிகாரம் (Authority over the North East Frontier Agency) பற்றி கேட்கப்பட்டபோதும் கூட டீப்சீக் ஏஐ கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இதுகுறித்த கேள்விக்கு "மன்னிக்கவும், அது எனது தற்போதைய எல்லைக்கு அப்பாற்பட்டது. வேற ஏதாவது பேசலாம்." என்று டீப்சீக் கேட்டுள்ளது.
ஆனால் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி ஆனது அருணாச்சல பிரதேசத்தை பற்றிய கேள்விகளுக்கு அருணாச்சலப் பிரதேசத்தை பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்கிறது. அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, பழங்குடியினரின் தாயகம், வளமான பல்லுயிர் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளை கொண்ட பகுதி என்று விவரிக்கிறது.
டீப்சீக்கின் இந்த நடவடிக்கை (பதில் கூறாமல் மன்னிப்பு கேட்கும் மற்றும் தட்டிக்கழிக்கும் நடவடிக்கை) ஆனது சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தகவல்களுக்கான டூல் ஆக பயன்படுத்தப்படலாம் என்கிற கவலையை இன்னும் அதிகரித்துள்ளது. தைவான், திபெத் மற்றும் சீனாவின் மனித உரிமைகள் போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளை தவிர்ப்பதன் மூலம் டீப்சீக் ஏஐ ஆனது கடுமையாக கட்டுப்படுத்தப்படுவதை வெளிப்படையாகவே அறிந்துகொள்ள முடிகிறது.
சில ஆய்வாளர்கள், டீப்சீக்கின் ஏஐ ஆனது ஒரு ட்ரோஜன் ஹார்ஸாக (Trojan horse) செயல்படலாம் என்றும், புவிசார் அரசியல் தொடர்பான பிரச்சினைகளில் (Geopolitical issues) சீனாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை முன்வைக்கும் போது பயனர் தரவை (User Data) நுட்பமாக சேகரிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
சென்டர் ஆப் இன்பர்மேஷன் ரெசிலியன்ஸின் (Centre for Information Resilience) இணை நிறுவனர் ஆன ரோஸ் பர்லி - கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் வற்புறுத்தலுக்காக சீனா அதன் தொழில்நுட்ப ஆதிக்கத்தை மீண்டும் ஆயுதமாக்கி உள்ளது என்று எச்சரித்து உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தியனன்மென் சதுக்கப் படுகொலை மற்றும் அருணாச்சலப் பிரதேசம் போன்ற டைட்டில்களில் பேசுவதற்கு டீப்சீக்கின் மறுப்பானது ரோஸ் பர்லி கருத்துக்கு வலுவூட்டுகிறது.
டீப்சீக்கின் ஆன்லைன் சேவைகளில் பெரிய அளவிலான சைபர் தாக்குதல்கள் நடக்கலாம் என்கிற அச்சம் காரணமாக டீப்சீக் சாட்பாட்டுக்கான புதிய பயனர் பதிவுகள் (New user sign-ups) மட்டுப்படுத்தப்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இனிமேல் சீனாவை அடிப்படையாக கொண்ட மொபைல் நம்பர்களை கொண்டிருந்தால் மட்டுமே டீப்சீக் சாட்பாட்டில் புதிய பயனராக பதிவு செய்ய முடியும் என்று அறிவிக்கபட்டுளளது
டீப்சீக் சந்தித்த பரவலான செயலிழப்புகளும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். வெளியான சில நாட்களிலேயே ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி ஏஐ-ஐ விஞ்சினாலும் கூட, டீப்சீக் நிறுவனத்தின் சிஸ்டம்கள் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டன, கடந்த திங்களன்று டீப்சீக்கின் ஏபிஐ மற்றும் வெப் சாட் சர்வீஸ் ஆகிய இரண்டும பெரிய அளவிலான செயலிழப்புகளை எதிர்கொண்டன.
ஏபிஐ சிக்கல் ஆனது நள்ளிரவிலேயே குறைந்த செயல்திறனுடன் செயல்பட்ட மறுகையில், வெப் சாட் சர்வீஸ் ஆனது மீண்டுவர பல மணிநேரம் ஆனது. டீப்சீக்கின் பிளாக்ஷிப் ஏஐ மாடலான டீப்சீக்-ஆர்1 மாடலுக்கான தேவை அதிகமாக இருப்பதால் தான் டீப்சீக் நிறுவனமானது புதிய பயனர் பதிவுகளுக்கான கட்டுப்பாட்டை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் போகும் போக்கை பார்த்தால் (குறிப்பாக பதில் சொல்லாமல் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இருந்தால்) டீப்சீக் ஆனது உலகளவில் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் என்பது போல் தெரிகிறது!


Click it and Unblock the Notifications








