அரசே சொல்லிருச்சு அததான் செஞ்சேன்: கொரோனா லீவ் லெட்டர்., உறைந்து போன ஆசிரியர்!
கொரோனா அறிகுறி இருப்பதாகவும் தனக்கு விடுமுறை வேண்டும் எனவும் சுவாரஸ்யமாக மாணவர் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழப்பு
சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா, அதற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி பிரிட்டன், ஸ்விட்சர்லாந்தில் முதல் முறையாக கொரோனா வைரஸால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 160 பேருக்கு கொரோனா
மேலும் ஸ்லோவேனியா, தென்னாப்பிரிக்கா, எகிப்து போன்ற நாடுகளிலும் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்க அரசு இந்திய மதிப்பில் 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு
இதில் ஈரானில் மட்டும் 3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. மேலும் அங்கு 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக 13 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது, 30 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது
சீனாவில் கொரோனா வைரஸ் 31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது. இந்த வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 3119 ஆக உயர்ந்துள்ளது.

புதியரக ஹெல்மெட்
புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஜனவரி மாதத்திற்கு பிறகு நேற்று மிகக்குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி புதிதாக 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கொரோனா நோயாளிகளை கண்டறியும் வகையில் சீனாவில் புதிய ரக ஹெல்மெட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவாமல் இருக்க உச்சக்கட்ட நடவடிக்கை
இந்த நிலையில் கொரோனா பரவாமல் இருக்க அனைத்து நாட்டு அரசாலும் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தொலைபேசி காலர்டியூன் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

விசாக்களை நிறுத்திய இந்தியா
அதேபோல் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் விசாக்களை இந்தியா நிறுத்தியுள்ளது. இது தவிர, தேவையில்லை என்றால் வெளிநாட்டிற்கு செல்வதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

8-ம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதம்
இந்நிலையில் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகக் கூறி, 8-ம் வகுப்பு மாணவன் ஒருவர் தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சுவாரஸ்ய தகவல்கள் குறித்து பார்க்கலாம்.

நான் நீண்ட விடுப்பு எடுத்து கொள்கிறேன்
நான் தங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். தற்போது, நாட்டில் கொரோனா வைரஸ் பரவிவருகிறது. அது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்கு சளி காய்ச்சல், அறிகுறி தெரிகிறது. எனவே, மற்ற மாணவர்கள் நலன்கருதி நான் நீண்ட விடுப்பு (Medical Leave) எடுத்துக்கொள்கிறேன்.

அரசு சுற்றறிக்கை பின்பற்றுகிறேன்
மேலும் சளி, காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அரசாங்கமும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆகையால், நான் மற்ற மாணவர்களின் நலன்கருதி நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாள்களை வருகை நாளாகப் பதிவுசெய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications