இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?
நீண்ட தாமதத்திற்குப் பிறகு, பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) 'Chennai bus app' என்ற ஒரு புதிய மொபைல் ஆப்ஸ் செயலியைச் சென்னை மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சென்னை பஸ் ஆப்ஸின் சிறப்பு என்னவென்றால், இனி பேருந்து நிலையங்களில் மக்கள் நீண்ட நேரம் பேருந்திற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. காரணம், இந்த புதிய ஆப்ஸ் MTC பேருந்துகளின் இருப்பிடத்தை நிகழ் நேர அடிப்படையில் லைவ் லொகேஷன் ஷேரிங் உடன் வழங்குகிறது. இந்த புதிய சென்னை பஸ் ஆப்ஸ் எப்படிச் செயல்படுகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

3,233 MTC பேருந்துகளின் இயக்கத்தை இனி நொடியில் தெரிந்துகொள்ளலாம்
சென்னையில் உள்ள சுமார் 3,233 MTC பேருந்துகளின் இயக்கத்தை இருப்பிட கண்காணிப்பு சாதனங்களுடன் கண்காணிக்க இந்த ஆப்ஸ் மக்களுக்கு உதவுகிறது. இந்த சென்னை பேருந்துகள் 602 வழித்தடங்கள் வழியாக இயக்கப்படுகின்றன மற்றும் இலக்குகள் உட்பட 6,026 நிறுத்தங்களில் நிறுத்தப்படுகின்றன. தினமும் சுமார் 25 லட்சம் பேர் MTC பேருந்துகள் மூலம் பயணிக்கின்றனர். COVID-19 தொடங்கியதிலிருந்து இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. தொற்றுநோய்க்கு முன்பு, தினமும் சுமார் 35 லட்சம் பேர் MTC பேருந்துகள் மூலம் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறியது என்ன?
மே 4 ஆம் தேதி, புதன்கிழமையன்று இந்த புதிய சென்னை பஸ் ஆப்ஸ் செயலியை அறிமுகப்படுத்திய தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில், "இதைப் பயன்படுத்தி, பயணிகள் ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் உள்ள அனைத்து எம்டிசி பேருந்துகளின் நேரலை இருப்பிடம், மதிப்பிடப்பட்ட வருகை நேரம் மற்றும் அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றைக் கண்டறிய முடியும். இது ஒட்டுமொத்த சென்னை மாநகர பேருந்து சேவையையும் மக்களின் கைக்குள் அடக்கியுள்ளது" என்று கூறினார்.

எப்படி பஸ் ரூட் மற்றும் நேரத்தைத் தெரிந்துகொள்வது?
இந்த செயலியானது மக்கள் ரயில் நிலையங்கள் மற்றும் நகரத்தில் உள்ள பிற முக்கிய இடங்களை எந்த தொந்தரவும் இல்லாமல் அடைய உதவுகிறது. ஒரு பயனர் 'பஸ் ரூட் (bus route)' விருப்பத்தை கிளிக் செய்து, வழித்தட எண்ணை உள்ளிடும்போது, இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் திரையில் காட்டப்படும். இரண்டு இடங்களுக்கு இடையே ஓடும் பேருந்துகளின் இருப்பிடத்தைக் காண, பயனர் பாதை விருப்பத்தை கிளிக் செய்து, அவை வரும் எதிர்பார்க்கப்படும் நேரத்தை அறிந்து கொள்ளலாம்.

பயணிகளின் பாதுகாப்பிற்காக SOS பட்டனும் வழங்கப்பட்டுள்ளதா?
இத்துடன், பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக இன்னும் சில அம்சங்களையும் இந்த சென்னை பஸ் ஆப்ஸ் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, அவசரநிலை ஏற்பட்டால், பயணிகள் தங்கள் தொடர்புகளுக்கு அல்லது காவல்துறை அதிகாரிகளுக்குப் பேருந்தின் செயலி மூலம் பேரிடர் சமிக்ஞைகளை அனுப்பலாம். இந்த பொத்தான் பயணிகள் சேர்த்த தொடர்பு எண்ணுக்கு ஒரு செய்தியை அனுப்பும். எளிதாக அணுகுவதற்கு ஆப்ஸ் திரையின் மேல் வலது மூலையில் SOS பட்டன் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பஸ் ஆப்ஸில் இருக்கும் டிரிப் பிளானர் அம்சம் என்ன செய்யும்?
பயன்பாட்டின் முகப்புத் திரையானது 1 கிமீ சுற்றளவில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களின் பெயர்களையும் பரிந்துரைக்கிறது. 'டிரிப் பிளானர் (Trip Planner)' அம்சத்தைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் இலக்கை அடையக் கூடிய பேருந்தின் வழித்தட எண்களை அறிந்து கொள்ளலாம். 'எங்களைத் தொடர்புகொள்ளவும் (Contact Us)' விருப்பத்தில் புகார் எண்கள் (வாட்ஸ்அப்/டெலிகிராம்) மற்றும் 31 பஸ் டிப்போ கிளை மேலாளர்களின் தொடர்புகளையும் காண்டாக்ட் செய்யலாம்.

உங்களுக்குப் பிடித்த வழித்தடத்தை ஃபேவரைட்டில் ஆட் செய்யலாம்
இதேபோல், பயணிகள் தங்களுக்குப் பிடித்த வழிகள் மற்றும் இடங்களை 'பிடித்தவை (Favourites)' விருப்பத்தைப் பயன்படுத்திச் சேமித்து வைத்து பின்னர் தேவைப்படும் போது எளிமையாகப் பயன்படுத்தவும் முடியும் என்பது சிறப்பானது. இந்த ஆப்ஸ் மக்களிடமிருந்து கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிறது. தற்போது, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே இந்த செயலி கிடைக்கிறது மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழி விருப்பங்களை இது கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'சென்னை பஸ் ஆப்ஸ்' செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.


Click it and Unblock the Notifications