வீட்டிலேயே 1000 லிட்டர் சானிடைசர் உருவாக்கி இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கும் சந்தானம்!
இந்த கொரோனா காலத்தில் பொதுமக்களில் பெரும்பாலானோர் ஹேண்ட் சானிடைசர் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாகக் குறைந்த சலுகைகளை பெரும் அடித்தட்டு மகள்களுக்கு உதவப் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆர்வலர்கள் அரசாங்கத்தை எதிர்பாராமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகின்றார். அப்படியான ஒரு ஆர்வலர் தான் 82 வயதான வி.சந்தானம் என்பவர், இவர் மக்களுக்காகத் தனது வீட்டில் என்ன செய்திருக்கிறார் என்று நீங்களே பாருங்கள்.

1000 லிட்டர் வரை ஹேண்ட் சானிடைசர் உருவாக்கம்
தோற்று நோய் காலத்தில் வெளியில் சென்று மக்களுக்கு உதவி செய்வது என்பது கடினமான ஒன்று, சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தாலும் கூட ஆபத்தாகவே கருதப்படுகிறது. வீட்டிலிருந்தபடியே மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் புதிய யுக்தியை கையாண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த 82 வயதான சமூக ஆர்வலர் வி.சந்தானம். 1000 லிட்டர் வரை ஹேண்ட் சானிடைசர் உருவாக்கும் ஆலையைத் தனது வீட்டின் கார் பார்க்கிங் இடத்தில் உருவாக்கியிருக்கிறார்.

இலவசமாக சானிடைசர் வழங்கும் சந்தானம்
குரோம்பேட்டில் உள்ள தனது வீட்டில் இந்த ஹேண்ட் சானிடைசர் கருவியை நிறுவி, தினமும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக இயற்கைமுறையில் உருவாக்கிய சானிடைசர்களை வழங்கி வருகிறார். இதனால் அப்பகுதியில் சானிடைசர் கிடைக்காமலிருந்த மக்களுக்குத் தினமும் சானிடைசர் தடையின்றி கிடைக்கும்படி செய்திருக்கிறார் சந்தானம். இதனால், ஏழை மக்கள் கரங்களுக்கும் சானிடைசர் இலவசமாக சென்றடைந்துள்ளது.

நோபல் ஈக்கோ சிஸ்டம்ஸ் உருவாக்கி கொடுத்த சானிடைசர் ஆலை
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு சானிடிசர் விநியோகித்துள்ளதாகச் சந்தானம் கூறியுள்ளார். இவரின் மகன் துபாயில் சமூக ஆர்வலராக பணியாற்றி வருகிறாராம், அவருக்கு சென்னையில் தெரிந்த நோபல் ஈக்கோ சிஸ்டம்ஸ் என்ற சானிடிசர் ஆலைகளை உருவாக்கும் உற்பத்தி நிறுவனத்துடன் பேசி சந்தானத்தின் வீட்டிலேயே சானிடைசர் ஆலையை நிறுவச் செய்திருக்கிறார்.

சானிடைசருக்கான மூலப்பொருள் இதுதான்
பலருக்கு சானிடைசர் வாங்க முடியாததால் இது நிறையப் பேருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து இதை உருவாக்கியுள்ளோம் என்று சந்தானம் கூறியுள்ளார். ராக்சால்ட் உப்பை முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தி எலெக்ட்ரோலிஸிஸ் முறைப்படி சானிடைசர் தயாரிக்கப்படுகிறது.

8 மணி நேரத்தில் 1000 லிட்டர் தயார் செய்யலாம்
இந்த ஆலை 8 மணி நேரத்திற்குள் 800 கிராம் உப்புடன் 25 லிட்டர் சானிடைசரை தயாரிக்க முடியும். இறுதி தயாரிப்புக்கு இந்த 25 லிட்டர் சானிடைசரை 1000 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.

சானிடைசர் உருவாக்க உதவிய பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள்
பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளிடம் எனது யோசனையைச் சொன்னதும், அவரால் நேரடியாக எனது வீட்டிற்கு 1000 லிட்டர் தண்ணீரை பம்ப் செய்து உதவி செய்தார்கள், சானிடைசர் தயாரிக்கப்பட்டவுடன், அருகிலுள்ள மக்கள் அனைவரும் நேரடியாக வந்து சானிடைசரை பயன்பாட்டிற்காக வாங்கி சென்றார்கள் என்று கூறியுள்ளார்.

மக்கள் எடுத்துச் செல்ல எந்த அளவு தடையும் கிடையாது
ஊரடங்கினால் பொருளாதார ரீதியாகப் பல சிக்கலை எதிர்கொள்ளும் நபர்களுக்கு சானிடைசர்களை இலவசமாக வழங்குவது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.இந்த சானிடைசர்களை மக்கள் எடுத்துச் செல்ல எந்த அளவு தடையும் விதிக்கப்படவில்லை, சானிடைசர்களை நிரப்பக் கூடிய கண்டைனர்கள் அல்லது கேன்கள் கொண்டு வந்தால் போதுமானது என்று சந்தானம் கூறியுள்ளார்.

என்னிடமிருந்து பெற்று மற்றவர்களுக்கு உதவ வேண்டும்
மக்கள் சானிடைசரை என்னிடமிருந்து பெற்று மற்றவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அளவு கட்டுப்பாடு எதையும் நான் விதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது தன்னிடம் 500 லிட்டர் சானிடைசர் மீதமுள்ளது என்றும், அடுத்த பேட்ச் வரும் வாரத்தில் தயாராகும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications