ரூ.1000 கேஸ் கதை முடிந்தது.. இனி எத்தனால் அடுப்பு.. சிலிண்டருக்கு மாற்றாக எத்தனால் கேஸ்.. இந்திய அரசு அதிரடி!
இந்தியாவில் எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் விலை நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் சுமையாக இருந்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக கம்மியான விலையில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய எத்தனால் அடிப்படையிலான சமையல் அடுப்பு தொழில்நுட்பம் (Ethanol Stove Technology) அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எத்தனால் சமையல் அடுப்பு தொழில்நுட்பம்: பொதுவாக வாகனங்களுக்கான எரிபொருளாக மட்டுமே பார்க்கப்பட்ட எத்தனால், இப்போது சமையலறைக்குள்ளும் நுழைந்துள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தில், எத்தனால் மற்றும் தண்ணீர் ஆகிய இரண்டும் குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கப்பட்டு அடுப்புக்கான எரிபொருளாக மாற்றப்படுகிறது.

இது வழக்கமான எல்பிஜி சிலிண்டர்களை விடப் பாதுகாப்பானது மற்றும் குறைந்த செலவுடையது என்று கூறப்படுகிறது. ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகளில் விறகு மற்றும் மண்ணெண்ணெய்க்கு மாற்றாக இந்த எத்தனால் அடுப்புகள் ஏற்கனவே பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் தற்போதைய சூழலுக்கு ஏற்ப இந்த தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட உள்ளது.
எத்தனால் நன்மைகள்: மண்ணெண்ணெய் மற்றும் விறகு அடுப்புகளுடன் ஒப்பிடும்போது, இதில் உட்புற காற்று மாசுபாடு (Indoor Air Pollution) மிக மிகக் குறைவு. எத்தனால் என்பது கரும்பு, சோளம் மற்றும் விவசாய கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு ஆல்கஹால் சார்ந்த உயிரி எரிபொருள் (Biofuel) ஆக இருப்பதால், தேவை அதிகரிக்கும் போது இந்திய விவசாயிகளின் வருமானம் உயரும்.
வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்களுடன் ஒப்பிடுகையில், இது பொதுமக்களின் சமையல் செலவை கணிசமாக குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி "இந்த புதிய எத்தனால் சமையல் அடுப்பு முற்றிலும் உள்நாட்டிலேயே (Indigenous) உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாகும்.
இது வீட்டு உபயோக சமையல் செலவை குறைப்பதோடு, தூய்மையான எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும். இந்தியா தற்போது தனது கச்சா எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 87 சதவீத இறக்குமதி செய்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில் நிதிச்சுமை ஏற்படுகிறது. எத்தனால் பயன்பாட்டை சமையலறைகளுக்கும் விரிவாக்க வேண்டும் என்று விளக்கினார்.
எல்பிஜி சிலிண்டர்களுக்கு மாற்றாக இது மாறுமா? இந்தியாவில் தற்போது எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகம் என்பது மிக வலுவான நெட்வொர்க்கை கொண்டுள்ளது. மானியங்கள் மற்றும் நாடு தழுவிய விநியோக கட்டமைப்பு மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் சிலிண்டர்கள் எளிதாக சென்றடைகன்றன. ஆகவே, அதற்கு மாற்றாக எத்தனால் அடுப்புகளை கொண்டு வர சவால்கள் அதிகமாகும்.
முதலாவதாக, சமையல் பயன்பாட்டிற்கு தேவையான எத்தனாலை தடையின்றி வழங்குவதற்கான பிரத்யேக விநியோகச் சங்கிலி (Supply Chain) உருவாக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, இதன் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் மலிவு விலை குறித்து நுகர்வோர் மத்தியில் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே, இருக்கும் கேஸ் இணைப்புடன் ஒருகிணைக்க வேண்டும்.
ஆகவே, இண்டேன், ஹெச்பி கேஸ் மற்றும் பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்தே நுகர்வோர்களுக்கு இந்த எத்தனால் அடுப்பு தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க வேண்டும். இது வணிக ரீதியாக முழு வெற்றியடையும் பட்சத்தில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமையலறைகளில் விரிவாக்கம் செய்ய மானியங்கள் வழங்க வேண்டும். இந்திய அரசு ஏற்கனவே பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை (Ethanol Blending Programme) தீவிரப்படுத்தி உள்ளது. 2014ஆம் ஆண்டில் வெறும் 1.5 சதவீதமாக இருந்த எத்தனால் கலப்பு, 2025 ஆம் ஆண்டில் 20 சதவீதத்தை எட்டியது.
இப்போது வாகனங்களைத் தாண்டி, பசுமை ஹைட்ரஜன், மின்சார வாகனங்கள் மற்றும் இந்த எத்தனால் அடுப்புகள் வரையில் வந்துவிட்டது. இந்தியாவின் எரிசக்தி தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்ய இந்திய அரசு வேகம் காட்டி வருகிறது. ஆகவே, படிப்படியாக எத்தான் அடுப்பு தொழில்நுட்பம் இந்தியாவின் ஒவ்வொரு சமையலறைக்குள்ளும் செல்ல வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications