என்னா வாழ்க்கைடா? நாய் மேய்க்கும் பெண் டெக் ஊழியர்! அந்த காரணம் இருக்கே!
"மக்கள் சாட்ஜிபிடியை (ChatGPT) புகழும்போது, அது என்னுடைய வேலையை பறித்தது தான் நினைவுக்கு வரும், மனிதர்கள் எப்போதும் எளிமையாக பணம் சம்பாதிக்க ஆசைப்படுகின்றனர்" என்று சாட்ஜிபிடியால் வேலை பறிக்கப்பட்ட இளம்பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார். இதில் மேலும் வருந்தத்தக்க ஒரு காரணம் உள்ளது.
இதுகுறித்த விவரம் இதோ. அமெரிக்க நிறுவனமான ஓப்பன் ஏஐ (Open AI) மூலம் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மிகப்பெரும் மைல் கல்லை எட்டிவிட்டது. தொழில்நுட்பத் துறையை கடந்து அனைத்து துறைகளிலும் சாட்ஜிபிடியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர்கள் வரை சாட்ஜிபிடியை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

இந்த சாட்ஜிபிடி மூலம் பல்லாயிரணக்கான வேலைகளை செய்துகொள்ள முடிவதால், அதுதொடர்பான வேலைவாய்ப்புகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விட்டது. அதாவது, சாட்ஜிபிடியின் சாட்பாடில் (ChatGPT Chatbot) கவிதைகள், கட்டுரைகள், கதைகள், செய்திகள் மட்டுமல்லாமல் கம்ப்யூட்டர் கோடிங், கணக்குகள் வரையில் எழுதிக்கொள்ள முடிகிறது.
இதனால், சாட்ஜிபிடியை வைத்து கதை எழுதுதல், செய்தி எழுதுதல், கோடிங் எழுதுதல் உள்ளிட்டவை செய்து பலர் பணம் சம்பாதிக்க தொடங்கிவிட்டனர். வெறும் மக்களாகிய நாமே புதிய தொழில்நுட்பத்தை வைத்து பணம் சம்பாதிக்க திட்டமிடும்போது, கார்ப்பரேட் நிறுவனங்கள் என்னவெல்லாம் செய்யும் என்று சொல்லித் தெரிய வேண்டியது கிடையாது.
பல தொழில்நுட்ப நிறுவனங்கள் சாட்ஜிபிடியை வைத்துக் கொண்டு, அதுதொடர்பான வேலைகளை குறைத்து வருகின்றன. நாள்தோறும் திடீர் திடீரென்று ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இதனால் வேறு வேலையை தேடி செல்வதற்குள் பலரது நிலைமை தெருவுக்கே வந்துவிடுகிறது. அதில், சிலர் கார்ப்பரேட் நிறுவனங்களே வேண்டாம் என்று கிடைக்கும் வேலைக்கு செல்லத் தொடங்கிவிட்டனர்.
அந்த வரிசையில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் எழுத்தாளராக பணிபுரிந்துவந்த ஒலிவியா லிப்கின் (Olivia Lipkin) என்னும் 25 வயது இளம்பெண் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணிநீக்கத்துக்கான காரணத்தை நிர்வாகம் அவரிடம் தெரிவிக்கவில்லை. சில நாள்களுக்கு பின் அவரது வேலையை சாட்ஜிபிடி மூலம் அந்த நிறுவனம் செய்துவருவது ஒலிவியாவுக்கு தெரியவந்துள்ளது.
இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு, தனது நிலைமை குறித்த சமூக வலைதளங்களில் ஒலிவியா பதிவிட்டுள்ளார். அதில், "சாட்ஜிபிடியை மக்கள் புகழும்போதெல்லாம், எனக்கு மாற்றாக அது வந்ததை நினைத்து வருத்தம் அடைந்தேன். மிகவும் பாதுகாப்பற்றவளாக உணர்ந்தேன். இனி கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்கு செல்லக்கூடாது என்று முடிவெடுத்தேன். இப்போது, டாக் வாக்கர் (Dog Walker) பணியை செய்து வருகிறேன்.
தொழில்நுட்பட நிறுவனங்கள் மட்டுமல்ல, மக்களும் பணம் சம்பாதிக்க எளிமையான வழியை தேடுகின்றனர். ஆனால், அந்த வழியை மனிதர்களால் ஒருபோதும் கொடுக்க முடியாது. எந்திரம் மட்டுமே கொடுக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








