வரும் ஆகஸ்ட் மாதம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் எனத் தகவல்.! முழு விவரம்.!
சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, சந்திரயான்-3 விண்கலம் வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பான தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது மக்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுகையில், சந்திரயான் 3-ன் சோதனைகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு விட்டதாகவும், இதனை ஏவும் பணி வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் இருந்த ரோவர் என்ற கருவியின் மூலம் நிலவில் தரையிறங்கி, அதன் மேற்பரப்பை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். ஆனால் கடந்த செப்டம்பர் 7, 2019 அன்று நிலவில் தரையிறங்கிய போது லேண்டர் கருவி நிலவில் மோதியதால், அந்த திட்டம் தோல்வியடைந்தது.

இருந்தபோதிலும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி, தொடர்ந்து நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உருவாக்கி உள்ளது.

மேலும் இதுகுறித்து மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுகையில், சந்திராயன்-3 விண்கலத்தின் அடிப்படை பணிகள் மற்றும் சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாகவும் அதனை வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணுக்கு ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல் இந்த வருடத்தின் முதல் விண்வெளி திட்டமாக ரிசாட்-1ஏ என்று அழைக்கப்படும் பூமியை பார்வையிடும் செயற்கைக்கோள் பிப்ரவரி 2-வது வாரத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதேபோல் ஆண்டு இறுதியிலோ அல்லது 2023-ம் ஆண்டு தொடக்கத்திலோ ககன்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின் தகுதிச் சோதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தமிழகத்தில் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த சோதனையானது 720 வினாடிக்கு நடத்தப்பட்டது.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்த இஸ்ரோ தகவலின்படி, என்ஜினின் செயல்திறன் சோதனை நோக்கங்களின் அனைத்து அம்சங்களிலும் செயல்திறன் நிவர்த்தியாக பூர்த்தி செய்யப்பட்டது. இந்த வெற்றி ககன்யான் திட்டத்தின் மிகப் பெரிய மைல்கல் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டமானது வெற்றிகரமான நீண்ட கால சோதனையாகும். என்ஜின் சோதனையில் இதன் நம்பகத்தன்மை மற்றும் வலிமையை உறுதி செய்துள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications