நிலவை நெருங்கும் சந்திரயான் 2! அடுத்து நடக்கப்போவது என்ன தெரியுமா?
இஸ்ரோவின் சந்திரயான் 2 விண்கலம், 5வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டு நிலவை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ISRO-வின் அறிவிப்புப் படி செப்டம்பர் 7ஆம் தேதி, நிலவில் தரையிறங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நிலவில் உள்ள நீர்வள ஆராய்ச்சி
நிலவில் உள்ள நீர்வளம் மற்றும் நிலவின் இயற்கை நிலையை ஆராய்வதற்காக இஸ்ரோ, கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த செயற்கைக்கோள் இதுவரை யாரும் பயணிக்காத நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.

நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2
சந்திரயான் 2 திட்டத்தின் முதல் படியாக, கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று, பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவை நோக்கி நேர்க்கோட்டில் பயணிக்கத் தொடங்கியது. பின்னர் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 2 பயணிக்கத் தொடங்கியது.

சந்திரயான் 2 இன் மூன்றாம் மாற்றம்
நேர்க்கோட்டில் பயணிக்கத் தொடங்கிய சந்திரயான் 2 இன் உயரம் அடுத்தடுத்து குறைக்கப்பட்டு நிலவை சுற்றிவரத் துவங்கியது. கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி மூன்றாவது முறையாகச் சந்திரயானின் சுற்று வட்டப் பாதை மாற்றி அமைக்கப்பட்டது.

இறுதி முறையாகச் சந்திரயான் 2 சுற்று வட்டப்பாதை மாற்றம்
அதனைத் தொடர்ந்து நான்காவது முறையாகக் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி, சந்திரயான் 2 செயற்கைக்கோள் தனது சுற்று வட்டப் பாதையை வெற்றிகரமாக மாற்றி பயணத்தைத் தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஐந்தாவது முறையாக அல்லது இறுதி முறையாகச் சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வு
சந்திரயானின் 2 இன் சுற்றுப்பாதை உயரம் குறைந்தபட்சம் 119 கி.மீ என்றும், அதிகபட்சம் 127 கி.மீ என மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அடுத்தகட்டமாக சந்திரயான் 2 விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி, இதுவரை யாரும் பயணிக்காத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி, தனது ஆய்வை மேற்கொள்ளுமென்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications