தேரை இழுத்து தெருவுல விட்ட AI.. கமலா ஹாரிஸை சந்திக்க சுந்தர் பிச்சை, சத்ய நாடெல்லாவுக்கு அழைப்பு!
மைக்ரோசாப்ட்டின் சத்யா நாதெல்லா (Satya Nadella), கூகுளின் சுந்தர் பிச்சை (Sundar Pichai), ஓப்பன்ஏஐ-யின் சாம் ஆல்ட்மேன் மற்றும் ஆந்த்ரோபிக்கின் டாரியோ அமோடி உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓ-க்கள் (CEOs) அமெரிக்க துணைத் தலைவரான கமலா ஹாரிஸை (Kamala Harris) வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்புக்கு பின்னால் உள்ள முக்கிய காரணம், வேறொன்றுமில்லை ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தான். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சாட்ஜிபிடி (ChatGPT), மைக்ரோசாஃப்ட் பிங் (Microsoft Bing), கூகுள் பார்ட் (Google Bard) போன்ற ஜெனரேட்டிவ் ஏஐ டூல்கள் (Generative AI Tools) தான்!

டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க் (Elon Musk) மற்றும் ஆப்பிளின் (Apple) இணை நிறுவனரான ஸ்டீவ் வோஸ்னியாக் (Steve Wozniak) உட்பட பலரும் ஏஐ தொடர்பான ஆராய்ச்சியை இடைநிறுத்த கோரி ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டதை தொடர்ந்தே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது போல் தெரிகிறது.
இந்த சந்திப்பின் போது, நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகும் ஏஐ தொழில்நுட்பத்தின் (AI Technology) சாத்தியமான துஷ்பிரயோகம் (Misuse) மற்றும் ஆபத்துகள் (Risks) பற்றி விவாதிக்கப்பட உள்ளது. அமெரிக்க துணை தலைவர் ஹாரிஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு இடையேயான இந்த சந்திப்பு மே 4 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ராய்ட்டர்ஸ் (Reuters) வழியாக கிடைத்த தகவலின்படி அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பிடன் (Joe Biden), ஏஐ தொடர்பான வேலைகளில் ஈடுபடும் தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓ-க்களை சந்திக்க விரும்புகிறார் "அவர்களது தயாரிப்புகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் முன், அவைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும்படி வலியுறுத்த உள்ளார்".
எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டு இருந்தது. எப்போது சாட்ஜிபிடி பொதுவெளியில் அறிமுகப்படுத்தப்பட்டதோ அப்போதிலிருந்து, ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வான சாம் ஆல்ட்மேன் (Sam Altman) ஏஐ-க்கான ஒழுங்குமுறைகளை (AI Regulations) பற்றி கேள்வி எழுப்பி வருகிறார். சுந்தர் பிச்சை மற்றும் சத்ய நாடெல்லாவும் கூட இதுகுறித்து தத்தம் கவலைகளை பகிர்ந்துள்ளனர்.
சிபிஎஸ்-க்கு அளித்த பேட்டி ஒன்றில், ஏஐ தவறாக பயன்படுத்தப்பட்டால் அது மிகப்பெரிய தீங்குகளை விளைவிக்கும் என்று சுந்தர் பிச்சை கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது. பல்வேறு அரசாங்கங்கள் தலையிடாத வரை, தொழில்நுட்ப நிறுவனங்களால் ஏஐ தொடர்பான மேம்பாடுகளை இடைநிறுத்த முடியாது என்றும் அவர் வெளிப்படையாக பேசி இருந்தார்.
மேலும் "ஏஐ-யின் காட்ஃபாதர்" (Godfather of AI) என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் (Geoffrey Hinton), கூகுளில் தனக்கு கொடுக்கப்பட்ட பதவியில் இருந்து விலகி உள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜெஃப்ரி ஹிண்டன், ஏஐ-யின் ஆபத்துகள் (AI Risks) குறித்து வெளிப்டையாக பேசவே கூகுளில் இருந்து வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.
ஜெஃப்ரி ஹிண்டனின் கூற்றுப்படி, ஏஐ மிகப்பெரிய அளவில் மனிதர்களின் வேலைகளை பறிக்கும். ஐபிஎம் (IBM) தலைமை நிர்வாக அதிகாரியான அரவிந்த் கிருஷ்ணா (Arvind Krishna), அடுத்த 5 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைகளை செய்ய செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








