மக்களின் உயிருக்கு விலை பேசும் Amazon, Flipkart.. வெடித்தது சீட் பெல்ட் விவகாரம்.. மத்திய அரசு நோட்டீஸ்!
பொதுவாக கார்களில் பயணம் செய்யும் போது ஓட்டுநர் உள்பட காரில், யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டியது கட்டாயமாகும். இந்த சீட் பெல்ட்டுகளை அணியாவிட்டால், காரில் பொருத்தப்பட்டிருக்கும் எச்சரிக்கை அலாரம் அடிக்கும். இந்த எச்சரிக்கை அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகளை (Clips) அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட 5 இ-காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இப்போதெல்லாம் வாகன சட்டங்களை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கைகளை போக்குவரத்துத்துறை எடுத்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் புதிய மோட்டார் வாகன சட்டங்களை பின்பற்றுமாறு மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில், மத்திய மோட்டார் வாகன விதி 1989-ன் படி கார்களில் பயணம் செய்யும் போது ஓட்டுநரும் அவருடன் செல்வோரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவர்கள் சீட் பெல்ட்டை அணியாத பட்சத்தில், இருக்கையில் பொருத்தப்பட்டிருக்கும் சீட் பெல்ட் அலாரம் ஒலி எழுப்பி எச்சரிக்கும். இந்த அலாரம் தங்களுக்கு தொந்தரவாக இருப்பதாக பல வாகனவோட்டிகள் கருத்து தெரிவித்து, அதை நிறுத்த பல்வேறு கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அரசு எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்த சூழலில் மிகப்பெரும் இ-காமர்ஸ் (E-Commerce) நிறுவனங்கள், சீல் பெல்ட் அலாரத்தை நிறுத்த கிளிப்புகளை விற்பனை செய்துவருவது, பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, அமேசான் (Amazon), ஃபிளிப்காட் (Flipkart), ஸ்னாப்டீல் (Snapdeal), ஷாப்க்லூஸ் (Shoplcues), மீஷோ (Meesho) ஆகிய நிறுவனங்கள், சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் (Seat Belt Alarm Stopper) என்னும் பெயரில் கிளிப்புகளை விற்பனை செய்து வந்துள்ளன.
இதுவரை 13,118 கிளிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கிளிப்புகளை வாங்கி பயன்படுத்தியவர்களில் பலர் விபத்துகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் காப்பீட்டு நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி விண்ணப்பிக்கும் போது, விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. இதனால் விபத்தில் சிக்கியவர்கள் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய அரசுக்கு சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்புகள் குறித்து தெரியவந்துள்ளது.
இதனிடையே மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்த மக்களை ஊக்குவிக்கும் வகையில் கிளிப்புகளை தயாரித்து விற்பனை செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது. அதோடு
அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதமும் அனுப்பியது.
குறிப்பாக, மக்களின் உயிருடன் விளையாடும் வகையில் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்புகளை விற்பனை செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அமேசான், ஃபிளிப்காட், ஸ்னாப்டீல், ஷாப்க்லூஸ், மீஷோ ஆகிய 5 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அண்மையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ஆம் ஆண்டில் 16,000 பேர் சீட் பெல்ட் அணியாமல் கார்களை ஓட்டிசென்றதால், விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இ-காமர்ஸ் நிறுவனங்களில் அலட்சியப்போக்கு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








