பொது இடங்களில் இலவச வைபை.. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. மத்திய அரசு எச்சரிக்கை.. ஏன்?
இந்திய மக்களின் வாழ்க்கையில் தினசரி ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. அதாவது டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பொது வைபை (public Wi-Fi) பயன்படுத்தும் போது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொது வைபை (public Wi-Fi)
அதாவது ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் பிற முக்கிய நடவடிக்கைகளுக்கு பொது வைபை நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு எச்சரிக்கை கொடுத்துள்ளது.

அதன்படி விமான நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் இலவச வைபை வசதி வழங்கப்படுகிறது. ஆனால் இது உங்களது தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். அதுவும் இந்த பொது வைபை நெட்வொர்க்குகளில் பல முறையாக பாதுகாக்கப்படவில்லை. இதனால் அவை ஹேக்கர்கள் மற்றும் மோடி செய்பவர்களுக்கு எளிதான இலக்காகின்றன.
எனவே செர்ட்-இன் (CERT-In) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியாவின் இணைய பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பானது, பொது வைபை நெட்வொர்க்குகள் மூலம் வங்கி அல்லது ஆன்லைன் ஷார்பிங் போன்ற முக்கியமான செயல்களைச் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளது. இதனால் பயனர்கள், தரவு திருட்டு, நிதி இழப்பு மோசடிக்கு ஆளாக நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பொது நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்படும்போது, பரிவர்த்தனைகள் செய்வதையோ அல்லது தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவதையோ தவிர்க்க வேண்டும் என இந்தியாவின் இணையப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யுபிஐ புது விதிகள்:
மேலும் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe), பேடிஎம் (paytm) போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு புதிய விதிமுறைகள் வந்துள்ளன. அதாவது யுபிஐ செயலிகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் குறிப்பிட்ட காலத்திற்குச் செயல்பாட்டில் இல்லையென்றால் அவை வங்கி கணக்கில் இருந்து அகற்றப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.
உங்களது வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும். பின்பு கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ மூலம் நீங்கள் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது இது உங்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் NPCI இந்த முடிவை எடுத்துள்ளது.
அதுவும் செயலற்ற மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக அவை யுபிஐ அமைப்புகளுக்குள் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகளையும் ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும்.
நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர் உங்கள் வங்கி கணக்குடன் இணைந்திருக்கிறதா என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களது வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலில் இல்லை என்றாலோ அல்லது சிறிது காலமாக ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலோ அந்த நம்பர் உங்களுடைய பெயரில் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா அல்லது எந்த ஆபரேட்டரை பயன்படுத்தியிருக்கிறீர்களோ அவர்களுடைய கஸ்டமர் கேருக்கு தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








