2027 சென்சஸ்.. பிறந்த இடம் எது.. முகவரி மாறுனீங்களா.. இனி அதும் கணக்கு.. Mobile App மக்கள் தொகை கணக்கெடுப்பு!
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 (Census 2027) ஆனது முற்றிலும் டிஜிட்டல் முறையில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற 2027 ஆம் மார்ச் 1 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இதற்கு முன்னதாக ஒட்டுமொத்த இந்திய மக்களும் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) ஆனது மக்கள் தொகை கணக்கெடுப்பை வருகிற 2027ஆம் ஆண்டில் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளது. இப்போது, டிஜிட்டல் செயல்முறையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆனது நடக்கும் என்பதை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்து உள்ளார்.

மொபைல் செயலி (Mobile App) வழியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் சேகரிக்கப்படும். பிரத்யேக போர்டல் மூலமாகவும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்படும். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையின் கீழ், ஒவ்வொரு நபரின் தகவல்களும் கணக்கெடுப்பு காலம் முழுவதும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து சேகரிக்கப்படும்.
மேலும், ஒவ்வொரு நபரின் பிறந்த இடம் மற்றும் கடைசியாக வசித்து வந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் இடம்பெயர்வு தகவல்கள் சேகரிக்கப்படும். இதில் இப்போது அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் இருக்கும் காலம் மற்றும் இடம்பெயர்வுக்கான காரணம் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்படும். ஆகவே, பிறந்த இடம், வசிக்கும் இடம் முக்கியாக இருக்கும்.
மேலும், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் கட்டமாக நடக்கிறது. இது ஒட்டுமொத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும். ஆனால், லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்டவைக்கு 2026 ஆம் ஆண்டிலேயே நடக்கிறது.
பனிப்பொழிவுப் பகுதிகளில் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க இருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 (Census Act, 1948) மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990 (Census Rules, 1990) ஆகியவற்றின்படி இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது.
கடைசியாக 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதுவும் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன. முதலாவது கட்டத்தில் வீடுகள் பட்டியலிடுதல் செய்யப்பட்டது. இது 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் நடந்து முடிந்தது.
இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. இது 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது. இதற்கான வரம்பு தேதி 2011 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. ஆனால், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான முன்னதாக இருந்தது.
அதாவது, இந்த பகுதிகளுக்கான வரம்பு தேதி 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதியாக இருந்தது. இதேபோலவே வருகிற 2026 ஆம் ஆண்டு மற்றும் 2027 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க இருக்கிறது. இந்த மக்கள் கணக்கெடுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கமாகும்.
ஆகவே, 2011 ஆம் ஆண்டுக்கு அடுத்து 2021 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது. இப்போது, தாமதமாக நடத்தப்பட இருக்கிறது. இருப்பினும், டிஜிட்டலாக நடத்தப்படுவதால், செயல்முறையானது எளிதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








