டிஜிட்டல் லாக்டவுன்.. சார்ஜர் கேபிள் கூட ஆபத்தா? டிரம்ப்பின் சீன பயணத்தில் என்ன நடந்தது? இதோ முழு விவரம்..
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின்பேரில், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டார். பெய்ஜிங் விமான நிலையத்தில் அவருக்குச் சிறப்பான சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கிடையில், டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் இந்தப் பயணத்தின் போது மிகக் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றினர். குறிப்பாக டிஜிட்டல் லாக்டவுன் (Digital Lockdown) என அழைக்கப்படும் விசித்திரமான பாதுகாப்பு முறையை அவர்கள் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிகாரிகளுக்கு நீண்ட காலமாக ஒரு முக்கியமான அச்சம் இருந்து வருகிறது. அதாவது சீனாவிற்குக் கொண்டு செல்லப்படும் செல்போன்கள், லேப்டாப்கள் போன்ற மின்னணு சாதனங்கள் ரகசிய கண்காணிப்பிற்குள் செல்லக்கூடும் என அவர்கள் நம்புகின்றனர்.

அங்குள்ள பொது வைஃபை இணைப்புகள் மட்டுமல்லாமல், சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் சார்ஜிங் கேபிள்கள் கூட தகவல் திருட்டுக்குப் பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது. குறிப்பாக டிஜிட்டல் கண்காணிப்பு மிக அதிகம் என்பது அமெரிக்காவின் கருத்து. அதுவும் அங்கு சென்றால் நமது போனில் உள்ள ரகசிய தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தனிப்பட்ட விபரங்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக அவர்கள் பயப்படுகிறார்கள்.
எனவேதான் தற்போதைய சீன பயணத்தின் போது டிரம்புடன் சென்ற நூற்றுக்கணக்கான அதிகாரிகளும், பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களின் நிர்வாகிகளும் தங்களது சொந்த செல்போன்கள் மற்றும் லேப்டாப்புகளை எடுத்துச் செல்லவில்லை. அவை அனைத்தும் அமெரிக்காவிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக, குறுகிய கால பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் "பர்னர் போன்கள்" (Burner Phones) என்று அழைக்கப்படும் தற்காலிகப் பயன்பாட்டிற்கான போன்களை மட்டுமே கொண்டு சென்றனர்.
அதுவும் இந்தப் பயணத்திற்காக மட்டுமே வழங்கப்பட்ட மிக் குறைவான வசதிகளே கொண்ட தற்காலிக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறார்கள். அதேபோல் இதில் முக்கியமான தகவல்கள் எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது. குறிப்பாக சீன பயணம் முடிந்து அமெரிக்க திரும்பியதும், அந்த போன்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
சீனாவில் உள்ள பொது இடங்கள் அல்லது ஹோட்டல்களில் செல்போன்களை சார்ஜ் செய்வதையும் இந்தக் குழுவினர் தவிர்க்கின்றனர். காரணம், சாதாரண சார்ஜிங் கேபிள்கள் அல்லது USB இணைப்புகள் மூலமாக கூட உளவு மென்பொருட்கள் செல்போன்களுக்குள் நுழையக்கூடும் என்ற பாதுகாப்பு அச்சம் நிலவுகிறது. இதனால், முன்கூட்டியே பரிசோதிக்கப்பட்ட பிரத்யேக சார்ஜர்கள் மற்றும் பாதுகாப்பான உபகரணங்களையே அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் தற்போது சீனா இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறது. அதாவது ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், சீன தூதரக செய்தி தொடர்பாளர் லியு பெங்யு நாங்கள் யாரையும் உளவு பார்ப்பதில்லை, மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சட்டப்படி பாதுகாக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் உள்ளிட்ட பல கோடீஸ்வரர்கள் இந்த விதிகளைக் கட்டாயம் பின்பற்றிய நிலையில், எலான் மஸ்க் மட்டும் தனது சொந்த போனில் வீடியோ எடுத்தது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் பார்க்கும்போது, உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் உயர்மட்ட குழுவுடன் பயணம் செய்தாலும், ஒரு சாதாரண செல்போன் பயன்பாட்டில்கூட இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications