இது யாரு கொடுத்த ஐடியானு தெரியலையே.. புது BSNL SIM கார்டு வாங்க ரெடியா இருங்க.. ஏன்னா?
இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) ஆனது, இந்தியா முழுவதும் தனது சிம் கார்டுகளை விற்பனை செய்வதற்கான ஒரு புதிய உத்தியை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய உத்தி, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம்கார்டு விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பிஎஸ்என்எஸ்-க்கு மட்டுமல்ல எல்லா டெலிகாம் நிறுவனங்களுக்குமே தங்களுடைய சிம் கார்டுகளை விற்பனை செய்வதற்கு, விநியோக வழித்தடம் தேவைப்படுகிறது. ஆனால் "கொடுத்து வச்ச" பிஎஸ்என்எல்-க்கு இந்தியா முழுவதுமாக பரவிக்கிடக்கும் ஒரு பெரிய விநியோக வழித்தடம் கிடைத்துள்ளது, அது தபால் நிலையங்கள் (Post Offices) ஆகும்!

ஆம், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சிம் கார்டுகளை (BSNL SIM Cards) தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில், தபால் துறைக்கும் (Department of Posts - DoP) பிஎஸ்என்எல்-க்கும் இடையேயான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding - MoU) கையெழுத்தாகி உள்ளது.
மேலும் நுகர்வோர்கள், தபால் நிலையத்திலிருந்து தங்களுக்கான பிஸ்எஸ்என்எல்சிம் கார்டை பெறுவதற்கு முன்பு, வழக்கமான கேஒய்சி (KYC) செயல்முறையை, அதாவது உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (Know Your Customer)) செயல்முறையை மேற்கொள்ள வேண்டியிருக்கும், இது - இந்த செயல்முறையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுகிறது.
இந்த புதிய உத்தியானது, இந்திய நுகர்வோர்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை எளிதாக பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தியாவில் தபால் வலையமைப்பு மிகவும் விரிவானது, மேலும் சிறிய நகரங்கள் மற்றும் பெரிய நகரங்கள் இரண்டிலும் தபால் நிலையங்கள் உள்ளன. ஆகையால் இந்த புதிய வசதி நாடெங்கும், மூலைமுடுக்கெல்லாம் உள்ளவர்களை கூட சென்றடையும் என்பதில் சந்தேகமே வேண்டாம் (வாடிக்கையாளர்கள் சிம் கார்டுகளை வாங்கும் பட்சத்தில்)
தற்போதைக்கு, இந்த வசதி ஆனது இன்னும் "செயல்படுத்தும் கட்டத்தில்" தான் உள்ளது. வரும் நாட்களில் மற்றும் வாரங்களில் இது நாடு முழுவதும் உள்ள பல தபால் நிலையங்களில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசுகையில் "தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள் நகரம் முழுவதும் பரவி இருந்தாலும், பிஎஸ்என்எல் இணைப்பை விரும்புவோருக்குக் குறைந்த வாய்ப்புகளே உள்ளன, மேலும் பிஎஸ்என்எல் மையங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. அவர்கள் சிம் கார்டுகளை பெறுவதற்கும், ரீசார்ஜ் செய்வதற்கும் தபால் நிலையங்கள் ஒரு வசதியான இடத்தை வழங்குகின்றன," என்று தபால் நிலையங்களின் மூத்த கண்காணிப்பாளர் பல்பிர் சிங் கூறி உள்ளார்.
OPINION - என்னது போஸ்ட் ஆபிஸ் வழியாக சிம் கார்டு-ஆ, இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? சிறு மற்றும் பெரு நகரங்களில், ஒரு சிம் கார்ட்டை வாங்கிய அனுபவத்தை வைத்துக்கொண்டு, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த வசதியை, இந்த முயற்சியை ஏளனமாக பேசிவிட முடியாது. முன்னரே குறிப்பிட்டபடி, பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை வாங்கும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இருக்கும் வரை, இந்த வசதி "சிலருக்காவது" பயனுள்ளதாகவே இருக்கும்.
இன்னொரு கசப்பான உண்மை என்னவென்றால்.. விரைவில் ஜியோ மற்றும் ஏர்டெல் சிம் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் கூட விரைவில் ஒரு புதிய பிஎஸ்என்எல் சிம் கார்ட்டை வாங்கும் சூழ்நிலை உருவாகலாம், ஏனென்றால் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்களுடைய அடுத்தகட்ட ரீசார்ஜ் விலை உயர்வை அமலுக்கு கொண்டுவர தயார் ஆகி வருகின்றன.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய திட்டங்களின் விலைகளை உயர்த்தி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த சில முறை நடந்த, விலை உயர்வுகளின் போக்கை கருத்தில் கொண்டால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் விலைகளை உயர்த்தியுள்ளன. எனவே, தொழில் வல்லுநர்கள் அடுத்த சுற்று விலை உயர்வுகள் மிகவும் அருகில் இருப்பதாக நம்புகின்றன; அது மே 2026 ஆக கூட இருக்கலாம். அந்த நேரத்தில் மிகவும் மலிவான விலைக்கு நல்ல வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல்-ன் சேவை நம்மில் பலருக்கும் தேவைப்படலாம்!


Click it and Unblock the Notifications