அடிடா சல்யூட்.. இனி போஸ்ட் ஆபிஸ் வழியாக BSNL சிம் கார்டு, மொபைல் நம்பர் ரீசார்ஜ்.. எப்படி?
பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் அஞ்சல் துறை (Department of Posts) ஆகிய இரண்டும், 1 வருட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன. இதன்கீழ் இந்தியா போஸ்டின் கீழ் இயங்கும் 1.65 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளன மற்றும் பிஎஸ்என்எல் மொபைல் ரீசார்ஜ் சேவைகள் வழங்கப்பட உள்ளன.
அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் ஆன பிஎஸ்என்எல், இதற்காக சிம் கார்டுகள் மற்றும் பயிற்சியை வழங்கும், அதே நேரத்தில் தபால் நிலையங்கள் ஆனது வாடிக்கையாளர்களை உள்வாங்கி, பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக கையாளும்.

அசாமில் நடந்த ஒரு வெற்றிகரமான சோதனை முயற்சியை தொடர்ந்து இந்த செயல்முறை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கண்காணிப்பு, சமரசம் மற்றும் கடுமையான டேட்டா ப்ரைவஸி இணக்கத்தை (Data privacy compliance) இரு தரப்பினரும் உறுதி செய்வார்கள். மேலும் இந்த கூட்டாண்மை இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் தனது மொபைல் நெட்வொர்க் கவரேஜை விரிவுபடுத்த உதவும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமத்தையும் உள்ளடக்கிய 1.65 லட்சத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் அலுவலகங்களை உள்ளடக்கிய இந்திய அஞ்சல் துறையின் விரிவான இருப்பை பயன்படுத்தி, இந்த ஒத்துழைப்பு ஒரு வலுவான கடைசி மைல் சேனலாக செயல்படும் என்பதிலும், இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பிஎஸ்என்எல் தனது தடத்தை வலுப்படுத்த உதவும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.
மேலும், தபால் நிலையங்களை சேவை மையங்களாக மாற்றுவதன் மூலம், இந்த முயற்சி டிஜிட்டல் இடைவெளியை குறைப்பது, கிராமப்புற குடும்பங்களுக்கு மொபைல் அணுகலை வழங்குவது மற்றும் டிஜிட்டல் இந்தியாவின் பரந்த நோக்கங்கள், நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை ஆதரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை இந்நிறுவனம் விரைவில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள நுகர்வோருக்காக 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இவ்விரு நகரங்களும் இந்தியாவின் முக்கிய நகரங்கள் ஆகும் மற்றும் நாட்டின் முக்கிய சந்தைகளும் ஆகும். மேலும் டெல்லி மற்றும் மும்பையில், பிஎஸ்என்எல் ஏற்கனவே 5ஜி-ஐ சோதித்தும் வருகிறது.
5ஜி சோதனையின் கீழ், பிஎஸ்என்எல் நிறுவனமானது - 5ஜி ஸ்டேண்ட்அலோன் (5G Standalone) மற்றும் 5ஜி என்எஸ்ஏ (5G Non Standalone) ஆகிய இரண்டையும் சோதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.
இதுகுறித்து டாட் (DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications) அதிகாரி ஒருவர் கூறுகையில், பிஎஸ்என்எல் விரைவில் டெல்லி மற்றும் மும்பையில் 5ஜி-ஐ வெளியிடும்; இதற்கான காலக்கெடு டிசம்பர் 2025 ஆகும். அதாவது இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன.
முன்னதாக பிஎஸ்என்எல் நிறுவனமானது ஒரு புதிய ஆபரை அறிவித்து இருந்தது. அதன்கீழ் ரூ.199, ரூ.485 மற்றும் ரூ.1999 ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் 2% தள்ளுபடி கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. மேலும் இந்த 2% டிஸ்கவுண்ட் ஆனது பிஎஸ்என்எல் வலைத்தளம் மற்றும் பிஎஸ்என்எல் மொபைல் ஆப் வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த சலுகை வருகிற அக்டோபர் 15, 2025 வரை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக அக்.15 வரை ரூ.1999 திட்டத்தில் ரூ.38 விலை குறைப்பு கிடைக்கும். இதேபோல ரூ.199 திட்டத்தில் ரூ.3.8 விலை குறைப்பு கிடைக்கும் மற்றும் ரூ.485 திட்டத்தில் ரூ.9.6 விலை குறைப்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications