தமிழக வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த BSNL.. வரப்போகுது 500 டிவி சேனல்கள்.. ஜியோ ஓரம்போ..
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்திய நாள் முதல் தற்போது வரை அதிக வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். அதேசமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது வரை எவ்வித கட்டண உயர்வையும் அறிவிக்கவில்லை. தற்போது வரை மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது இந்நிறுவனம்.
அதேபோல் நாட்டில் பல்வேறு முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கிவிட்டது பிஎஸ்என்எல். கூடிய விரைவில் நாடு முழுவதும் இந்நிறுவனம் 4ஜி சேவையை வழங்க உள்ளது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஃபைபர் இணைய இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு 500க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை (500 live TV channels) இலவசமாகப் பார்க்கும் வசதியைத் தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் ஃபைபர் இணைப்பு மூலம், டேட்டா செலவு இல்லாமல் தொலைக்காட்சிகளைப் பார்க்கும் வசதி புதிதாக வந்துள்ளது. இந்த சேவையை இந்தியாவில் முதன் முறையாக பிஎஸ்என்எல் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் ஃபைபர் இணைய இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் இலவசமாக 500க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
மேலும் இதுதொடர்பாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறியது என்னவென்றால், இந்த திட்டம் சோதனை அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து ஸ்மார்ட் டிவியில் நிறுவ வேண்டும். அதன்பிறகு, அதில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி டிவி சேனல்களை இலவசமாகப் பார்க்க முடியும்.
அதுவும் முதற்கட்டமாக கட்டண சேனல்களையும் இலவசமாக பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு டிவி சேனல்களை பார்க்கும் போது, வாடிக்கையாளர்கள் பெற்றுள்ள டேட்டாவின் அளவு குறையாது. இதற்கான கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த சேவையை பெற ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு பதிப்பு 10 மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறிப்பாக இந்த சேவை தொடர்பாக, பிஎஸ்என்எல் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் தமிழில் உள்ள பிரபலமான கட்டண டிவி சேனல்களும் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தையும் இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பு பிஎஸ்என்எல் ஃபைபர் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் சமீபத்தில் டிராய் (TRAI) என்று அறியப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜியோவில் (Jio) இருந்து 79.7 லட்சம் கஸ்டமர்கள் வெளியேறி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து ஏர்டெல் (Airtel) நிறுவனம் 14.3 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமும் 15.5 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. குறிப்பாக நாடுமுழுவதும் இன்னும் 5ஜி சேவையை வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் 8.5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்து அதிரடி காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
photo credit: postermywall


Click it and Unblock the Notifications