பிள்ளையார் சுழி போட்ட BSNL.. அம்பானி சார், மிட்டல் சார் இப்போ வாங்க வச்சிக்கலாம்.. 2 நகரங்களில் 5G சேவை!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது - தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆன ரிலையன்ஸ் ஜியோ (Jio), பார்தி ஏர்டெல் (Airtel) மற்றும் வோடாபோன் ஐடியா (Vi) ஆகியவற்றிற்கு "தண்ணி காட்ட" தயாராக உள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் 2 நகரங்களில் அதன் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் லான்ச் டைம்லைனை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள நுகர்வோருக்காக 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இவ்விரு நகரங்களும் இந்தியாவின் முக்கிய நகரங்கள் ஆகும் மற்றும் நாட்டின் முக்கிய சந்தைகளும் ஆகும். மேலும் டெல்லி மற்றும் மும்பையில், பிஎஸ்என்எல் ஏற்கனவே 5ஜி-ஐ சோதித்தும் வருகிறது.

5ஜி சோதனையின் கீழ், பிஎஸ்என்எல் நிறுவனமானது - 5ஜி ஸ்டேண்ட்அலோன் (5G Standalone) மற்றும் 5ஜி என்எஸ்ஏ (5G Non Standalone) ஆகிய இரண்டையும் சோதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.
இதுகுறித்து டாட் (DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications) அதிகாரி ஒருவர் கூறுகையில், பிஎஸ்என்எல் விரைவில் டெல்லி மற்றும் மும்பையில் 5ஜி-ஐ வெளியிடும்; இதற்கான காலக்கெடு டிசம்பர் 2025 ஆகும். அதாவது இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் அறிக்கையின்படி, அனைத்து உபகரணங்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நன்றாக வேலை செய்கின்றன; எனவே, டிசம்பர் 2025 க்குள் (குறிப்பிட்ட) இரண்டு நகரங்களிலும் 5ஜி சேவைகளை வணிக ரீதியாக அறிமுகப்படுத்துவோம் என்று மதிப்பிடுகிறோம் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட போட்டியாளர்கள் ஏற்கனவே இந்த நகரங்களில் (மும்பை மற்றும் டெல்லி) 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தி விட்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. வோடபோன் ஐடியாவும் சமீபத்தில் இந்த பட்டியலில் இணைந்தது. வோடபோன் ஐடியா சமீபத்தில் டேராடூனில் 5ஜி சேவையையோ அறிமுகப்படுத்தியது.
மேலும் கடந்த சில மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் விஐ அதன் 5ஜி சேவையை அறிமுகம் செய்து உள்ளது. வோடபோன் ஐடியாவை பொறுத்தவரை, 5ஜி வெளியீடு இந்த ஆண்டு தொடக்கத்தில் மும்பையில் தொடங்கியது. இப்போது அது பல நகரங்களை அடைந்து உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டும் என்று இந்திய அரசாங்கம் விரும்புகிறது. அதே நேரத்தில், உள்நாட்டு நெட்வொர்க் உபகரணங்களை பயன்படுத்தி மட்டுமே பிஎஸ்என்எல் அதை செய்ய வேண்டும் என்றும் அரசாங்கம் விரும்புகிறது; அதனால் வந்த தாமதே இது!
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, இந்நிறுவனம் குறிப்பிட்ட 3 ப்ரீபெய்ட் திட்டங்கள் மீது இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் (Instant Discount) ஆபரை அறிவித்துள்ளது. அதாவது உடனடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இந்த புதிய விளம்பர சலுகையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் 2% தள்ளுபடி கிடைக்கும். அந்த திட்டங்கள் - ரூ.199, ரூ.485 மற்றும் ரூ.1999 ஆகும். ஏற்கனவே அணுக கிடைக்கும் இந்த சலுகை வருகிற அக்டோபர் 15, 2025 வரை கிடைக்கும் என்றும், மேலும் இந்த 2% டிஸ்கவுண்ட் ஆனது பிஎஸ்என்எல் வலைத்தளம் மற்றும் பிஎஸ்என்எல் மொபைல் ஆப் வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications