ஆடிய ஆட்டம் என்ன.. பேசிய வார்த்தை என்ன.. 2 மாசத்துல கடைய காலி செஞ்ச கஸ்டமர்கள்.. BSNL பரிதாபங்கள்!
பார்க்கலாம்.. இது இன்னும் எவ்ளோ நாளுக்கு போகுதுனு பார்க்கலாம் என்கிற விமர்சனங்களுக்கு பதில் கிடைத்துவிட்டது. அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் ஆனது கடந்த 2024 ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் பல எண்ணிக்கையிலான புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இருந்தது
நீண்ட காலமாக, தொடர்ச்சியான பல மாதங்களாக புதிய வாடிக்கையாளர்களை சேர்க்காத காரணத்தால், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அதுவொரு பொற்காலமாக இருந்தது. 2024 ஜூலை மாதத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தத்தம் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்ததே - பிஎஸ்என்எல் பக்கம் புதிய வாடிக்கையாளர்கள் வந்துசேர முக்கிய காரணமாக இருந்தது.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது பயனர்கள் கொண்டிருந்த கோபத்தின் விளைவாக பிஎஸ்என்எல் நல்ல லாபம் ஈட்டியது. இருப்பினும், அந்த விளைவு சிறிது காலம் மட்டுமே இருந்தது. 2024 ஜூலை முதல் அக்டோபர் வரை பிஎஸ்என்எல் நிறுவனத்தால் புதிய பயனர்களை சேர்க்க முடிந்தது.
ஆனால் அதன் பிறகு, மீண்டும் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் மற்றும் ஜியோவின் திரும்ப ஆரம்பித்தனர். இவ்விரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு அனைத்து வயர்லெஸ் பயனர்களையும் தங்கள் வசம் ஈர்த்தன. இதன் விளைவாக விஐ என்று அழைக்கப்படும் வோடாபோன் ஐடியா நிறுவனத்துடன் சேர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனமும் தன் பயனர்களை இழந்தன.
2 மாதங்களில் 3 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை பெற்ற பிஎஸ்என்எல், இப்போது 0.64 மில்லியனை இழந்துள்ளது. இந்த தரவுகள் - டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆனது அதன் மாதாந்திர செயல்திறன் குறிகாட்டி அறிக்கைகளில் பகிர்ந்து கொண்டதில் இருந்து பெறப்பட்ட தரவுகள் ஆகும்.
சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமானது, எப்போது அதன் 4ஜி சேவை (BSNL 4G) அறிமுகம் தொடர்பான பணிகள் முடிவுக்கு வரும் மற்றும் எப்போது அதன் 5ஜி சேவைக்கான (BSNL 5G) அறிமுகம் தொடங்கும் என்கிற டைம்லைனை (Timeline) அறிவித்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்திய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா "மே - ஜூன் 2025 க்குள் அனைத்து 100,000 சைட்களையும் செயல்படுத்தும் இலக்கை வைத்துள்ளோம். இதை தொடர்ந்து, ஜூன் மாதம் தொடங்கி 4ஜி சேவையிலிருந்து 5ஜி சேவைக்கு மாறுவோம்" என்று கூறி உள்ளார்.
அதாவது 1 லட்சம் சைட்களை ஆக்டிவ் செய்த பிறகு, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி சேவையை தொடர்ந்து விரிவுபடுத்தும். தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் 4ஜி சேவையை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஜூன் 2025 இறுதிக்குள் 1 லட்சம் சைட் சைட்கள் என்கிற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை பிஎஸ்என்எல் 75,000க்கும் மேற்பட்ட சைட்கள் என்கிற இலக்கை அடைந்துள்ளது. மேலும் 80,000க்கும் மேற்பட்ட சைட்கள் 'டிப்லாய்' (Deploy) செய்யப்பட உள்ளன. ஜூன் 2025 இறுதிக்குள், ஒரு லட்சம் சைட்கள் ஆக்டிவ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4ஜி விரிவாக்கத்திற்கு உதவுவதற்காக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்திற்கு ஆர்டரை நீட்டிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் தயாராக உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
1 லட்சம் 4ஜி தளங்கள் ஒரு நல்ல மைல்கல் என்றாலும், அவை இந்தியா முழுவதும் சேவை செய்ய போதுமானதாக இல்லை. 5ஜி சேவையை பொறுத்தவரை, பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே டெல்லியில் 5ஜி எஸ்ஏ-வை சோதிக்க திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், டிசிஎஸ் உதவியுடன் தற்போதுள்ள 4ஜி தளங்களை 5ஜி-க்கு மேம்படுத்தும் பணிகளை செய்யவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள 4ஜி சைட்களை ஒரு எளிய மென்பொருள் உந்துதலுடன் 5ஜி என்எஸ்ஏ-க்கு மேம்படுத்த முடியும் என்பதை டாடா குழுமம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








