BSNL-க்கு குறைந்தது கடன்.. அதிகரித்தது சந்தாதாரர்கள் எண்ணிக்கை.. 4G, 5G குறித்து வெளியான முக்கிய தகவல்..
கடந்த சில மாதங்களில் பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. அதாவது லைவ் டிவி சேனல், 4ஜி சேவை, 5ஜி சேவை சோதனை மற்றும் பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்தி உள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களில் பல லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் தனது கடனைக் குறைப்பதில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும், பயனர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களின் கட்டண உயர்வைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் சேவைக்குப் பயனர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது வரை எந்த திட்டத்தின் விலையையும் உயர்த்தவில்லை. அதாவது குறைந்த விலையில் தான் திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் கடந்த காலங்களில் கழுத்தை நெரிக்கும் வகையில் இருந்த கடன் தொகையைக் குறைப்பதில் பிஎஸ்என்எல் கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
தற்போது இது குறித்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், நிறுவனத்துக்குக் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி கடன் ரூ.40,400 கோடியாக இருந்தது. 2 ஆண்டுகளில், 2024ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி ரூ.23,297 கோடியாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு 2025-26 நிதியாண்டில் ரூ.28,476 கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.
குறிப்பாக கடனைக் குறைப்பதுடன், பல ஆண்டுகளில் முதல் முறையாக நிறுவனம் அதன் சந்தாதார்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் கண்டுள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 8 லட்சம் புதிய சந்தாதாரர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்துள்ளனர். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் பல முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கி விட்டது.
அதாவது 2024 அக்டோபர் 29ம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல் நிறுவனம் 50,000க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களை நிறுவியுள்ளது. அவற்றில் 41,000க்கும் மேற்பட்டவை இப்போது செயல்பாட்டில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும். அதேபோல் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிய பின்பு 5ஜி சேவையும் விரைவில் அறிமுகம் செய்யும் இந்நிறுவனம். சமீபத்தில் இந்நிறுவனம் 5ஜி சோதனை செய்வதாக தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 4ஜி தளங்களை அமைப்பதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்),தேஜாஸ் நெட்வொர்க்ஸ், டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), ஐடிஐ லிமிடெட் போன்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. மேலும் அனைத்து உபகரணங்களும் இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் "பூரண சுதேசி" (முற்றிலும் உள்நாட்டு) கண்டுபிடிப்பு என்ற கருத்தை உள்ளடக்கியதாகும்.
குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்தால் இன்னும் அதிக வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்நிறுவனம் அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகயை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications