BSNL Pay அறிமுகம்.. இதோடு Google Pay, PhonePe UPI ஆப்களின் ஆட்டம் முடிஞ்சது.. ஏனென்றால்?
இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) ஆனது பிஎஸ்என்எல் பே (BSNL Pay) என்கிற என்ற புதிய டிஜிட்டல் கட்டண (Digital payment) சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் பீம் (BHIM) உதவி உடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் பே சேவையானது, பயனர்கள் மூன்றாம் தரப்பு பேமண்ட் ஆப்களான கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற ஆப்களுக்கு திருப்பி விடப்படாமல் (அதாவது ரீடைரக்ட் செய்யப்படாமல்), பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப்பிற்கு (BSNL Selfcare App) உள்ளேயே நேரடியாக ரீசார்ஜ் மற்றும் பில் கட்டணங்களை செலுத்த அனுமதிக்கிறது.

இந்த அறிவிப்பை பிஎஸ்என்எல் இந்தியா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் மூலம் பகிர்ந்து உள்ளது. அதில், இந்த அம்சத்தை வாடிக்கையாளர்களுக்கான வேகமான மற்றும் தடையற்ற பேமண்ட் சொல்யூஷன் ஆக பிஎஸ்என்எல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தனது சமூக ஊடகப் பதிவில், ஆன்லைன் ரீசார்ஜ்களின் போது பல பயனர்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான சிக்கலை பிஎஸ்என்எல் சுட்டிக்காட்டியது.
"உங்கள் மொபைல் நம்பரை ரீசார்ஜ் செய்ய ஆப்களுக்கு இடையில் மாறி மாறிச் செல்வதில் சோர்வாக உள்ளீர்களா? பிஎஸ்என்எல் அதை இப்போது சரிசெய்துவிட்டது," என்று இந்த அறிமுகத்தை அறிவிக்கும் தனது பதிவில் பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது. பிஎஸ்என்எல்-இன் படி, இந்த புதிய கட்டண ஒருங்கிணைப்பு, பயனர்கள் வெளிப்புற ஆப்களுக்கு திசை திருப்பப்படாமல், பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப்பிற்கு உள்ளேயே நேரடியாக ரீசார்ஜ் பரிவர்த்தனைகளை முடிக்க அனுமதிக்கிறது.
இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தடையற்ற மற்றும் வசதியான பேமெண்ட்டை உருவாக்க உதவும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது. மொபைல் ரீசார்ஜ்கள் மற்றும் கட்டணங்கள் செலுத்துதல் தொடர்பான ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதையும், அதே நேரத்தில் பணம் செலுத்தும் செயல்முறையை முழுவதுமாக பிஎஸ்என்எல் -இன் சொந்த ஆப் சூழலுக்குள்ளேயே வைத்திருப்பதையும் இந்த நடவடிக்கை நோக்கமாக கொண்டுள்ளது.
பீம் மற்றும் யுபிஐ உள்கட்டமைப்பு: பிஎஸ்என்எல் பே சேவையானது, பீம் உடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது மற்றும் பணம் செலுத்துவதற்காக யுபிஐ உள்கட்டமைப்பை பயன்படுத்துகிறது. தொடக்க விழாவின் போது பகிரப்பட்ட படங்களில், பிஎஸ்என்எல் பே உடன் என்பிசிஐ (NPCI) மற்றும் பேங்க் ஆஃப் பரோடா பிராண்டிங்கும் இடம்பெற்றிருந்தது.
இந்த தளம் ஆட்டோபே, யுபிஐ லைட் மற்றும் தொடர் ரீசார்ஜ் வசதிகள் போன்ற அம்சங்களை ஆதரிப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் கூறுகிறது. ப்ரீபெய்ட் திட்டங்களை தவறாமல் புதுப்பிக்கும் அல்லது மாதாந்திர கட்டணங்களை செலுத்தும் பயனர்களுக்கு, இந்த புதிய அம்சங்கள் தொடர் ரீசார்ஜ் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் கைமுறையாக ரீசார்ஜ் செய்யாமல், தடையற்ற சேவையை விரும்பும் பயனர்களுக்கு தொடர் ரீசார்ஜ் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆட்டோபே ஆதரவு, ஆப்பிற்கு உள்ளேயே ரீசார்ஜ் புதுப்பித்தல்களை தானியக்கமாக்க உதவக்கூடும். யுபிஐ லைட் ஆதரவு - மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும், ஏனெனில் இது குறைந்த மதிப்புள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்கவும், பணம் செலுத்தும் வசதியை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஆப் அனுபவத்தில் கவனம்: பாரம்பரியமாக, டெலிகாம் ஆப்கள் பணம் செலுத்தும் செயல்பாட்டின் போது பயனர்களை வெளிப்புற யுபிஐ ஆப்கள் அல்லது வங்கி ஆப்களுக்கு திருப்பிவிடும். பிஎஸ்என்எல் பே ஆனது பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப்பிற்கு உள்ளேயே நேரடியாக நேட்டிவ் பேமெண்ட் ஆதரவை செயல்படுத்துவதன் மூலம் அந்த செயல்முறையை மாற்றுகிறது.
டெலிகாம் ஆப்களை மேலும் ஒருங்கிணைந்ததாகவும், பயனர்களுக்கு உகந்ததாகவும் மாற்றுவதில் தொழில்துறையின் கவனம் அதிகரித்து வருவதை இந்த அணுகுமுறை பிரதிபலிக்கிறது. ரீசார்ஜ் தளங்களாக மட்டும் செயல்படுவதற்கு பதிலாக, தொலைத்தொடர்பு சுயசேவை ஆப்கள், அக்கவுண்ட் மேனேஜ்மென்ட், பணம் செலுத்துதல் மற்றும் ஆதரவு சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் நடைபெறும் என பயனர்கள் எதிர்பார்க்கும் டிஜிட்டல் தளங்களாக அதிகளவில் மாறி வருகின்றன. இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வசதியை மேம்படுத்தவும், சிரமங்களை குறைக்கவும் முயற்சிப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications